சென்னையில் நடைபெற்று வரும் 22வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பா.ரஞ்சித் பேசியிருக்கிறார். அப்போது விஜயகாந்த் குறித்தும் பேசியிருக்கிறார்.
பா.ரஞ்சித் 2012ம் ஆண்டு அட்டக்கத்தி என்றப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தினேஷ் வைத்து இயக்கிய இப்படம், ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. அதன்பின்னர் இவர் கார்த்திக் நடிப்பில் மெட்ராஸ், ரஜினியின் கபாலி, காலா, ஆர்யா நடித்த சர்பாட்டா பரம்பரை போன்ற படங்களை இயக்கினார்.
மெட்ராஸ் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், கபாலி மற்றும் காலா ஆகிய படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒரளவுதான் விமர்சன ரீதியாக வெற்றிபெற்றது. ஆனால், சிலருக்கு இப்போதும் அந்தப் படங்கள் பிடித்த படங்களாகவே உள்ளன. அதன்பின்னர், ரஞ்சித் இயக்கிய அனைத்து படங்களையும் பின்னுக்குத் தள்ளி, சர்பாட்டா பரம்பரை அனைவரின் பேராதரவையும் அன்பையும் பெற்றது.
2022ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ சினிமா ரசிகர்களின் ஆதரவைப் பெற்றாலும், பொது ரசிகர்களை அவ்வளவாக ஈர்க்கவில்லை. இதனையடுத்து தங்கலான் படத்தை இயக்கினார். இந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை என்றாலும், இதுவும் சினிமா ரசிகர்களின் பேராதரவை பெற்றது.
அந்தவகையில் தற்போது நடைபெற்று வரும் 22வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், பா.ரஞ்சித் இயக்கிய தங்கலான் படம் திரையிடப்பட்டது.
அப்போது ரஞ்சித் பேசுகையில், “எனக்கு இன்றும் ஒரு விஷயம் ஞாபகம் இருக்கிறது. அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பள்ளியில் நடந்த விழா ஒன்றில் கலந்துக்கொண்டேன். ஆனால், என்னால் வசனத்தை சரியாக சொல்ல முடியவில்லை. இதனால், 'ஆட்டமா தேரோட்டமா' பாடலுக்கு என்னை நடனமாட வைத்தார்கள்.
நான் நன்றாக நடனமாடியதால், "ஒன்ஸ் மோர்" என்றனர். அதேபோல் நான் உயர்நிலை பள்ளியில் படிக்கும்போது கதை எழுத ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் விஜயகாந்த் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை வில்லனாகக் கற்பனை செய்துக் கூட கதைகள் எழுதியிருக்கிறேன்.” என்று பேசினார்.