
அம்மா! பெரியம்மா பொண்ணு, யார் கூடவோ காதல்னு ஏதோ பேசினீங்களே! என்னது?
தங்களது ஏழு வயசு மகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மௌனமாக இருந்தார்கள் அம்மாவும், அப்பாவும். ஒவ்வொரு நாளும், இப்படி எத்தனையோ கேள்விகள். கூடவே படுக்கும் குழந்தைகள் மனதில் சஞ்சலம்.
குழந்தை தூங்கிவிட்டதென எண்ணி பெற்றோர்கள் ஏதேதோ பேசுவதை, தூங்காமல் கண்ணை மூடியிருக்கும் குழந்தை கேட்கத்தான் செய்கிறது. இதற்கு தீர்வு?
குழந்தைகளுக்குத் தனியறை.
வயசு ஏழுதானே ஆறது. கூடவே படுக்க வெச்சா என்ன?
ஐயோ பாவம்! பயப்படாதோ?
குழந்தையை தனியறையிலா தூங்க வைக்கறாங்க?இவ்வாறு பலர் வம்பு பேசுவது வழக்கம்.
பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை 5 - 6 வயதாகையிலேயே, தனியறையில் தூங்க வைக்கின்றனர். இது குறித்துதான் மேலே இருக்கும் விமரிசனங்கள். காரணம், பெற்றோர்களுக்குத்தான் தெரியும்.
தாயின் கருப்பையிலிருந்து வெளிவரும் குழந்தை, தாயின் அருகாமையில் இருக்கும். தாயின் வாசனை, மற்றும் தொடுதல் மூலமாக தாயை அறிந்து, அவளின் அணைப்பில் பாதுகாப்பாக உறங்கும். அவளைச்சற்றே காணவில்லையென்றால் அழும். ஒரு சில குழந்தைகள், கட்டை விரலைச் சப்பிக்கொண்டும், புறங்கையை நக்கியவாறும் தூங்கும். இதன் மூலம், தாய்ப்பாலை அருந்துவது போன்றதொரு உணர்வு ஏற்படும்.
வேலைக்குச்செல்லும் அநேக பெற்றோர்கள் இரவு நேரத்தில், தங்களின் நடுவில் குழந்தையைப் படுக்க வைத்துக்கொண்டு தூங்குவது வழக்கம். சிலர், கைக்கெட்டும் தூரத்தில் தொட்டிலில் அல்லது தனிப்படுக்கையில் படுக்க வைப்பார்கள். குழந்தை அழுகையில், "கண்ணுல்ல! செல்லமில்ல! அழக்கூடாது. நான் பக்கத்துலதான் இருக்கேன்" எனக் குரல் கொடுக்கையில் குழந்தை சமாதானமாகும்.
ஆனால் 5 - 6 வயசுக்கு மேல் குழந்தைகளைத் தனியறையில் படுக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
மனவளர்ச்சியும், முதிர்ச்சியும், பக்குவமும் குழந்தை களுக்கு வரவேண்டுமெனில், குறிப்பிட்ட வயதிற்கு மேல், அவர்களைத் தனியாக படுக்கவைக்க பக்குவப் படுத்துவதோடு, இடையிடையே அவர்களை கண்காணிப்பதுவும் அவசியம்.
மேலும், பெற்றோர்களுடன் படுக்கையில், குழந்தைகள் அவர்கள் பேசுவதைக்கேட்டு, தங்களது சொந்த மூளையை உபயோகிக்கத் தவறுவதற்கு வாய்ப்பு அதிகமுள்ளது. சில நேரங்களில் சரியா? தப்பா? என்று தெரியாமல், தன்னையறியாமலேயே கேட்ட விஷயங்களை மற்றவர்களிடம் உளறிவிட வாய்ப்பும் உள்ளது.
நல்லவை- கெட்டவைகளை அவ்வப்போது தெளிவாக, அதே நேரம் அன்புடன் விளக்குவது முக்கியம். எதற்கெடுத்தாலும் சந்தேகப்படாமல், நண்பர்களிடம் பழகுவதுபோல் அவர்களுடன் பழகினால், குழந்தைகள் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். மேலும், தேவையான அறிவுரைகளைக் கூற, நல்ல வாய்ப்பாக அமையும்.
அதே சமயம், இரவு நேரத்தில் திகில் கதைகளைக் கூறுவது, அவர்களுடன் சேர்ந்து பயங்கரமான படங்களை டீவியில் காண்பது போன்றவைகளை அறவே தவிர்க்கவேண்டும்.
அம்மா-அப்பா கோண்டுவாக குழந்தைகளை மாற்றிவிடாமல், சுயமாக சிந்தித்து செயல்பட அவர்களை உருவாக்குவது பெற்றோர்களின் கடமையாகும். அதில் ஒன்றுதான் தனியறை.
என்ன சரிதானே!