
நாடு விட்டு நாடு சென்றாலும் பிறந்த இடத்தின் பெருமையும் செய்த தொழிலும் தான் முக்கியம் என்று சொல்ல நினைக்கும் படம் தான் இட்லிக்கடை.
சங்கராபுரம் என்ற ஊரில் வசித்து வருபவர் (சிவநேசன்) ராஜ் கிரண். இவரது மனைவி சௌந்தரா கைலாசம். மகன் தனுஷ். இட்லிக் கடை நடத்தி வரும் ராஜ்கிரணுக்கு அது தான் உலகமே. அந்தக் கடைக்கு ஊர் முழுதும் நல்ல பெயர். ஆட்டுக்கல், அம்மி என்று இருக்கும் கடைக்குப் புத்துணர்ச்சி கொடுக்க நினைக்கிறார் தனுஷ். பழைமை மாறாமல் இருக்க வேண்டும் என்று ராஜ்கிரண் சொல்கிறார். கிராமத்தில் தன்னுடைய இளமையை வீணாக்க விரும்பவில்லை என்று வேலை தேடி சென்னைக்கு செல்கிறார் தனுஷ்.
அங்கிருந்து அப்படியே வளர்ந்து பாங்காக்கில் ஒரு பெரிய ஹோட்டலில் பணியாற்றுகிறார். அந்த ஹோட்டல் அதிபர் (சத்யராஜ்) மகளைக் (ஷாலினி பாண்டே) காதலித்து மணமுடிக்கக் காத்திருக்கிறார். சத்யராஜ் மகன் அருண் விஜய். அடிதடியென்று உருப்படாமல் ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார். தனுஷுடன் ஒப்பிட்டுப் பேசுவதால் அவர்மேல் கோபத்தில் இருக்கிறார். திருமணத்திற்கு முன் ஒரு தவிர்க்க இயலாத காரணமாகச் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் தனுஷுக்கு. பிறகு என்ன ஆனது. அந்த இட்லிக்கடையைத் தொடர்ந்து நடத்தினாரா என்பதெல்லாம் தான் கதை.
இது போன்ற பார்த்துச் சலித்த கதைக்குச் சுவாரசியமான திரைக்கதை இருந்தால் மட்டுமே படத்தோடு ஓட்ட முடியும். அந்த விஷயத்தில் இந்தப் படம் அரைக்கிணறு தாண்டியதோடு நின்றுவிட்டது. முதல் பாதி ராஜ்கிரண் தனுஷ் தொடர்பான காட்சிகள் இயல்பாக இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் படத்தின் அடுத்த காட்சி மட்டுமல்ல அடுத்த வசனங்களைக் கூட ஊகிக்க முடிகிறது. மொமெண்ட்ஸ் என்று சொல்வார்கள். ஒரு படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் பலமாகவும் இருக்க வேண்டும். ஆனால் அவை மட்டுமே படத்தின் வெற்றிக்கு உதவாது. அதுபோல இதிலும் நல்ல சில தருணங்கள் இருக்கின்றன. ஒரு கன்றுக்குட்டி தனுஷோடு ஒட்டி அதன் பின்னர் அவருக்குள் நடக்கும் மாற்றங்கள். நித்யா மேனனுக்கும் தனுஷுக்கும் இடையிலான காதல் பலப்படும் காட்சி. தனது குடும்பத்தைப் பற்றிய உண்மை தெரிந்து ஷாலினி பாண்டே கோபப்படும் காட்சி ஆகியவை.
கோபக்கார, கர்வம் பிடித்த இளைஞனாக அருண் விஜய். அவர் பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்தாலும் அவர் நடந்து கொள்ளும் விதம் குழந்தைத் தனமாக இருக்கிறது. அவரை வில்லனாக்குவதா வேண்டாமா என்பதில் ஒரு குழப்பம் இருந்திருக்க வேண்டும். கிளைமாக்சில் அவரது மனமாற்றம் சுத்தமாகப் பொருந்தவில்லை. இயல்பான நடிப்பில் அசத்தும் சத்யராஜ் இதில் நடிப்பது அப்பட்டமாகத் தெரியும் வண்ணம் நடித்திருக்கிறார். பல காட்சிகளில் அதை உணர முடிகிறது. தன்னுடைய பேச்சைக் கேட்காமல் நடக்கும் மகன் அருண் விஜயை அவர் கடைசியில் கண்டிக்கும்போது அப்பாடா இப்பொழுதாவது இவருக்குப் புத்தி வந்ததே என்று தான் தோன்றுகிறது.
