
இசையின் மீதான கவனத்தால் என் பிள்ளைகளை கவனிக்காமல் விட்டுவிட்டேன் என்று இளையராஜா வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் செல்ல மகளான பவதாரணி கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த வருடம் திடீரென மரணமடைந்தார். இவரின் மரண செய்தியால் திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. தந்தையான இளையராஜா, மகளின் இறப்பை தாங்கமுடியாமல் நொடிந்து போனார் என்றே சொல்லலாம்.
அவர் மறைந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, இளையராஜா ஆடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ பதிவில் இளையராஜா உருக்கமாக, "பவதாரிணி எங்களை விட்டுப் பிரிந்த பின்பு தான், அந்தக் குழந்தை எவ்வளவு அன்பு மயமாக இருந்திருக்கிறார்கள் என்பது எனக்கு புரிந்தது.
காரணம், என்னுடைய கவனம் எல்லாம் இசையிலேயே இருந்ததால் என்னுடைய குழந்தைகளை நான் கவனிக்காமல் விட்டுவிட்டது எனக்கு இப்போது வேதனையை தருகிறது. இந்த வேதனை தான் மக்களை ஆறுதல்படுத்தும் இசையாக இருக்கிறது என்று நினைக்கும்போது கொஞ்சம் என் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது என கூறியுள்ளார்.
மேலும், பவதாரிணி பிறந்த நாளான பிப்ரவரி 12-ம் தேதி அவளுடைய திதி வருகிறது. அந்த இரண்டையும் சேர்த்து நினைவு நாள் நிகழ்ச்சியாக வைக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது. அதில் அனைத்து இசைக் கலைஞர்களும் பங்கெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனது மகள் பவதாரிணி ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்” என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.
இசையால் உலக அளவில் பிரபலமடைந்த இளையராஜாவின் இந்த ஆடியோ, ரசிகர்களைக் கண்கலங்க வைத்துள்ளது. உண்மையில், யுவன் சங்கர் ராஜா பிறந்தபோது, ரஜினி நடித்த ஜானி படத்துக்கான இசையமைப்புக்காக பொள்ளாச்சியில் உள்ள விடுதியில் தங்கியிருந்ததாகவும், அப்போது, மகன் பிறந்த செய்தி தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக ஒரு நேர்காணலில் இளையராஜா கூறியிருந்தார்.