
இந்திய கிரிக்கெட் அணி சமீப காலமாக சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மூத்த வீரர்கள் சரியாக விளையாடாததே இதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய தேர்வுக் குழு, வீரர்களை சரியாக தேர்வு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுகின்றன. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியும், இந்திய அணிக்குத் தேர்வாக முடியவில்லையே என்ற விரக்தியில் தவிப்பவர்கள் ஏராளம். தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதால், இந்திய அணியில் இனியாவது தேர்வு முறையில் மாற்றம் இருக்குமா என்று அலசுகிறது இந்தப் பதிவு.
டி20 உலகக்கோப்பையை வென்றது தான், கடந்த ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்பட்டது. அதற்குப் பின் புதிய தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற கவுதம் கம்பீரின் கீழ், இந்திய அணி படுமோசமான தோல்விகளையே சந்தித்து வருகிறது. இதற்கு வீரர்களை மட்டும் குறை கூறி என்ன பயன். தேர்வு முறை சரியாக இருந்திருந்தால், இந்தியாவின் இந்த சரிவைத் தடுத்திருக்கலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தொடர் தோல்விகளைச் சந்தித்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பையும் இழந்தது இந்தியா.
நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்தியா vs ஆஸ்திரேலியா என்று சொல்வதைக் காட்டிலும், பும்ரா vs ஆஸ்திரேலியா என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில், இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிதாக ரன் குவிக்காத நிலையில், பும்ரா மட்டும் தான் ஆஸ்திரேலிய பேட்டர்களை நிலைகுலையச் செய்தார். இவருக்கு மற்ற பௌலர்கள் தகுந்த நேரத்தில் தோள் கொடுத்திருந்தால், இந்தியாவின் வெற்றி உறுதியாகி இருக்கும். அதேசமயம் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் கேஎல் ராகுல் தவிர வேறு யாரும் சொல்லிக் கொள்ளும்படி செயல்படவில்லை.
இளம் வீரர்கள் ஒருசிலருக்கு வாய்ப்பு கிடைத்தாலும், வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்னும் பல வீரர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இப்படியான சூழலில் ஸ்டார் வீரர்களையே தொடர்ந்து தேர்வு செய்வது, முன்னாள் வீரர்களை எரிச்சலடையச் செய்கிறது. ஃபார்மில் இல்லாத போதும் தொடர் வாய்ப்புகளைக் கொடுப்பதற்கு பதிலாக, புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கலாமே என்பது தான் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி? தரமான புதிய பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தருணத்தில் இந்தியா உள்ளது.
ஐபிஎல் போட்டிகள், வீரர்கள் எடுக்கின்ற ரன்கள் மற்றும் வீழ்த்தும் விக்கெட்டுகளை வைத்து மட்டுமே அணித்தேர்வை மேற்கொள்வது மிகவும் தவறான நடைமுறையாகும். சூழ்நிலைக்கேற்ப விளையாடும் வீரர்கள் தான் இந்திய அணிக்குத் தேவை. மேலும் உள்ளூர் மைதானங்களில் மட்டும் சிறப்பாக விளையாடும் வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் போதும், பிசிசிஐ கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு வீரர் தனிப்பட்ட சாதனைகளைத் தவிர்த்து, அணியின் வெற்றிக்கு எப்படி கைக்கொடுப்பார்; சூழலுக்கு ஏற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா என்பதை தேர்வுக்குழு பரிசீலிக்க வேண்டும். சுழல் மற்றும் வேகத்திற்கு ஏற்ற ஆடுகளங்களை கணித்து விளையாடும் திறன் வீரர்களுக்கு அவசியம். பவுலர்களைப் பொறுத்தவரையில், புதிய மற்றும் பழைய பந்துகளில் எப்படி பந்து வீசுவார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.
இந்திய அணிக்கு பேட்ஸ்மேன்களை விடவும் பும்ரா மாதிரி தரமான பௌலர்கள் அவசியம் தேவை. இந்த இடத்தில் தான் நாம் முகமது ஷமியைத் தவற விட்டுள்ளோம். அவர் மட்டும் இருந்திருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பும்ராவுக்கு பக்கபலமாக இருந்திருப்பார். பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கத் தவறினாலும், பௌலர்கள் எதிரணியைக் கட்டுப்படுத்தினால் வெற்றியை தன்வசமாக்கலாம். அவ்வகையில், இனியாவது இந்திய அணியின் தேர்வு முறையில் மாற்றம் வருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.