
அமேசான் பிரைமில் வந்திருக்கும் 'கனகராஜ்யம்' -
நாம் பொதுவாக எந்தவிதமான உணர்வுகளும் காட்டாமல் கடந்து செல்லும் நபர்களில், கடைகளில் பணிபுரியும் செக்யூரிட்டிகளும் கண்டிப்பாக இருப்பார்கள். வங்கிகளின் வாசல்களில், கடைகளின் கதவோரத்தில், வெயில், மழை, பனி எதுவும் அவர்களுக்குக் கிடையாது. வருபவர்களுக்குச் சல்யூட். டிப்ஸ் கிடைத்தால் சந்தோசம். மாற்று உடைகளோ, குடைகளோ பெரும்பாலும் கிடைக்காது. காலை வந்தால் இரவுவரை... இரவு வந்தால் காலை வரை... இவர்கள் பணி தொடரும்.
ஒரு நகைக்கடையில் செக்யூரிட்டியாகப் பணிபுரிகிறார் இந்திரன்ஸ். நல்ல ஊழியர் என்று வருடம் தவறாமல் விருது வாங்கும் ஆள் அவர். பட்டாளத்தில் சேர வேண்டும் என்றே, சமையல் வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்று அங்குப் பணியாற்றித் திரும்பியவர்.
அவர் நகைக்கடை செக்யூரிட்டி பணியில் இருக்கும்பொழுது, அவரறியாமல் அந்தக் கடையில் ஒரு சிறு திருட்டு நடைபெறுகிறது. அவர் நல்ல குணம், கடையின் பெயர் கருதி கடைமுதலாளி கேஸ் (case) எதுவும் கொடுக்காமல் கமுக்கமாக இதை முடித்து விடுகிறார். தான் சிறைக்குச் சென்றாலும் பரவாயில்லை. கம்பளைண்ட் கொடுங்கள் என்று மன்றாடுகிறார் இந்திரன்ஸ். அதை மறுத்து இவரை வேலையை விட்டு மட்டும் அனுப்பி விடுகிறார் முதலாளி. அந்தக் கடையில் திருடியது யார் என்று தனக்குத் தெரிந்தவரை விசாரிக்க ஆரம்பிக்கிறார் அவர். யார் திருடியது? ஏன்? கடைசியில் என்ன ஆனது என்பது தான் கனகராஜ்யம்.
அமேசான் பிரைமில் வந்திருக்கும் இந்தப் படம் பக்கா மலையாளப்படம் என்று சொல்லும் வண்ணம் வந்திருக்கிறது. சண்டை கிடையாது. ஆடல் கிடையாது. குத்துப் பாட்டுக்கள் கிடையாது. ஒரு தெளிந்த நீரோடை போலச் செல்கிறது கதை. தனது மனைவி, செல்ல மகள், சைக்கிள், கடை இது மட்டுமே அவர் வாழ்க்கை. தனக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வரும் குடும்பம் தன்னை காவல் நிலையத்தில் பார்க்க நேர்ந்த கோலத்தை நினைத்துக் கலங்குவதாகட்டும், தன்னை அவமானப் படுத்தினாலும் பரவாயில்லை என்று அந்த இன்ஸ்பெக்டரிடம் சென்று மீண்டும் மீண்டும் வேண்டுவதாகட்டும், ஒரு நாயைக் கூட மகன்போல நினைத்துப் பாசமாகநடத்தி வருவது ஆகட்டும், இந்திரன்ஸ் மிக நிறைவு. முதலாலி நடவடிக்கை எடுக்காவிட்டாலும் மக்கள் பார்வையில் தான் தூங்கியதால் தான் இப்படியொரு நிலை. அது எவ்வளவு பெரிய தன்மானப் பிரச்சினை. அந்தப் பணம் திரும்பக் கிடைக்க வேண்டும். அல்லது எப்படியாவது தானே அதை அடைத்துவிடுவேன் என்று உறுதியாகத் தேட ஆரம்பிக்கிறார் இந்திரன்ஸ்.
ஊர் முழுக்க கடன். மாமியார் கொடுத்த பணத்தை எப்படித் திருப்பித் தருவது எனது தெரியாமல் ஒரு தவிப்பு. கடன் கொடுத்தவர்களின் ஒருவர் தனது மனைவியின் படத்தை வாட்சப்பில் பகிர்ந்து மோசடியாளர் என்று சொல்லப் பதறுவது. முரளி கோபி வேணு என்ற அந்தக் கேரக்டராகவே நிற்கிறார். மனைவியையும் மிரட்ட முடியாமல், மாமியாரிடமும் பயந்து கொண்டு அவர் நடவடிக்கைகள் பாவம் என்று சொல்ல வைக்கின்றன. வில்லனாகவோ இன்ஸ்பெக்டராகவோ பார்த்துப் பழகிய இவரின் இந்தப் பாத்திரம் புதிது. அதை உணர்ந்து அருமையாகச் செய்திருக்கிறார் முரளி கோபி. ஆட்டோ டிரைவர் தோத்தியாக வரும் அவரது நண்பர் ராஜேஷ் சர்மா நிறைவு. நண்பரின் மானத்தைக் காப்பாற்ற எந்த நிலைக்கும் இறங்கும் பாத்திரம் அவருக்கு.
"வீட்டில் மனைவியிடமிருந்து போன் வந்தால் எரிந்து விழ வேண்டாம். அன்பாகப் பதில் சொல்லிப் பாருங்கள். திரும்ப வரவே வராது" என்று இந்திரன்ஸ் சொல்ல "எந்த மோளே" என்று பதில் சொல்லிப் பார்க்கிறார் முரளி கோபி. பின்னர் ஒரு காட்சியில் அதையே அவர் மனைவி சொல்லச் சொல்ல அதன் அருமையை உணர்கிறார் அவர். காவல் நிலையத்தில் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் காட்சி ஒன்று இருக்கிறது. அப்பாவித் தனமும் குற்றவுணர்ச்சியும் இப்படித் தான் இருக்கும் என்றால் தாராளமாக நம்பலாம்.
ஒரு மிகச் சாதாரணமான கதை. சரியான நடிகர் தேர்வுகள். தேவையான அளவு இசையும், ஒளிப்பதிவும். இரு வேறு கோணங்களில் வாழ்க்கையை அணுகும் இரண்டு மனிதர்களைச் சந்திக்க வைத்து உணர்வுகளோடு விளையாடியிருக்கிறார் இயக்குனர் சாகர். அருண் முரளிதரனின் இசை படத்திற்கு இன்னொரு பலம். இவன் தான் குற்றவாளி என்று தெரிந்தும் அவன் குடும்ப நிலை காரணமாக இந்திரன்ஸ் எடுக்கும் முடிவு யதார்த்தம்.
செலவே இல்லாமல் அதிரடி திருப்பங்கள் எல்லாம் வைக்காமல் ஒரு கடை வாசல், இரண்டு வீடுகள். ஒரு ஆட்டோ. இதை மட்டும் வைத்துக் கூட ஒரு நிறைவான படம் எடுக்கலாம் என்று மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கும் ஒரு படம் தான் கனகராஜ்யம்.
குறிப்பிடத் தக்க இன்னொரு விஷயம் - இந்தப் படம் ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.