

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி அதிக வரவேற்பை பெற்று வருகின்றன. இன்று மாலை (செப்.30) ஜெயிலர் -2 திரைப்படத்தின் பிந்தாஸ் பாடல் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் ஏராளமாக பகிரப்பட்டு வருகிறது.
பாடலின் தலைப்பான ‘பிந்தாஸ்’ வார்த்தைகள் அதன் பொருளுக்கு ஏற்ப கொண்டாட்ட மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது. இந்த பாடலை ரஜினிகாந்த் ரசிகர்களை கவரும் வகையில் சூப்பர் சுப்பு எழுதி உள்ளார். சமீபத்திய காலமாக ரஜினிகாந்த் திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், ரஜினிக்கென்று தனி பாணி இசையமைப்பை பயன்படுத்தி வருகிறார். பிந்தாஸ் பாடலை தீப்தி சுரேஷ் உடன் இணைந்து இசையமைப்பாளர் அனிருத் தனக்கேற்ற வைப்புடன் பாடியுள்ளார்.
இந்த பாடலை இந்தியா மற்றும் சர்வதேச அளவில் பிரபலப்படுத்துவதற்காக , பாடலில் பிரபல பாலிவுட் சென்சேஷனல் நடிகை நோரா ஃபதேகி துள்ளலாக நடனமாட வைத்துள்ளனர். சர்வதேச அளவில் பிரபலமான பல பாலிவுட் பாடல்களில் நோரா ஃபதேகி தோன்றியுள்ளார். இவரது நடன அசைவுகளுக்கு தனி பெரும் ரசிகர் கூட்டம் உலகெங்கும் உள்ளது. பாடலின் வேகத்திற்கு ஏற்ப அவரது வேகமான நடனமும் தென்னிந்திய ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது. அவர் இந்த திரைப்படத்தின் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார் என்பதை திரைப்பட குழுவினர் மிகவும் ரகசியமாகவே வைத்திருந்தனர்.
இன்று வெளியான வீடியோ ரஜினி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. இத்திரைப்படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது படத்தின் காட்சிகளுக்கு கூடுதல் சுவாரசியத்தை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பிந்தாஸ் பாடல் ஜெயிலர் முதல் பாகத்தில் இடம்பெற்ற காவலா பாடலின் மறு பதிப்பை போல் இருப்பதாக ரசிகர்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். ஆனாலும், பாடலுக்கு பயன்படுத்தப்பட்ட இசையும் புதிய பின்னணியும் , புதிய நடன கலைஞரும் ரஜினிகாந்தின் தோற்றமும் புதிதாக இருப்பதாகவே அவர்கள் கருதுகின்றனர்.
காவாலா பாடலைப் போன்றே இந்த பாடலும் பெரிய அளவில் வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கின்றனர். தமன்னாவின் நடனத்தில் வெளியான அந்தப் பாடல் , அப்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.ரஜினி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக ஜெயிலர் -2 திரைப்படம் உள்ளது. நீண்ட காலமாக ரஜினி மற்றும் அவரது ரசிகர்கள் 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் என்ற மைல் கல்லை எட்ட வேண்டும் என்ற காத்திருப்புடன் இருக்கின்றனர்.
ஒரு காலத்தில் இந்தியாவில் அதிக பாக்ஸ் ஆபிஸ் வசூலை கொண்ட நடிகர் என்ற பெருமையை ரஜினிகாந்த் பெற்றிருந்தார். தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவின் திடீர் எழுச்சியினால் , 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் என்ற சாதனையை அவர்கள் பலமுறை எட்டி விட்டனர். இதுவரை தமிழ் சினிமாவின் எந்த ஒரு திரைப்படமும் இந்த சாதனை மைல் கல்லை எட்டியதில்லை. ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து மிதுன் சக்கரவர்த்தி, மோகன்லால் , சிவராஜ் குமார் , ஹிருத்திக் ரோஷன், எஸ்.ஜே. சூர்யா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் வித்யா பாலன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.