நித்யா மேனன் வழக்கம்போல. தனுஷைப் போல இவருக்கும் இது போன்ற பாத்திரத்தங்கள் எல்லாம் தூக்கத்தில் நடித்து விட்டுப் போகும் அளவு தான் கனம். சமுத்திரக்கனி ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய படங்களில் வரும் கிராமத்து வில்லன்போல வந்து போகிறார் பாவம். சில காட்சிகளில் வந்தாலும் பார்த்திபன் தனது நடிப்பில் பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார்.
ஜி வி பிரகாஷ் இசையில் எஞ்சாமி பாடலும், என்ன சுகம் பாடலும் அருமை. அதுவும் அந்த எஞ்சாமி பாடலில் ஆட்டம், இசை, ஒளிப்பதிவு எல்லாம் அட்டகாசம். மாய யதார்த்தத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கருப்பண்ணசாமி, கழுகு, கன்றுக்குட்டியெனப் பலவிதமான குறியீடுகள்மூலம் கதையை நகர்த்துகிறார் இயக்குனர் தனுஷ்.
ஒரு படத்தின் நாயகனுக்கு வரும் பிரச்சினைகளுக்கு வீரியம் அதிகம் இருக்க வேண்டும். அப்பொழுது தான் அவன் வெல்லும்போது நமக்கும் அந்தத் திருப்தி இருக்கும். இதில் பிரச்னைகள் என்று வருவதெல்லாம் பிரச்னைகளே அல்ல. கிராமத்திலிருந்து பத்து ஆண்டுகள் சென்று இருப்பார் தனுஷ். அதற்காக அந்தக் கிராமத்துக்காரர் இல்லாமல் ஆகிவிடுவாரா என்ன. இதில் பாத்திரங்களின் மனமாற்றங்கள் சொடக்கு போடும் நேரத்தில் நிகழ்கின்றன. சமுத்திரக்கனி, சத்யராஜ், ஷாலினி, இளவரசு, எல்லாரும் அப்படித் தான். தனுஷுக்காக ஒரு கிராமமே ஒன்று கூடுவது எல்லாம் பார்க்க நன்றாக இருந்தாலும் அதில் யதார்த்தமே இல்லை. இட்லி மட்டுமே விற்கும் ஒரு சிறிய குடிசைக் கடை. அதைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள இந்தக் கதையில் உணர்வுப் பூர்வமான காட்சிகள் இன்னும் கொஞ்சம் இருந்திருக்க வேண்டும். அந்தக் கடைக்கு இவ்வளவு அடிதடியா என்றெல்லாம் பார்ப்பவர்களுக்குத் தோன்றாமல் இல்லை.
டீ ஏஜிங் என்ற ஒரு விஷயம் செய்யாமலேயே தனுஷ் என்ற நடிகர் சடார் சடாரென்று மாறுவது அவருக்குப் பொருந்தி வருகிறது. குடும்பத்துடன் பார்க்கும் ஒரு படம் எடுக்க வேண்டும். பார்ப்பவர்கள் நிறைவாகத் திரும்பச் செல்ல வேண்டும் என்று அவர் நினைத்ததெல்லாம் சரி. அதற்கான காட்சியமைப்புகளில் அவர் சற்று கவனம் செலுத்தியிருக்க வேண்டும். புதிய காட்சிகளோ நெஞ்சில் நிற்கும் வசனங்களோ இல்லாமல் எங்கோ பார்த்த மாதிரியே இருக்கிறதே என்று தோன்ற வைக்கும் இரண்டாம் பாதி தான் இதன் பலவீனம்.
ட்ரைலர் பார்த்தபிறகு அதை விட்டு வேறொரு காட்சி கூடப் புதிதாக இல்லை என்பது தான் சோகம். சாதாரண ரசிகர்களுக்கு வெட்டு, குத்து, ரத்தம் இல்லாமல் ஒரு படம் பார்த்தோம் என்ற திருப்தி மட்டுமே மிஞ்சுகிறது.
சென்னையைத் தாண்டிய நகரங்களில் இந்தப்படம் வரவேற்பைப் பெறும் வாய்ப்பு இருக்கிறது. சுமாரான படமா அல்லது குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியா என்பது வரும் நாள்களில் மட்டுமே தெரிய வரும்.