மதகஜராஜா படத்தின் வெற்றி விழாவில் சுந்தர் சி பேசியது ரசிகர்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
சுந்தர் சி என்றால் அரண்மனை படம்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். ஆனால், அன்பே சிவம் முதல் கலகலப்பு வரை ரசிகர்களின் பேராதரவை பெற்ற படங்களை கொடுத்தவரும் சுந்தர் சிதான். ஆனால், ஏனோ விமர்சன ரீதியாக வெற்றிபெற்ற இந்தப் படங்கள் வசூல் ரீதியாக தோல்வியே அடைந்தது. இது ரசிகர்களுக்கே ஒரு குழப்பமாக இருக்கும் பட்சத்தில் சமீபத்தில் வெளியான மத கஜ ராஜா படம் பெரிய ஹிட் கொடுத்து தமிழக மக்கள் மனதில் மீண்டும் சுந்தர் சியை ஞாபகப்படுத்தியிருக்கிறது.
அந்தவகையில், 2012ம் ஆண்டே மத கஜ ராஜா படத்தை வெளியிடுவதற்காக சுந்தர் சி வேக வேகமாக படத்தை எடுத்து முடித்தார். ஆனால், சில பல காரணங்களால் வெளியாகவில்லை. இந்தப் படத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தில் விஷால் பாடிய ஒரு பாடல் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்த படம் திடீரென்று பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்தவகையில் இந்தப் படத்திற்கான வெற்றி விழா இன்று நடைபெற்றது. இதில் சுந்தர் சி பேசியதைப் பார்ப்போம். “கமெர்ஷியல் படம், பெரிய வெற்றியடையும், மக்கள் ரசிப்பார்கள், படத்துக்கும் நல்ல கூட்டம் வரும். இருந்தாலும்கூட எனக்குள் ஓர் உணர்வு இருக்கும்.
ஏனெனில் இதற்கு பெரிய பாராட்டுகள் இருக்காது. நல்ல இயக்குநர்கள் எனப் பட்டியலிட்டால், இவ்வளவு ஹிட் கொடுத்தும் அதில் என் பெயர் இருக்காது. அன்பே சிவம் வேறொரு மாறுபட்ட படம்.
என்னைப் பொறுத்தவரை சினிமா என்பது பெரிய வணிகம். லட்சக்கணக்கானவர்களை உள்ளடக்கிய, அவர்களுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய ஒரு வணிகம் அது. மிகப் பெரிய பொழுதுபோக்கு சாதனம். அதுமட்டுமில்லாமல் கோடிக்கணக்கான மக்கள் நம்மை நம்பி காசு கொடுத்து மூன்று மணி நேரம் கவலைகளை மறந்து இருக்க வருகிறார்கள். அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்பது என்னுடையப் பெரிய ஆசை.
என்னதான் கமெர்ஷியல் பட இயக்குநர் என்ற அடையாளம் இருந்தாலும், கடவுள் அருள் மற்றும் மக்கள் ஆதரவு மூலம் 30 வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு ஹிட் கொடுத்தாலும், அதற்குரிய ஒரு நிலை எனக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் மனதில் இருக்கும். என் கடன் பணி செய்து கிடைப்பதே… என்பதுதான் என்னுடையக் கொள்கை." என்று பேசினார்.