மனிதனின் அன்றாட வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாத உணர்வுகளில் இசையும் ஒன்று. ஒரு பாடலைக் கேட்டவுடன் நம் மனதை முதலில் தொடுவது இசை, அடுத்ததாக பாடுபவரின் குரல் வளம். மக்களால் விரும்பப்படுகின்ற பல்வேறு பாடகர்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து, தனித்துவமான குரல் வளத்தால் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் பாடகி சொர்ணலதா.
மாறிவரும் சூழலுக்கு ஏற்ப இன்றைய இளம் தலைமுறையினர் இவருடைய பாடல்களை முழுமையாக கேட்காவிட்டாலும் YouTube, Instagram போன்ற சமூக வலைதளங்கள் மூலம் இவரது குரல் வளத்தை முழுமையாக ரசித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களை அதிகமாக ஆக்கிரமித்து இருக்கும் ஐந்து பாடல்களில் ஒரு பாடல் சொர்ணலதாவின் பாடல் என்று சொன்னால் அதை எவராலும் மறுக்க முடியாது.
நடிப்புக் கலையில் நவரசங்களை காட்டுவதைப் போல தன் குரல் வளத்தாலும் ஒவ்வொரு பாடலையும் பிரித்துக் காட்டி மிக அருமையாக வேறுபாடுகளை வெளிப்படுத்தி இருப்பார் இந்த ஹம்மிங் குயின். காதல், அழுகை, சோகம், கொண்டாட்டம், துள்ளல், நட்பு என பாடல்களில் இவர் தொட்டுச் செல்லாத உணர்ச்சிகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அத்தனை உணர்வுகளும் தன் பாடல்கள் மூலம் அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார்.
முதன்முதலாக நீதிக்கு தண்டனை என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற சின்னஞ்சிறு கிளியே என்ற பாடல் மூலம் 14 வயதில் தொடங்கிய இவரது இசை பயணம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், உருது என பல்வேறு மொழிகளையும் தாண்டி 7000 பாடல்களை கடந்து சாதனை படைத்தது. மெல்லிசை மன்னர் எம்எஸ்வி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடகி சொர்ணலதா தன்னை அறிமுகம் செய்த குருவைப் போலவே தன்னுடைய குரல் வளத்தால் ரசிகர்களின் நெஞ்சத்தை கொள்ளை கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
உன்ன 'நெனச்சேன் பாட்டு படிச்சேன்' என்ற படத்தில் இடம் பெற்ற 'என்னை தொட்டு அள்ளி கொண்ட மன்னன் பேரும் யென்னடி' என்ற பாடல் இன்றளவும் ரசிகர்களின் எவர்கிரீன் பாடலாக உள்ளது என்று சொன்னால் அதை மறுக்க முடியாது. இளையராஜா இசையில் மட்டும் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட படங்களில் சொர்ணலதா பாடியுள்ளார். சத்ரியன் படத்தில் இடம் பெற்ற 'மாலையில் யாரோ' என்ற பாடல் மூலம் இன்றளவும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார். 'கும்மி பாட்டு' என்ற படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களையும் சொர்ணலதாவே பாடியுள்ளார் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
இறக்கைகள் இல்லாமலே வானத்தில் பறப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய சின்னத்தம்பி படத்தில் இடம் பெற்ற 'போவோமா ஊர்கோலம்' என்ற பாடல் ரசிகர்களிடையே இன்றளவும் விரும்பி கேட்கப்பட்டு வருகிறது. 80 காலகட்டங்களில் வெளியான 'என் ராசாவின் மனசிலே' என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற 'குயில் பாட்டு வந்ததென்ன' என்ற பாடலும் மிகவும் ரசனைக்குரிய ஒரு பாடல்.
