எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 17 ராமேஸ்வர மீனவர்களை கைது செய்துள்ளனர் இலங்கை கடற்படையினர்.
தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடித்தார்கள் என்று கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து, அவர்களின் படகையும் மீன்பிடி வலைகளையும் பறிமுதல் செய்வது வழக்கமாக நிகழ்கிறது. இது அடிக்கடி நடக்கும் சம்பவம் என்பதால், இதற்கு ஒரு நிரந்தர தீர்வை கொண்டு வர வேண்டுமென்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கிறார்கள் என்று இந்திய கடற்படையினர் கைது செய்வதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
சமீபத்தில் இந்தியாவிற்கு வந்த இலங்கையின் புதிய அதிபர் திசநாயகாவிடம் மோடி இலங்கை பிரச்சனைகள் குறித்து பேசியதாக செய்திகள் வந்தன. அதேபோல் ராகுல் காந்தியும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்தநிலையில், நேற்று (திங்கள்கிழமை) ராமேஸ்வரத்திலிருந்து 383 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், வங்கக்கடலில், தனுஷ்கோடி- தலைமன்னார் இடையே மீன்பிடித்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, அவர்களையும், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் காலையிலேயே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வர மீனவர்களை உடனடியாக விடுவிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை அதிபரும் இந்திய பிரதமரும் சந்தித்து பேசிய பிறகும் இதுபோல் நிகழ்ந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவேதான் தற்போது இந்த செய்தி வேகமாக பரவி வருகிறது.