நடிகை சாய்பல்லவி தனது எக்ஸ் தளத்தில் ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது அவர் குறித்து மீண்டும் வதந்திகள் பரப்பினால் இதை நிச்சயம் செய்வேன் என்று கூறியிருக்கிறார்.
நடிகை சாய்பல்லவி ப்ரேமம் படத்தின்மூலம் தென்னிந்திய ரசிகர்களின் பேராதரவை பெற்றார். பின்னர் தென்னிந்திய சினிமாவில் நடிக்க அவருக்கு பல வாய்ப்புகள் வந்தன. தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகி ரசிகர்களின் அன்பை பெற்றார். மேலும் இன்றுவரை அதிகம் மேக்கப் போடாமலும், எந்த விழாக்களுக்கு சென்றாலும் புடவை அணிந்தும் தனது சிம்பிளிசிட்டியை வெளிப்படுத்தி வருகிறார். இந்தத் தனித்துவமே அவரின் ரசிகர்கள் பட்டாளத்திற்கு காரணமாயிற்று.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அமரன் படத்திற்கு பின்னால், இன்னும் பல படி முன்னேறி சென்றிருக்கிறார் என்றே கூற வேண்டும். ஒட்டுமொத்த இந்தியர்களின் அன்பைப் பெற்றுவிட்டார்.
இதற்கிடையே இவர் பான் இந்திய படமான ராமாயணம் படத்திலும் நடித்து வருகிறார்.
இதனால் புகழின் உச்சத்தில் இருக்கும் சாய் பல்லவியின் மேல் வதந்திகளும் பரவி வருகின்றன. இதனால் அவர் இந்த வதந்திகள் குறித்து வாய்த் திறந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, “வதந்திகள் மற்றும் பொய்களைக் கவனித்தபோதெல்லாம் நான் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தேன். உண்மை எது என்பதை கடவுள் அறிவார். ஆனால், இந்த வதந்திகள் தொடர்ந்து பரவுவது வேதனையானது. எனவே, இப்போது எதிர்வினையாற்றும் நேரம் வந்துவிட்டது. குறிப்பாக, எனது படங்கள் வெளியீட்டுக்கு முன்பும், முக்கிய அறிவிப்புகளின் போதும் இத்தகைய தகவல்கள் பரவுகின்றன.
அடுத்த முறையிலிருந்து, இத்தகைய வதந்திகள் மீண்டும் ஏற்பட்டால், நான் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் நடிகைகள் தொடர்ந்து பல வதந்திகளை சந்தித்து வருகிறார்கள். சமூக வலைதளங்கள் இல்லாத அந்த காலத்திலேயே இதுபோன்ற வதந்திகள் வரும். ஆனால், அதற்கு ஒரு கட்டுபாடு என்பது இருந்தது. ஆனால், சமூக வலைதளங்கள் பயன்படுத்தும் அத்தனை பேரும் தங்களுக்கு தோன்றும் அனைத்தையும் பதிவிடுகின்றனர். இதனால், தினம் தினம் பல வதந்திகளை நடிகை நடிகர்கள் சந்திக்க வேண்டியதாக உள்ளது.
இதனை சிலர் கண்டுக்கொள்வது கிடையாது. மேலும் சிலர் இதற்கு தக்க பதிலடி கொடுத்துக்கொண்டேதான் இருக்கின்றனர்.