இளையராஜா இசையில் அதிகமாக பாடியதைப் போல அதற்கு அடுத்து இசைத் துறையில் பிரபலமாக வலம் வந்த ஏ.ஆர் ரகுமான் போன்ற பிரபலமான இசையமைப்பாளர்களின் இசையிலும் சொர்ணலதா பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். 'காதலர் தின'த்தில் இடம் பெற்ற 'காதல் எனும் தேர்வு எழுதி' என்ற பாடல் இன்றும் காதலர் தினத்தின் மையப் பொருளாக விளங்குகிறது என்றால் அதற்கு இந்த ஸ்வரங்களின் அரசியின் குரலும் ஒரு முக்கிய காரணம். 'தளபதி' படத்திலிருந்து 'ராக்கம்மா கையத்தட்டு' என்ற பாடல், 'கேப்டன் பிரபாகரன்' படத்தில் இடம்பெற்ற 'ஆட்டமா தேரோட்டமா' என்ற பாடல் இன்றளவும் ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஏ.ஆர் ரகுமான் கூட்டணியில் இடம் பெற்ற 'போறாளே பொன்னுத்தாயி' என்ற 'கருத்தம்மா' பட பாடலுக்கு இவருக்கு தேசிய விருது கிடைத்தது என்பது மிகவும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.
காதலின் பிரிவை ஆழமாக வெளிப்படுத்திய 'அலைபாயுதே' என்ற படத்தில் இடம் பெற்ற 'எவனோ ஒருவன் வாசிக்கிறான்' என்ற பாடல் மூலம் இந்த ஹம்மிங் குயின் இன்றளவும் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். 'வள்ளி' படத்தில் இடம்பெற்ற 'என்னுள்ளே என்னுள்ளே' என்ற பாடல் மூலம் தனது ஹம்மிங் இசையை மிக அருமையாக வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் ஹம்மிங் குயின் என்ற பட்டத்தை நிரந்தரமாக சூடிக் கொண்டார் பாடகி ஸ்வர்ணலதா.
80களில் தொடங்கிய இசைப் பயணம் கிட்டத்தட்ட 2008 ஆம் ஆண்டு வரை நீடித்தது. 2008 ஆம் ஆண்டு வெளியான பீமா திரைப்படத்தில் இடம் பெற்ற 'ரங்கு ரங்கம்மா' என்ற பாடல் தான் சொர்ணலதா பாடிய கடைசி பாடல் ஆகும். பொதுவாக ஒவ்வொருவருக்கும் தனித்துவமான குரல் வளம் இருப்பதைப் போல, இத்தகைய பாடல்களுக்கு இவர்கள் தான் பொருத்தமாக இருப்பார்கள் என்று ஒரு எல்லைக்குள் வரையறை செய்திருப்பார்கள். ஆனால் பாடகி சொர்ணலதாவை மட்டும் அப்படி எந்த ஒரு எல்லைக்குள்ளும் அடைத்து வைத்து விட முடியாது. காதல் பாடல்களில் எந்த அளவுக்கு தன்னுடைய மெல்லிய குரல் வளத்தால் மெருகேற்றினாரோ அதே அளவுக்கு கொண்டாட்டப் பாடல்களிலும் தன்னுடைய குரல் வளத்தால் ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருப்பார். அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட துள்ளல் இசை பாடல்கள் தான் 'ஊட்டி மலை பியூட்டி', 'அள்ளி அள்ளி அனார்கலி', 'மாயா மச்சிந்திரா' போன்ற பாடல்கள்.
'சுந்தரா ட்ராவல்ஸ்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற 'அடடா ஊர் குளத்தில் தாமரை பூ ஆட கண்டேன்' என்ற பாடல் திரைப்படத்தில் இடம் பெற்று இருக்காது. ஆனாலும் சொர்ணலதாவின் குரல் வளத்தால் இந்த பாடல் முழுமையாக ரசிகர்களை சென்றடைந்தது. அதைப் போல 'சின்னதாயி' படத்தில் இடம் பெற்ற 'நான் ஏரிக்கரை மேலிருந்து', 'அமைதிப்படை'யில் இடம் பெற்ற 'சொல்லிவிடு வெள்ளி நிலவே' போன்ற பாடல்கள் எல்லாம் அன்றைய காலகட்டங்களில் ரசிகர்களால் அதிகமாக கொண்டாடி தீர்க்கப்பட்ட பாடல்கள். ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட பல்வேறு பாடல்களை பாடிய இந்த ஸ்வர்ணங்களின் அரசி இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் தனது பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.