
நான் பல ஜோஸ்யர்களிடம் கேட்டு பல தொழில்கள் பார்த்தும் நஷ்டங்களையே சந்திக்கிறேன். என் ஜாதகத்தில் ஏதாவது கோளாறு இருக்குமோ? என்று பலர் எண்ணுவதுண்டு. ஒருவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு டாக்சி வாங்கி ஓட்டலாம் என்று யோசனை கூறினார். அவர்கள் பணத்தைத் திரட்டி ஒரு கார் வாங்கினர். அதற்கு டாக்சிக்குரிய. மஞ்சள் கருப்பு வண்ணம் அடித்தார்கள். டாக்சியை ரயில்வே ஸ்டேஷன் வாசலில் நிறுத்தி விட்டுக் காத்திருந்தார்கள். எந்த பயணியும் இவர்கள் டாக்சி பக்கம் வரவில்லை. "ரயிலில் வருபவர்கள் கஞ்சப்பயல்கள். ஏர்போர்ட்டில் சவாரி கிடைக்கும் என்று அங்கு சென்றார்கள். அங்கும் சவாரி கிடைக்கவில்லை. பெரிய கடைகளின் முன் நிறுத்த அங்கும் சவாரி வரவே இல்லை. அங்கே இங்கே அலைந்ததில் பெட்ரோலுக்குப் பணம்தான் தண்ணீராய் செலவழிந்தது. கடைசியில் ஒரு கிளி ஜோசியரிடம் போய் வண்டியை நிறுத்தி தங்கள் பிரச்னைகளைச் சொன்னார்கள். கூண்டுக்குள் இருந்த கிளி சிரித்தது.
"அட, முட்டாள்களே எப்போதும் வண்டியில் மூன்று பேர்கள் உட்கார்ந்திருக்கும்போது எந்த வாடிக்கையாளர் வருவான்?. இதற்குப் போய் இங்கு வருகிறீர்களே" என்றது. எந்தத் தொழில் செய்தாலும் அதை எல்லா கோணங்களிலும் கவனித்து, தொழிலின் நுணுக்கங்களைக் புரிந்து கொள்ளவேண்டும். அதை விட்டு வெறும் ஜோசியம் பார்த்தால் எப்படி வெற்றி கிடைக்கும். அப்படியே கிடைத்தாலும் அது தற்செயலாகத்தான் இருக்குமே தவிர, உங்கள் திறமையால் பெற்றதாக இருக்காது.
நீச்சல் தெரியாமல் தண்ணீரில் குதித்தால்,எப்போதாவது ஒருமுறை தற்செயலாக நீங்கள் தப்பிக்கலாம். ஆனால் அதை உங்கள் நட்சத்திர பலன் என்று கருதி மறுபடி முயற்சி செய்தால் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. திறமையில்லாமல், வேறு காரணங்களால் மேலே வந்தவர்கள், அந்த நிலை எப்போது பறிபோகுமோ என்ற அச்சத்தில்தான் வாழவேண்டியிருக்கும். வெளியில் காலடி வைக்கக்கூட நட்சத்திரம் பார்க்கத் தோன்றும். திறமையினால் மேலே வந்தவர்களுக்கு இந்த அச்சம் கிடையாது. சறுக்கல் ஏற்பட்டால் கூட அவர்களால் எப்படி நிமிர்ந்து நிற்பது என்பது தெரியும்.
யாரோ சொல்வதைத் கேட்டு நீங்கள் தொழில் செய்தால் அது நிரந்தர வெற்றியைத்தராது.
ஒரு ஹோமியோபதி மருத்துவர் எல்லாவித பாம்புகளின் விஷத்தை முறிக்க வல்ல மருந்து கிடைக்கும் என்று விளம்பரம் செய்திருந்தார். கட்டுவிரியன் போன்ற பாம்புகள் கடித்தால் உறுப்புகள் செயலிழக்கும் உயிர்போகும். நல்ல பாம்பு போன்றவை கடித்தால் ரத்த ஓட்டம் இதயத்துடிப்பு இவற்றை நிறுத்தும். இரண்டிற்கும் ஒரே மருந்து எப்படி செயல்படும் என்று பாம்புகளைப் பற்றி நன்கு அறிந்தவர் அவரிடம் கேட்க அவர் சிரித்துக்கொண்டே " இந்தியாவில் நூறில் தொண்ணூறு சதவீத பாம்புகளுக்கு விஷமே இல்லை. அந்தப் பாம்புகள் கடித்திருந்தால் இந்த மருந்து பிரச்னையில்லாமல் வேலை செய்துவிடும். 90 சதவீதம் பேர்கள் பிழைத்து விடுவார்கள். மிச்சமிருக்கும் பத்து சதவீதம்தானே தப்பாக வாய்ப்பு இருக்கிறது. அப்படிப் பார்த்தால் வெற்றிச் சதவீதம் தொண்ணூறுதானே" என்றாராம்.
இப்படி 90 சதவீதம் வெற்றி போதும் என்று நினைப்பவரா நீங்கள்?. நீங்கள் கவனிக்காத மிச்சமுள்ள பத்து சதவிகிதத்தில்தானே உண்மையான வாழ்க்கையே இருக்கிறது. அந்த பத்து சதவிகிதத்தை நீங்கள் விரும்பியபடி நடத்திக் கொள்வதற்குத்தான் உண்மையான திறமை வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு அடியையும் ஒரு நோக்கத்துடன் எடுத்து வையுங்கள். இதையெல்லாம் செய்யாமல் நட்சத்திரங்கள் வெற்றியைக் கொண்டு வந்து தந்திடும் என்று நம்புவது முட்டாள்தனம். திறமையைப் பயன்படுத்துங்கள். சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு அதற்குத் தக்கவாறு விழிப்புணர்வுடன் செயலாற்றினால் எல்லா நட்சத்திரங்களும்
உங்களுக்குச் சாதகமாக வேலை செய்யத் துவங்கிவிடும்.