
இந்த அவசர யுகத்தில் பலருக்கு பலவிதமான டென்க்ஷன் வீட்டிலிருக்கும் பெண்களுக்கு, குடும்ப பிரச்னை மட்டும் உள்ள தென்றால், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, அலுவலகப் பிரச்னைகளும் சேர்ந்து, இரட்டை சுமையாகிறது. இதனால், மனஅழுத்தம் உண்டாகி, அது பலவித வியாதிகளுக்கு வழி வகுக்கிறது. இதிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி? இதோ சில யோசனைகள்:-
யோகா செய்யுங்கள்
தியானம் செய்யுங்கள். குறைந்தது 20 நிமிடமாவது தியானம் செய்யப் பழகுங்கள். இது மனதிற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் தரும். மனம் பக்குவப்படும். தியானம் செய்ய, முறையான பயிற்சி தேவை. முறையான ஆசிரியரிடம் பயின்று யோகா செய்யுங்கள்.
நல்ல இசையை கேளுங்கள்
உங்களுக்கு பிடித்தமான மெல்லிய இசையை கேளுங்கள். இது டென்ஷனிலிருந்து, உங்களை விடுவிக்க உதவும். சோர்ந்த மனதை சுறுசுறுப்பாக்க, இசை உதவுகிறது. நல்ல மென்மையான இசை டென்ஷனை குறைக்கிறது. நம் நரம்புகள் விரைத்துப்போய் உடல் கல்லாக ஆகிவிடும்போது, இசை அதை கனியவைக்கிறது.
வாரம் ஒருமுறை வெளி இடங்களுக்கு செல்லுங்கள்
அலுவலகம் செல்லும் பெண்கள், ஒரு நாளும் ஓய்வில்லாமல், வீட்டு வேலை, அலுவலக வேலை என மாற்றி மாற்றி பார்த்து அலுத்துவிடுவீர்கள். விடுமுறை தினத்தை ரிலாக்சாக, மனதுக்கு பிடித்தவகையில் செலவிடுங்கள்.
அன்றைக்கும் வீட்டு வேலையே கதி என்று இருந்துவிட்டால், மனம் அமைதி இல்லாமல் தவிக்கும். ஓய்வு தினத்தில் சிறிது நேரமாவது வெளியிடங்களுக்கு சென்று மனதை 'ரிலாக்ஸ்" செய்யுங்கள். மனது புத்துணர்வுடன் இருந்தாலே நாம் சுறுசுறுப்பாக எவ்வித நோயும் இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.
உணவில் கவனம் தேவை
உணவில் கவனம் செலுத்துங்கள். நேரம் தவறாமல் உண்பது மிகவும் அவசியம். அது, சத்தான உணவாக இருக்கவேண்டும். ஆரோக்கியமான உணவு வகைகளே, நாம் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.
நேர்மறை எண்ணம்
எதிலும், நேர்மறை எண்ணம் வேண்டும். அப்போதுதான், உங்களால் எடுத்த காரியத்தில் வெற்றி பெறமுடியும். எதிர்மறையான எண்ணங்கள் உங்களை கோழையாக்கிவிடும்.
பதற்றம் வேண்டாம்
ஒவ்வொரு விஷயத்திற்கும் பெண்கள் மிகுந்த பதற்றம் அடைவர். பதற்றம் அடையும்போது மனஅழுத்தம் அதிகரிப்பதோடு செய்ய நினைத்த வேலையையும் ஒழுங்காக செய்ய முடியாது.
இதனால், வீட்டிலும், அலுவலகத்திலும் கெட்ட பெயர் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதைத் தவிர்க்க, எதிலும் பதற்றம் அடையாமல் நிதானமாக செயல்படுவது நல்லது.
திட்டமிடுதல் அவசியம்
எந்த வேலையையும் செய்யத் துவங்கும் முன், திட்டமிடுதல் அவசியம். திட்டமிட்டால் மட்டும் போதாது, திட்டமிட்டபடி வேலைகளை செய்து முடிக்கவேண்டும் திட்டமிட்டபடி வேலை செய்து முடித்தால், கிடைக்கும் சந்தோஷமே அலாதிதான்.