

18 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு 21/8/2026 ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே மொத்த பட்ஜெட்டில் ஆறில் ஒரு பங்கை அதாவது 3 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்த படம் இது.
Insidious :The red door(2023) படத்தின் தொடர்ச்சிதான் இது. அந்தப்படம் பார்க்கா விட்டாலும் இந்தப்படம் புரியும். இன்சிடியஸ் சீரிசில் இது ஆறாவது படம். முதல் 5 பாகங்கள் பார்த்து விட்டு ஆறாம் பாகம் பார்த்தால் நன்கு கனெக்ட் ஆகும். அட்லீஸ்ட் 2023ஆம் ஆண்டில் வெளியான இன்சிடியஸ் த ரெட் டோர் படத்தையாவது பார்த்து விட்டு இந்தப்படம் பார்த்தால் எமோஷனல் கனெக்ட் கிடைக்கும்.
ஸ்பாய்லர் அலெர்ட்
கதை நடக்கும் கால கட்டம் 1999.
நாயகி தன் அம்மாவுடன் ஒரு வீட்டில் வசித்துவருகிறார்.நாயகியின் அம்மா மர்மமான முறையில் பாத் ரூமில் இறந்து கிடக்கிறார் .இப்போது கதைக்களம் 20 வருடங்கள் கழித்து காட்டப்படுகிறது.
2019.
அதே வீட்டில் நாயகி தன் மகளுடன் வசித்து வருகிறார். நாயகி ஒரு பல் டாக்டர். நாயகியின் மகள் ஒரு செல்லப்பிராணிப்பிரியை. பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஒரு வயதான தம்பதி வளர்க்கும் செல்ல நாயை விரும்புகிறாள்.
ஒரு நாள் நாயகியின் மகள் தனது பழைய பொம்மைகள், விளையாட்டு சாமானங்கள் ஆகியவற்றைக் குப்பையில் போட நினைக்கிறாள். நாயகி அவற்றை ஒரு பெட்டியில் வைத்து ஸ்டோர் ரூமில் போட்டு விடுகிறாள்.
ஸ்டோர் ரூமில் தன் பாட்டியின் சில பொருட்களைப் பார்த்து தன் பாட்டி பற்றிய விபரங்களை தன் அம்மாவிடம் கேட்கிறாள். ஆனால் நாயகிக்குத் தன் அம்மா பற்றிய பழைய நினைவுகளைக் கிளற விரும்பவில்லை. நாயகியின் அம்மா நாயகியிடம் சரியாக, நெருக்கமாக இல்லை. நாயகியின் கண் முன்னே தற்கொலை செய்து கொண்டவள். ஆனால் காரணம் தெரியவில்லை. இந்த விபரங்களை எல்லாம் மகளிடம் சொல்லி அவளைக் குழப்ப நாயகி விரும்பவில்லை.
அன்று இரவு நாயகிக்கு சில பயங்கரமான கனவுகள் வருகின்றன. த பர்தர் எனப்படும் ஒரு விஷயத்தை நாயகி கண்டுபிடிக்கிறாள். அதாவது மனிதர்களின் இறப்புக்குப்பின் ஆவி உலகத்துக்கு செல்ல முடியும், சென்று மீண்டும் இங்கே திரும்ப முடியும் என்பதைக்கண்டு பிடிக்கிறாள்.
அங்கே ஆவி உலகத்துக்குப்போய் தீய சக்திகளை இங்கே அழைத்து வருகிறாள். இதற்குப்பின் நிகழும் விபரீதங்கள் தான் மீதித்திரைக்கதை.
நாயகியாக அமீலியா ஈவ் பிரமாதமான நடிப்பை வெளிபடுத்தி இருக்கிறார். அவரது உடல் மொழி, முக பாவனைகள் கலக்கல் ரகம்.
நாயகியின் அம்மாவாக வரும் லோரா கார்டன், நாயகியின் மகளாக வரும் சிறுமி ஐலாண்ட் ஆஸ்டிக் இருவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
நாயகி, நாயகியின் அம்மா, நாயகியின் மகள் ஆகிய மூன்று முக்கியக்கேரக்டர்கள் தவிர கிராண்டன் பெரியா, லின் ஷேயா, மைசி ரிச்சர்ட்சன் செல்லர்ஸ், சான்ஸ் போன்றவர்களும் அவரவர் கேரக்டரை சிறப்பாக செய்திருந்தார்கள்.
ஆறு பாகங்களிலும் நடித்த ஒரு நடிகை (நாயகி அல்ல) வரும் சீனில் தியேட்டரில் கை தட்டல்.
டெக்னிக்கல் டீம் கச்சிதம். ஜோசப் பிசாரா தான் இசை. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். ஒளிப்பதிவு டாவ் கர்பெட். ஒரு திகில் படத்துக்கு கேமரா ஆங்கிள் எப்படி வைக்க வேண்டும் என்று உணர்ந்து செய்திருக்கிறார். கிரிகோரி பிளோக்கினின் எடிட்டிங்கில் படத்தின் ரன்னிங்க் டைம் 106 நிமிடங்கள்.
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ஜேக்கப் சேஸ்
சபாஷ் டைரக்டர்
1. நாயகி ஒரு பேஷண்டுக்கு பல் செக்கப் செய்யும் சீனில் நடக்கும் விபரீதம் முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் காட்சி.
2. நாயகி சோபாவுக்குள் போய் மறையும் காட்சி அருமை.
3. இன்னர் பீஸ் என்ற இசைக்கோப்பை கையாண்ட விதம் பிரமாதம்.
4. நாயகி வேறு ஒரு உலகத்துக்கு. எண்ட்டர் ஆகும் விதம், அங்கிருந்து இந்த உலகத்திற்கு எக்சிட் ஆகும் விதம் இரண்டையும். வாவ் பேக்டருடன் படமாக்கிய விதம் அருமை.
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1. படம் மிக மிக மெதுவாக நகர்கிறது. சில இடங்களில் தூக்கம் வருகிறது.
2. முதல் பாகத்தில் வந்த அதே கதையை கேரக்டர்கள், நடிக நடிகைகளை மட்டும் மாற்றி ரீ கிரியேட் செய்த மாதிரி பல காட்சிகள்.
3. நாயகி, நாயகியின் அம்மா இருவருக்கிடையேயான பாண்டிங், நாயகிக்கும், நாயகியின் மகளுக்குமாகிய பாண்டிங் இரண்டையும் சரியான விதத்தில் சொல்லப்படாததால் எமோஷனல் கனெக்ட் கிடைக்கவில்லை.
4. நாயகியின் பலம் என்ன? என்பது தெரிந்த பின், படத்தின் பின் பாதிக்காட்சிகள், க்ளைமாக்ஸ் எல்லாம் யூகிக்கும்படியே இருப்பது மைனஸ். பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லாதது ஏமாற்றம்.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 18+ பயமுறுத்தும் திகில் காட்சிகளுக்காக.
கல்கி கமெண்ட் - திகில் கிளப்பும் சீன்கள் இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள் பார்க்கலாம்.
இன்சிடியஸ் 6 படத்தைப் பற்றிய தெளிவான பார்வையைப் பெறுவதன் மூலம், திரையரங்கிற்குச் சென்று உங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவழித்து இப்படத்தைப் பார்க்க வேண்டுமா அல்லது ஓடிடி ரிலீஸிற்காகக் காத்திருக்க வேண்டுமா என்பதைத் தீர்க்கமாக முடிவெடுக்க முடியும்.