கைக்குத்தல் என்பது நெல்லை மர உரல் அல்லது கல் உரலில் மர உலக் கையால் குத்தி புடைத்து எடுக்கப்படும் அரிசியாகும். இந்த கைக்குத்தல் அரிசியில் நெல்லின் மேலோட்டமான உமி மட்டும் நீக்கப்பட்டு உட்புற அடுக்கான தவிடு நீக்கப்படாமல் இருக்கும். எனவே. இது சற்று பழுப்பு நிறத்துடன் காணப் படும் அரிசியாகும். இந்த வழியில் அரிசியில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் அரிசி எண்ணெய் ஆகியவை சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது.
ஊட்டச்சத்துக்கள்: கைக்குத்தல் அரிசி ஊட்டச்சத்து மிக்க உணவுகளில் ஒன்றாகும். கைக்குத்தல் அரிசியில் 23 வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, மூளை வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் 'பி' குடும்பத்தைச் சார்ந்த சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. கைக்குத்தல் அரிசியில் மேலோட்டமான உமி மட்டும் அகற்றப் படுவதால் அதன் ஊட்டச்சத்துக்கள் அரிசியிலேயே தக்க வைக்கப்படுகின்றன. இதில் சுமார் 8 சதவீதம் புரதம் மற்றும் சிறிய அளவு கொழுப்புகள் உள்ளன. இதில் தியாமின், நியாசின், ரிபோஃப்ளோவின், இரும்பு மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்களும் உள்ளன.
கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நன்கு மென்று சாப்பிட வேண்டும். இந்த அரிசி சாதத்தைப் பொறுத்த வரை குறைந்த அளவே சாப்பிட முடியும். ஆலைகளில் தீட்டப்பட்ட அரிசி சாதத்தில் பாதி அளவுக்கும் குறைவான அளவு உணவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடும். இதனால்தான் அந்தக் காலத்து கிராமத்து ஆட்கள் நோய் நொடி இல்லாமல் நலமுடன் வாழ்ந்தனர். வைட்டமின் 'பி6', மெக்னீசியம் போன்ற சத்துக்கள் பாதுகாப்பாக இருப்பதால் இது அன்றாட ஆரோக்கியமான உணவாக இருந்தது. இதனால் பசியும், மலச்சிக்கலும் தவிர்க்கப்பட்டன.
கைக்குத்தல் அரிசி உமி: கைக்குத்தல் அரிசியின் உமியில் 38 சதவீதம் செல்லுலோஸ் மற்றும் 32 சதவீதம் லிக்னின் அடங்கி உள்ளது. இது ஒரு மாற்று எரிபொருளாகவும் உள்ளது. ஓர் ஆண்டு முழுவதும் பெறப்படும் 80 மில்லியன் டன் உமியில் 170 மில்லியன் பீப்பாய் எண்ணெய் தயாரிக்கப் பயன்படுகிறது. அரிசி உமியில் 22 சதவீதம் சாம்பலும், 95 சதவீதம் சிலிக்காவும் உள்ளன. அதிக அளவு சிலிக்கா உராய்வு பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. அதிக அளவு உமி இந்தியாவில் எரிபொருளாக கொதிகலன்களிலும், வீட்டுத் தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது.
கைக்குத்தல் அரிசி தவிடு: அரிசி தவிடானது மிகுந்த மதிப்பு வாய்ந்த துணைப் பொருளாகும். அதிக நிலைப்பு தன்மை வாய்ந்த கொழுப்பு நீக்கப்படாத தவிடானது, கொழுப்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் மற்றும் உதவிகரமான வேதிப்பொருட்களைக் கொண்டது. தவிட்டில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் காரணமாக கோழி மற்றும் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது. இந்தத் தவிட்டில் இருந்து அந்தக் காலத்தில் ரொட்டி தயாரிப்பார்கள். இதனால் சீக்கிரம் பசி எடுக்காது.
ஆலைகளில் தீட்டப்படும் அரிசி: இது இப்போது பயன்பாட்டில் உள்ளது. இது பதப்படுத்தப்படும் விதம் அதன் ஊட்டச்சத்து தன்மையை பாதிக்கிறது. இயந்திரத்தில் தீட்டப்படும் நெல்லில் இருந்து நார்ச்சத்து நிறைந்த உமி நீக்கப்படுவதால் அரிசியில் நார்ச்சத்து நீங்குகிறது. இந்த அரிசி எளிதில் செரித்து இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. ஆலைகளில் தீட்டப்பட்ட நெல்லினால் உடலில் அதிக கால்சியம் சேராது. இதனால் நாளடைவில் எலும்புகள் பலவீனம் அடைவதோடு இதயத்தை பாதிக்கும் அபாயமும் உள்ளது. இன்று பயன்படுத்தப்படும் எந்திர முறைகள் அதிக மணல், எரிசக்தி மற்றும் வேதிப் பொருட்களைக் கொண்டு இருக்கின்றன. ஆனால், கைக்குத்தல் அரிசி முறையில் இயற்கை சத்துக்கள் பாதிக்கப்படுவதில்லை.