புது வருட காலண்டர்கள் உருவாவதற்கு ஆதி வடிவம் கொடுத்தவர்கள் எகிப்தியர்கள். தற்போதைய காலண்டரை உருவாக்கியவர் 13ம் போப் கிரிகோரி என்பவராவார். 1682ம் ஆண்டு அந்த காலண்டரை அவர் உருவாக்கினார். முதல் காலண்டரை கி.மு. 700ம் ஆண்டில் ரோம் நகரை உருவாக்கிய ரோமுலஸ் அரசரால் உருவாக்கப்பட்டது. ரோமானிய மொழியில் காலண்டர் என்றால் ‘மாதத்தின் முதல் நாள்’ என்று பொருள். உலகில் பலர் புத்தாண்டு அன்று சபதம் ஏற்பது வழக்கம். பாபிலோனிய மக்கள் தாங்கள் வாங்கியிருக்கும் விவசாயக் கருவிகளைத் திருப்பித் தருவது, என்பதுதான் உலகின் முதல் புத்தாண்டு சபதம்.
ரஷ்ய காலண்டரில் செப்டம்பர் 1ந் தேதிதான் புத்தாண்டு என்பதை ஜனவரி 1ந் தேதி என்று மாற்றியவர் ரஷ்ய மன்னர் பீட்டர் தி கிரேட். 1699ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி இதை மாற்றி அமைத்தார். ஆனால், அங்கு ஜனவரி 1ந் தேதியிலும் மற்றும் ஜனவரி 14ம் தேதியிலும் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள்.
2019ம் ஆண்டு புத்தாண்டு பிறந்த ஜனவரி முதல் தேதியில் இந்தியாவில் 69,944 குழந்தைகள் பிறந்தன. இது ஓர் உலக சாதனையாகக் கருதப்படுகிறது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் கூட அன்று 44,940 குழந்தைகள்தான் பிறந்தனவாம்.
ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க்ஸ் நகரிலுள்ள பால்மோரல் ஹோட்டல் மேலே உள்ளது ‘தி டர்ரட் கடிகாரம்.' இது எப்போதும் 3 நிமிடங்கள் வேகமாக ஓடும்படி அமைக்கப்பட்டுள்ளது.1942ம் ஆண்டிலிருந்து இது தொடர்கிறது. காரணம் இந்த ஹோட்டல் அருகில் உள்ள வேர்லி ரயில்வே ஸ்டேஷன் வரும் பயணிகள் தங்களது ரயில்களை தவற விடக்கூடாது என்பதற்காக. ஆனால், வருடத்தில் ஒரு நாள் மட்டும் இந்தக் கடிகாரம் மிகச் சரியான நேரம் காட்டும். அது புத்தாண்டு பிறக்கும் அந்த நள்ளிரவில்தான்.
அமெரிக்காவின் சொர்க்கபுரி நெவடா மாகாணத்தின் லாஸ்வேகாஸ் நகரம். தூங்கா நகரமான இங்கு 24 மணி நேரமும் நாள் தோறும் கேளிக்கைகளும், சூதாட்டமும் இடைவிடாது நடக்கும். ஆனால், புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் மட்டும் ஒருசில விநாடிகள் இது நிறுத்தி வைக்கப்படும்.
கோஸ்டாரிகா நாட்டில் ஓவ்வொரு ஆண்டின் முடிவிலும் ஏராளமான மக்கள் கலந்து கொள்ளும் குதிரைகள் ஊர்வலம் நடைபெறும். இதனை, குதிரையேறி புத்தாண்டில் காலடி எடுத்து வைப்பதாகக் கருதி செய்கிறார்கள். இப்படி குதிரையேறினால் அந்த ஆண்டு முழுவதும் நன்மையே நடக்கும் என்ற நம்பிக்கை அந்நாட்டு மக்களிடம் உள்ளது.
திபெத்திய காலண்டரில் 13 என்ற தேதி இடம் பெற்றிருக்காது. 13 என்ற எண்ணை துரதிர்ஷ்டம் தருமென்பதால் 12, 14, 14, 15 என்றே அமைதிருக்கும். கொரியாவில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜனவரி மாதம் முதல் மூன்று நாட்கள் விடுமுறை கொடுக்கப்படுகிறது.
பெரு நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முடிந்த பிறகு ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எல்லாம் ஒன்று கூடுகிறார்கள். அதில் பெண்கள் அங்கிருக்கும் யாரையும் சண்டைக்கு அழைத்து கைகளால் மோதிக்கொள்ளலாம். இதன் மூலம் சண்டை, சச்சரவுகளை மறந்து அடுத்த ஆண்டில் அடியெடுத்து வைக்க முடியும் என்று பெரு நாட்டில் நம்புகிறார்கள்.
ஜப்பான் நாட்டில் புத்தாண்டு பிறக்கும்போது இரவு 12 மணிக்கு ஜப்பானியர்களின் ஆலயங்களில் 108 முறை மணியடிப்பர். இது மனிதனுக்கு 108 கவலைகள் உள்ளன என்று புத்த மதத்தினர் நம்புவதன் காரணமாக அப்படி செய்யப்படுகிறது. ஜப்பானியர்கள் புது வருடத்தன்று வீட்டைப் பெருக்க மாட்டார்கள். அப்படி பெருக்குவது அதிர்ஷ்டத்தை வெளியேற்றிவிடும் என்று நம்புகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெரும்பாலும் மக்கள் தங்களது பிறந்த நாளை ஜனவரி முதல் தேதியில்தான் கொண்டாடுகிறார்கள். காரணம் அவர்களுக்கு அவர்களின் பிறந்த நாள் தெரியாதாம்.
ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31ம் தேதி மீன் சாப்பிட்டால் அடுத்து வரும் புத்தாண்டு அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக இருக்கும் என்பது ஜெர்மனி நாட்டவர்களின் நம்பிக்கை. எஸ்டோனியா நாட்டில் புத்தாண்டு அன்று 7 முறை சாப்பிட்டால் அந்த ஆண்டு முழுவதும் சாப்பாட்டிற்கு கஷ்டம் வராது என்று நம்புகிறார்கள்.
1862ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி ஆபிரகாம் லிங்கன் கறுப்பர்களுக்கு சுதந்திரம் அளித்தார். 1913ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில்தான் உலகிலேயே முதன் முதலாக அமெரிக்காவில் பார்சல்களை தபாலில் அனுப்பும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.