வாரா வாரம் வெள்ளிக்கிழமைகளில் புதுப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும். கடந்த வாரம் வெளியான படங்கள் சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில், இன்று வெளியாகும் படங்களுக்கு மக்களிடையே வரவேற்பு இருக்குமா என்ற கவலையில் தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் உள்ளனர். கடந்த மே 1-ம்தேதி தொழிலாளர் தினம் அன்று சசிக்குமார்-சிம்ரன் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் மட்டுமே தற்போது வரை தயாரிப்பாளருக்கும், திரையரங்க உரிமையாளருக்கும் கையை கடிக்கமால்லாபத்தை கொடுத்துள்ளதாகக் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’, யோகிபாபுவின் ஸ்கூல், விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் உள்ளிட்ட 9 படங்கள் வெளியாக இருந்தது. இந்நிலையில் படைத்தலைவன் திரைப்படம் இன்று (மே23) திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சண்முக பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.
இன்றைய ரேஸில் படைத்தலைவன் பின்வாங்கி உள்ளதால் 8 படங்கள் மட்டுமே வெளியாக உள்ளன. இந்த 8 படங்களை பற்றிய சிறிய தொகுப்பை இங்கே பார்க்கலாம்...
இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இன்று வெளியாகும் படம் ‘ஏஸ்’. இந்த படம் விஜய் சேதுபதிக்கு 51-வது படமாகும். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் நடிக்க இவர்களுடன் யோகி பாபு, பப்புலு, கேஜிஎப் அவினாஷ், திவ்யா பிள்ளை, முத்துக்குமார், ராஜ் குமார், டெனெஸ் குமார், ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர், ஜாஸ்பர் சுபயா, கார்த்திக் ஜே, நகுலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் கன்னட நடிகை ருக்மினி வசந்த் தமிழுக்கு அறிமுகமாகி இருக்கிறார். கிரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் பாடல்களுக்கு இசையமைக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் பின்னணி இசையமைத்துள்ளார். சூதாட்டத்தை மைய கதையாக கொண்டு உருவாகியிருக்கும் ‘ஏஸ்’ திரைப்படத்தில் எக்கச்சக்கமான ஆக்ஷன் , காமெடி , த்ரில்லை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று இயக்குனர் கூறியுள்ளார்.
Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் ஆர். கே. வித்யாதரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘ஸ்கூல்.’ இந்த படத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான யோகிபாபு, பூமிகா, பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் நிழல்கள் ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்கூல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளது இந்த படத்திற்கு மேலும் சிறப்பை சேர்த்துள்ளது. இந்த படத்திற்கு ஆதித்யா கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங்கை ராகவ் அர்ஸ் செய்துள்ளார்.
இயக்குநர் அனு ராஜ் மனோகர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நரி வேட்டை' எனும் திரைப்படத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரும், பான் இந்திய நட்சத்திர நடிகருமான டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமூடு, சேரன், பிரியம்வதா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் கொண்ட டோவினோ தாமஸுக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். இந்த படத்தில் மூலம் சேரன் மலையாள படஉலகில் அறிமுகமாகி உள்ளார். இந்தியன் சினிமா கம்பனி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் திப்புசான் - சியாஸ் ஹாசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு விஜய் ஒளிப்பதி, ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படம் இன்று (மே 23-ம்தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.
பிரபு சாலமன் எழுதி இயக்கி 2010-ம் ஆண்டு வெளியான ‘மைனா’ படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த சேது, ‘மையல்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக சம்ரிதி தாரா நடிக்க, இவர்களுடன் பி.எல்.தேனப்பன், சூப்பர் குட் சுப்பிரமணி, ரத்னகலா, சி.எம்.பாலா ஆகியோரும் நடித்துள்ளனர். ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஜெயமோகன் எழுதியுள்ளார். ஏபிஜி ஏழுமலை இயக்கியுள்ள இந்த படத்திற்கு அமர் இசையமைத்திருக்கிறார்.
சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே. சங்கர் இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில், அட்டகாசமான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ‘அகமொழி விழிகள்’. இந்த படத்தில் நாயகனாக தம்ஹசன் நடிக்க அவருக்கு ஜோடியாக நேஹா ரத்னாகரன் நடிக்க இவர்களுடன், தர்மஜன், நவேதயா ஷாஜூ, குலப்புலி லீலா, ராஜீவ் கண்ணன் , சி.கே.ஆர், ஹரிதா, ராஷீ, தீபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஒளிப்பதிவை ஜஸ்பால் சண்முகம், ராஜேஷ், செல்வகுமார் ஆகியோர் செய்ய, எஸ்.பி. வெங்கடேஷ் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் தர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதிரன் சுரேஷ் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்க, இவருடன் வின்சென்ட், சி.ஆர்.ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் நிவாஸ் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவை லியோ வெ.ராஜ் செய்ய சாந்தன் அன்பழகன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சாரா கலைக்கூடம் சார்பில் அனிதா லியோ – லியோ வெ.ராஜா படத்தினை தயாரித்திருக்கிறார்கள். பெண் கதாபாத்திரங்களே இடம்பெறாத முழுக்க முழுக்க ஆண் கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்திருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்.
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தை வி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெ.விஜயன் மற்றும் கே.எம்.ஆர் தயாரித்துள்ளது. ஜெயகாந்தன் ரெங்கசாமி எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் அறிமுக நடிகர்கள் கே.எம்.ஆர், விஜயன், சரவணன், ரஞ்சன் ஆகியோர் நாயகர்களாக நடிக்க, தர்ஷினி, திருக்குறளி, இந்து, சுபிக்ஷா நாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் பிரியராஜா, ‘அருவா சண்ட’ பட நாயகன் இசக்கி ராஜா நடித்திருக்கிறார். ஜெ.கதிர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு அரக்கோணம் யுவா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சிறப்பு அம்சமாக ரூ.15 லட்சம் பட்ஜெட்டில் 10 நாட்களில் இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜஸ்டின் பிரபு வி இயக்கத்தில் உருவாகியிருக்கும் வேம்பு திரைப்படத்தல் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஷீலா ராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மஞ்சள் சினிமாஸின் கீழ் கோல்டன் ஷூர்ஸ் மற்றும் விஜயலக்ஷ்மி தயாரித்துள்ள இந்த படத்திற்கு மணிகண்டன் முரளி இசையமைக்க, ஏ.குமரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பல விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கிராமப்புற பின்னணியில் அமைக்கப்பட்ட இந்தப்படம், தற்காப்புக் கலைகளில் ஆழ்ந்த ஆர்வம் கொண்ட ஒரு துணிச்சலான இளம் பெண்ணின் எழுச்சியூட்டும் கதையைச் சொல்கிறது.