Identity Movie Review
Identity Movie Review

விமர்சனம்: ஐடென்டிட்டி (Identity) - ஆக்ஷன் திரில்லர்க்கு சரியான அடையாளம்!

Published on
ரேட்டிங்(3.5 / 5)

இந்த புத்தாண்டின் முதல் திரை வெற்றியை தந்துள்ளது மலையாள சினிமா. சில நாட்களுக்கு முன் டெவினோ தாமஸ், த்ரிஷா, வினய் நடிப்பில் அகில் பால் மற்றும் அனஸ் கான் இயக்கத்தில் வெளிவந்துள்ள Identity என்ற மலையாள திரைப்படம் கேரளா மட்டுமில்லாமல் தென்னிந்தியா முழுவதும் ரசிக்கப்பட்டு வருகிறது.

அப்படி என்ன தான் இருக்கு இந்த படத்தில்?

சேட்டன்கள் வழக்கமாக புகுந்து விளையாடும் திரில்லர் களம் தான் படத்தின் ஒன் லைன்.

பெண்கள் ஆடைகளை அணிந்து பார்க்கும் ட்ரையல் ரூமில் ஒரு ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த கேமராவின் கண்களுக்கு ஒரு இளம் பெண் சிக்கி கொள்கிறார். அந்த பெண்ணை ஒருவன் பிளாக்மெயில் செய்கிறான். ஒரு சில நாட்கள் கழித்து அந்த பிளாக்மெயில் பேர்வழியை ஒரு இளைஞன் கொலை செய்து அனைத்து ஆதாரங்களையும் அழித்து விடுகிறான். இந்த கொலையை நேரில் பார்த்த திரிஷா ஒரு விபத்தில் சிக்கி தற்காலிக பார்வை இழப்பை சந்திக்கிறார். ஓவியரான டெவினோ தாமஸை காவல் துறை அழைத்து வந்து த்ரிஷா சொல்லும் கொலையாளியின் அங்க அடையாளங்களை வரைய சொல்கிறது. டெவினோவும் வரைகிறார். கடைசியில் டெவினோவின் உருவமே வந்து நிற்கிறது. இது என்ன புது ட்விஸ்ட்? என்று நாம் யோசிக்கும் போது, இந்த கதை இல்லாமல் வேறொரு கதையையும் படத்தில் வைத்திருக்கிறார்கள். கொலையாளியின் அடையாளத்தை தேடும் முயற்சியில் வெற்றி கிடைத்ததா என சொல்லும் முயற்சியே இந்த 'Identity'.

இதையும் படியுங்கள்:
உணர்வுகளால் அலைக்கழிக்கப்படும் இரு மனிதர்களின் மோதல் - 'கனகராஜ்யம்'!
Identity Movie Review

படத்தின் முதல் காட்சியான பிளாக்மெயில் செய்வது தொடங்கி இடைவேளை வரை காட்சிகள் விருவிருப்பாக இருக்கிறது. இடைவேளையில் அவசர அவசரமாக பாப்கானை வாங்கி கொண்டு வந்து இருக்கையில் அமரந்தால் படம் ஆக்ஷனை நோக்கி நகர்கிறது சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆக்ஷன் த்ரில்லர் இரண்டையும் ஒரே படத்தில் தருவது கடினம். இரண்டையும் மிக சிறப்பாக தந்திருக்கிறார்கள் அகில் பால் மற்றும் அனஸ் கான்.

கொலை செய்தது இவனா? அல்லது இவனா? என்ற டென்ஸனை படம் பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் ஏற்ப்படும் போது படத்தின் வெற்றி உறுதியாகி விடுகிறது.

ஹெலிகாப்டர் சண்டை காட்சியில் ஒளிப்பதிவாளரின் தனித்துவம் தெரிகிறது. ஜாக்ஸ் பிஜாயின் பின்னணி இசையில் காட்சிகள் மிரட்டலாக உள்ளது. டெவினோ தாமஸ் தென்னிந்தியாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறி வருகிறார். அளவான பேச்சு, ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு என திரையில் ஆளுமை செய்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின்பு த்ரிஷாவுக்கு திறமையை காட்டும் படமாக வந்துள்ளது Identity. தனது இத்தனை வருட நடிப்பு அனுபவத்தை காட்சிகளில் கொண்டு வந்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: 'முரா' - ரத்தத்தால் எழுதப்பட்ட நான்கு நண்பர்களின் கதை!
Identity Movie Review

மாறுபட்ட கதைக்களம், சொல்லப்படும் விதத்தில் புதுமை, சரியான நடிகர்கள் தேர்வு என மலையாள சினிமா அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. புத்தாண்டில் முதல் வெற்றி படமாக வந்துள்ள 'Identity' தென்னிந்திய சினிமாவிற்கே ஒரு அடையாளமாக வந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com