
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். சமீபகாலமாக நடிகர் விஷால் உடல் நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்து வரும் நிலையில் அவரை பற்றிய வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தனக்கு பெண் பார்த்து விட்டதாகவும், இன்னும் 4 மாதங்களில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறி அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் நடிகர் விஷால்.
இவர் கடந்த 2004ம் ஆண்டு வெளியான ‘செல்லமே‘ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படம் விஷாலின் திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்ததுடன் அதனை தொடர்ந்து வெளிவந்த சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, அவன் இவன் ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்று அவருக்கு திரையுலகில் நிலையான இடத்தை பிடித்துகொடுத்தது என்றே சொல்லலாம்.
நடிப்பதற்கு முன் இவர் நடிகர் அர்ஜுனிடம், வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணி புரிந்துள்ளார். இவர் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். நடிகர் என்பதை தாண்டி தயாரிப்பாளராக கலக்கிய விஷால் துப்பறிவாளன் 2ம் பாகத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார்.
சமீபத்தில் ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நடிகர் விஷால் தள்ளாடியபடி வந்தது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது. இது குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் அதற்கு தன்னிலை விளக்கமும் அளித்தார். தொடர்ந்து பல்வேறு வதந்திகள் வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் குடிப்பழக்கத்தை கைவிட்டு 2 ஆண்டுகள் கடந்துவிட்டதாகவும், சிகரெட்டை கைவிட்டு 5 ஆண்டுகள் கடந்துவிட்டதாக நடிகர் விஷால் கூறியுள்ளார். பார்ட்டிக்கு கூட செல்வதில்லை என்று கூறியுள்ள விஷால், நல்ல உடல்நிலையோடு மீண்டு வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கும் விஷால் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று முன்பே அறிவித்திருந்தார். 9 ஆண்டுகளாக பல்வேறு தடைகளை தாண்டி தற்போது நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்தநிலையில் தனக்கு பெண் பார்த்துவிட்டதாகவும், பேசி முடித்துவிட்டதாகவும் கூறி விஷால் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்து நடிகர் விஷால் கூறியதை பார்க்கலாம்.
வரும் ஆகஸ்டு 15-ந்தேதி நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க திட்டம் வகுத்துள்ளோம். அனேகமாக ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் எனக்கு திருமணம் நடப்பது உறுதி. என் பிறந்தநாளான ஆகஸ்டு 29-ந்தேதி கூட எனக்கு திருமணம் நடைபெறலாம். கட்டடம் திறந்த அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் தான் என கூறியுள்ளார். எப்படி பார்த்தாலும் இன்னும் 4 மாதத்தில் எனக்கு திருமணம் நடக்கும் என்று கூறிய அவர் தனது திருமண தேதியை யாரும் சொல்லாமல் ரகசியமாக வைத்துள்ளார்.
இது காதல் திருமணம் என்றும், தான் அந்த பெண்ணை ஒருமாதமாகத்தான் காதலித்து வருகிறேன் என்றும், அவர் யார்? அவர் பெயர் என்ன? என்பதை நேரம் வரும்போது சொல்வதாகவும் கூறியுள்ளார்.
47 வயதாகும் விஷால் நீண்ட காலம் முரட்டு சிங்கிளாக வலம் வந்த நிலையில், தற்போது திருமண பந்தத்தில் இணைய உள்ளதால் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.