தமிழ்த் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த நடிகர்களில் நாகேஷ் முக்கியமானவர்! கதாநாயகனாகவும், சிரிப்பு நடிகனாகவும், சுமார் 1000 படங்களுக்கும் மேலாக நடித்து அசத்தியவர்!
சர்வர் சுந்தரமாக அவர் டபரா செட்டுகளுடன் நடக்கும் நடை இன்றைக்கும் கண் முன்னால் பசுமையாக வலம் வருகிறது!
நீர்க்குமிழியில் ஆடி அடங்கும் வாழ்க்கையடா பாடலையும், அவரின் நடிப்பையும் அசைபோடாத உள்ளங்கள் இருக்க முடியாது!
திருவிளையாடலில் தருமியாக அவர் தனியாகப் புலம்புவதையும், சிவாஜியிடம் கேள்வி கேட்பதையும் எப்படி மறக்க முடியும்?
இப்படிப் பலவற்றையும் சொல்லிக் கொண்டே போகலாம்!
திருவிளையாடலில் தருமிப் புலவராக சிவபெருமானான நடிகர் திலகத்திடம் நிமிர்ந்து, நிமிர்ந்து கேள்வி கேட்டு முதுகை வளைத்துச் சரியும் அவர், சேரன் பாண்டியனில் விஜயகுமாரிடம் முன் பக்கமாகக் குனிந்து, பணிந்து நிற்பதையும், பின் அவருக்கே குழி தோண்டுவதையும் அருமையாகச் சித்தரிப்பார்!
தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தியாக வந்து கலக்கியவர் வசந்த மாளிகையிலும் ஏறக்குறைய அதே பணியில் சோபிப்பார்!
அபூர்வச் சகோதரர்களில் வில்லத்தனம் செய்து வியப்பை ஏற்படுத்திய அவர், தொடர்ந்து உலக நாயகன் படங்களில் ஒன்றி தசாவதாரம் வரை தொடர்ந்தார்!
திரு. மணியன் அவர்களின் நாடகமான 'டாக்டர் நிர்மலா'வில் 'தை தண்டபாணி' என்ற கதாபாத்திரத்தில் 'தை...தை' என்று குதிக்கும் நோயாளியாக நடிக்க, 'Thai Nagesh' என்று ஆங்கிலப் பத்திரிகை எழுத, அதனை மொழி பெயர்த்த ஒரு புண்ணியவான் 'தாய் நாகேஷ்’ என்று மொழி பெயர்க்க, அதுவே நிலைத்து, ஆரம்ப காலங்களில் தாய் நாகேஷ் என்றே அழைக்கப்பட்டாராம்!
'தாமரைக்குளம்' திரைப்படத்தில் முதலில் நடித்தாலும், ஶ்ரீதரின் 'காதலிக்க நேரமில்லை' படமே கை கொடுத்து உயர்த்தியதாம்!
சிரிப்பு நடிகராக அறிமுகமாக வந்த இவர் குணசித்திர நடிகராகவும், கதாநாயகராகவும், வில்லனாகவும் நடித்துத் தமிழக சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்தவர்!
டான்சிலும் அசத்திய இவர், ஆச்சி மனோரமாவுடன் சேர்ந்து அதிகப் படங்களில் நடித்து ரசிகர்களை விலா வலிக்கச் செய்தவர்!
பலமொழிப் படங்களிலும் நடித்தாலும் தன் பங்கைக் கச்சிதமாகச் செய்து பெயர் வாங்கிய அசகாயசூரர்!
நடிகர் திலகம், மக்கள் திலகம் ஆகிய இருவருடனும், பல படங்களில் இணைந்து நடித்தவர்! அவர் புகழின் உச்சியில் இருந்த நேரத்தில், வானொலிப் பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்கப் பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலில் இருந்தே அவரின் தெளிந்த சிந்தனையை நாம் அறிந்து கொள்ளலாம்!
கேள்வி இதுதான்:
"நியாயமாக உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?"
அவரின் ஆழ்ந்த பதிலைப் பாருங்கள்:
"அதற்காக நான் கவலைப்பட மாட்டேன் சார்! கட்டடம் கட்டும்போது, ஒவ்வொரு நிலையிலும் பயன் படுத்தப்படுகின்ற சவுக்கு மரத்தை, வேலை முடிந்ததும் அவிழ்த்துக் கொண்டு போய் ஓரத்தில் மறைவாகப் போட்டுவிட்டு, கிரகப் பிரவேசத்தன்று, எங்கோ வளர்ந்த வாழை மரத்தை வெட்டி வந்து கட்டி, சிறப்பையெல்லாம் அதற்குக் கொடுப்பார்கள்! அந்த மரம் இரண்டு, மூன்று நாட்களில் ஆடு, மாடுகளிடம் கடிபட்டு, சிறுவர்களிடம் சிதைபட்டு, இறுதியாக குப்பைத் தொட்டிக்குச் சென்று விடும்! மீண்டும் புதுக் கட்டிடத்திற்கு அஸ்திவாரம் போட்டதும், ஓரத்தில் போட்ட சவுக்கு மரத்தைத் தேடித்தான் செல்வார்கள்! நான் வாழை மரமல்ல! சவுக்கு மரம் சார்!"
அவரின் புகழுக்கும், சிறப்புக்கும் இப்பொழுது காரணம் புரிகிறதல்லவா?!
உயர்ந்தவர்கள் உயர்ந்தவர்கள்தான்! சவுக்கு மரத்தைப்போல!