
தமிழ் சினிமாவின் மிகவும் பிசியான நடிகர்களில் ஒருவராக வலம் வருவபர் நடிகர் தனுஷ். இவர், தற்போது தென்னிந்திய நடிகர் என்பதை தாண்டி பான் இந்திய நடிகராக வளர்ந்து விட்டார். ஹாலிவுட் அளவுக்கு வளர்ந்த இவர், தமிழ், தெலுங்கு, இந்தி என மாறி மாறி வெவ்வேறு மொழி படங்களின் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி, பாடல்கள் எழுவது, பாடல்கள் பாடுவது, படத்திற்கு கதை-திரைக்கதை எழுதுவது, இயக்கம், தயாரிப்பு என்று சினிமாவின் பல துறைகளிலும் கால் பதித்து, அவை அனைத்திலும் அவரது வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.
கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய கலைப்பயணம் தற்போது ஹாலிவுட் வரை சென்றுள்ளது. இவரது நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான 'குபேரா' திரைப்படம் தமிழை விட தெலுங்கில் மிகப்பெரியளவில் வெற்றி பெற்றது.
‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தனுஷ், அவரது 50-வது படமான ‘ராயன்’ படத்தையும் அவரே இயக்கினார். அதனை தொடர்ந்து தனது சகோதரியின் மகனை வைத்து இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்றே சொல்ல வேண்டும்.
இந்நிலையில் தற்போது தனது 52-வது படமான ‘இட்லி கடை’ படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். டான் பிசர்ஸ் நிறுவனமும் தனுஷின் வுண்டர் பால் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க இவர்களுடன் இணைந்து, அருண் விஜய், சாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் முதலியோர் நடிக்கின்றனர்.
கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் சமையற் கலைஞர் நிபுணருக்கும், சமையல் தொழில் அதிபருக்கும் நடக்கும் மோதலே குடும்ப பின்னணியில் கதைக்களமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக தனுஷ் தன் தோற்றத்தை மாற்றியிருக்கிறார். மீசை தாடியை எடுத்துவிட்டு தனுஷ் மிகவும் இளமையான தோற்றத்தில் நடித்து வருகிறார்.
நாளை வெளியாகும் இந்த படத்தின் ப்ரீ புக்கிங்கில் மட்டும் இதுவரை 2.35 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆயுத பூஜை கொண்டாட்டமாக ரிலீசாக நாளை வெளியாக உள்ள தனுஷின் இட்லி கடை படத்திற்கு காந்தாரா கடும் சவாலாக மாறியுள்ளது. அதாவது, இட்லி கடை படம் நாளை வெளியாக உள்ள நிலையில் (அக்.1ம் தேதி), அந்த படத்திற்கு போட்டியாக ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா - சாப்டர் 1’ படம் நாளை மறுநாள் (அக்.2-ம்தேதி)வெளியாக உள்ளது. இந்த படத்தின் முதல் பாகமான 2022-ம் ஆண்டு வெளியான காந்தாரா படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இந்தியா முழுவதும் திரும்பி பார்க்க வைத்தது. அந்த வகையில் அக்டோபர் 2-ம்தேதி வெளியாக உள்ள காந்தாரா பாகம் 1 மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
ரூ.120 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் சங்ககாலத்தில் நடப்பது போல காந்தாரா பாகம் 1 படத்தின் கதைக்களம் உருவாகியுள்ள நிலையில், இந்த படம் கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் வெளியாக உள்ளது.
தமிழ்நாட்டிலும் தனுஷின் இட்லி கடை படத்தை காட்டிலும் கன்னடப்படமான காந்தாரா படத்தின் மீதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ளது.
அதேசமயம், தனுஷ் இயக்கிய ராயன், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படங்கள் தோல்விப்படங்களாக அமைந்ததால், இட்லி கடை படத்தை வெற்றிப்படமாக மாற்ற அவர் போராடி வருகிறார்.
ஆயுத பூஜை, விஜயதசமி பூஜையை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால் தற்போது படம் வெளியானால் நல்ல வசூல் குவிக்கும் என்பதை கருத்தில் கொண்டு இட்லி கடை படத்தை நாளை (அக்.1ம் தேதி) வெளியிடுகிறார் நடிகர் தனுஷ். அதேநேரம், நாளை மறுநாள் (அக்.2-ம்தேதி) பான் இந்தியா படமாக வெளியாகும் காந்தாரா படம் இட்லி கடை படத்திற்கு மிகப்பெரிய அளவில் போட்டியாக அமையும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
இட்லி கடை, காந்தாரா பாகம் 1 இடையே கடும் போட்டி நிலவுவதால், இட்லி கடையை காந்தாரா காணாமல் போகச் செய்யுமா? இல்ல, காந்தாராவை வீழ்த்தி இட்லி கடை வெற்றிகரமாக ஓடுமா? என்ற போட்டி இரு படங்களுக்கும் இடையே உருவாகி உள்ளதுடன் ரசிகர்கள் இடையே எந்த படத்தை முதலில் பார்க்கலாம் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது.
இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில், அடுத்து வரும் சில நாட்களில் இந்த இரு படங்களில் எந்த படம் ரசிகர்களை அதிகளவு கவர்ந்தது என்பது தெரியவரும்.