
திரைப்படத் துறை இருக்கிறதே அது பல வியப்புகளைத் தன்னுள்ளே அடக்கியுள்ளது!
இத்துறைக்குள் புகுந்த ஏதுமில்லாத பலர் ஏகபோகமாக உயர்ந்ததும் உண்டு.
ஏற்றத்தில் வாழ்ந்த பலர் இத்துறையால் எதுவுமில்லாமல் போனதும் உண்டு.
மக்களை மகிழ்விக்கப் படம் எடுத்த பலர் தங்கள் வாழ்வின் மகிழ்ச்சியை இங்கு தொலைத் ததுமுண்டு.
பிழைக்க வழி தேடி ஓடி வந்து, வாழ்வின் உயரங்களைத் தொட்டவர்களும் உண்டு!
அது நடிகரும், இயக்குனருமான மணிவண்ணன் வெகு பிசியாக இருந்த நேரம்.
பேராவூரணியிலிருந்து வந்த அகத்தியன், தன் கதைகளுடன் வாய்ப்புகள் தேடி, பெரிய இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் சிரமப்பட்டு மீட் செய்ய முயற்சிகள் எடுத்து வருகிறார். ஒரு நாள் மணிவண்ணன் அவர்களைச் சந்தித்துத் தன் கதையொன்றைக் கொடுக்கிறார்.
இந்த நேரத்தில் அகத்தியன் அவர்களின் தந்தை ஊரில் இறந்து விட, இறுதிச் சடங்கு செய்யக் கூட வசதியில்லாத சூழ்நிலை! அஞ்சு, பத்துக்குக்கூட அல்லாடும் நேரம்! எங்கு செல்வது? யாரிடம் கேட்பது? என்று எதுவுமே புரியாமல், நண்பர்கள் கொடுத்த 100, 200 ரூபாய்களுடன் ஊருக்குச் சென்று தந்தையை அடக்கம் செய்து விட்டு வந்து விடுகிறார்.
இரண்டு வாரங்கள் எளிதாக நகர்ந்து விட, தந்தைக்குக் காரியம் செய்யவேண்டிய 16 வது நாளும் நெருங்குகிறது. ஏற்கெனவே நண்பர்கள் உதவி விட்டார்கள். அவர்களை மேலும் தொந்தரவு செய்யக் கூடாது. ஆனாலும் காரியம் நடந்தாக வேண்டுமே!
இந்த உலகின் ஒவ்வொரு நிகழ்வும் பணத்தை அடிப்படையாகக் கொண்டுதானே உள்ளது! அது இல்லாமல் அணுவையும் அசைக்க முடியாதே. பணத்திற்காகச் சிலவற்றைத் தள்ளிப் போட முடியாதே. எவ்வளவோ யோசித்தும் ஒரு நல்வழியும் தோன்றாததால் திடீரென ஓர் எண்ணம் உதயமாகிறது.
நேராக மணிவண்ணன் சார் வீட்டிற்குச் செல்கிறார்.
”சார்!உங்களிடம் நான் கொடுத்த படக்கதையை, நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். இனி அது உங்கள் கதை! நான் உரிமை கொண்டாட மாட்டேன். அதற்காக எனக்கு ரூ.1500/- கொடுங்கள். என் தந்தையாரின் காரியங்களைச் செய்ய வேண்டியுள்ளது!” என்கிறார்.
“இதோ வருகிறேன்!” என்று உள்ளே சென்ற மணிவண்ணன் கையில் 1,500 ரூபாயுடன் வந்து, அவரிடம் கொடுத்து விட்டுச் சொல்கிறார். "இனி யார்கிட்டயும் போய் இந்தக்கதையை விலை பேசாதே. யார் கண்டது? இந்தக் கதையே உன்னைப் பெரிய உயரத்திற்குக் கொண்டு செல்லவும் வாய்ப்புண்டு. இந்தத் துறை நம் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது. இங்கு எல்லா ஆச்சரியங்களும் அரங்கேறும். பொறுமையாக முன்னேறப் பார்!”
'காதல் கோட்டை' வெளியாகி பெரும் பணத்தையும், புகழையும், விருதுகளையும் அள்ளிக் கொண்டு வந்து அடுக்க, அகத்தியன் இயக்குனராக, கதாசிரியராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக ஆகி,பல படங்களை எடுக்கிறார். சில விருகளையும் பெறுகிறார். நிறையப் படங்களில் மணிவண்ணனும் நடிக்கிறார்.
ஒரு நாள் சற்று ஓய்வாக இருக்கையில் மணிவண்ணன் அகத்தியனிடம் சொல்கிறார்;
“இது வரை உங்கள் ஏழெட்டு படங்களில் நடித்து விட்டேன். இது வரை நீங்கள் கொடுத்த பணம் 75 லட்சம். அன்று நான் கொடுத்த ரூ.1500 க்கு ஈடாக எனக்குப் பலமடங்காகத் திருப்பித் தந்திருக்கிறீர்கள். இதுதான் இந்தத் துறையின் வினோதம்!”
இதிலிருந்து நமக்குத் தெரிவது இதுதான்! நன்றியுணர்வு எல்லோரையும் எப்பொழுதும் வாழ வைக்கும்!