கன்னட இயக்குநர் பிரசாந்த் நீல், சலார் படத்தின் மோசமான விமர்சனங்களுக்கு தானும் கேஜிஎஃப் படமும்தான் காரணம் என்று பேசியிருக்கிறார்.
பிரசாந்த் நீல் 2014ம் ஆண்டு கன்னடாவில் 'உக்ரம்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின் 2018ம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் படம் மூலம் பான் இந்தியா இயக்குனராக உருமாறினார். நீல் தனது இரண்டாவது படத்திலேயே மாபெரும் ஹிட் கொடுத்ததால் பல கதாநாயகர்கள் அவர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நீல் மீண்டும் 2022ம் ஆண்டு யாஷ் வைத்தே கேஜிஎஃப் பாகம் 2 படத்தை இயக்கினார். இவருடைய இந்தப் படமும் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. சென்ற ஆண்டு டிசம்பர் 22ம் தேதி பிரபாஸ் நடிப்பில் நீல் இயக்கத்தில் 'சலார்' படமும் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
இதனையடுத்து சலார் படத்தின் பாகம் 2 உருவாகி வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதற்கு ரசிகர்கள் சலார் 1 படமே நன்றாக இல்லை, இதில் இரண்டாவதா? என்று நெகட்டிவ் கமெண்ட்டுகளை செய்து வந்தனர்.
இதற்கு இயக்குநர் பிரசாந்த் நீல் பதில் அளித்திருக்கிறார். அதாவது, “சலார் படத்தில் நான் கொஞ்சம் அதிக கவனம் கொடுத்திருக்க வேண்டும். KGF 1 மற்றும் 2 கொடுத்த வெற்றியில், நான் அலட்சியம் காட்டிவிட்டேன் என்று நினைக்கிறேன். என் மீது தான் தவறு.. ஆனால் இந்த தவறு நிச்சயம் அடுத்த பாகத்தில் நடக்காது.
தற்போது அதிக கவனம் கொடுத்து படத்தை உருவாக்குகிறேன்.. அதனால், உங்கள் சப்போர்ட் எனக்கு நிச்சயம் தேவை.” என்று பேசினார்.
சலார் படம் அவ்வளவு மோசமான விமர்சனங்களை பெறவில்லை. கலவையான விமர்சனங்களையே பெற்றது. குறிப்பாக கேஜிஎஃப் படத்தை இயக்கிய இயக்குநரின் படம் என்பதால், கேஜிஎஃப் அளவிற்கு எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், உண்மையில் கேஜிஎஃப்க்கு இணையான படம் இனிமேலும் வருமா என்பதே சந்தேகம்தான்.
எது எப்படியோ? சலார் 2 விற்கான எதிர்பார்ப்பு தற்போது சற்று கூடியிருக்கிறது என்று கூறலாம்.