

கடந்த வியாழக்கிழமை அன்று 'ஜெயிலர் 2' திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினி காந்த் தான் சினிமாவில் அறிமுகமாகி 50 ஆண்டுகளை கடந்தும் , தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக இருந்து வருகிறார். மூன்று தலைமுறை நடிகர்களை கண்ட பின்னரும் இன்றும் அவர் , தமிழ் சினிமாவில் தனது இடத்தை யாருக்கும் விடாமல் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.
ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று , ₹600 கோடிக்கும் அதிகமாக வசூலை செய்து சாதனை படைத்திருந்தது. இன்று வரையில் அந்த சாதனையை வேறு எந்த தமிழ் நடிகரும் நெருங்கவில்லை. ஜெயிலர் 2 திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் ஏராளமான எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது. அதற்கேற்றார் போல் திரைக்கதையை அமைத்து இயக்குனர் நெல்சன் ரசிகர்களை திருப்திப்படுத்தி உள்ளார். இதனால் நாளுக்கு நாள் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் , அனிருத் இசையமைப்பில், ஏராளமான பல்வேறு மாநில மொழி நடிகர்கள் நடிக்க, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் 2 திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15 வெளியான நாளன்று மட்டும் 15,887 காட்சிகளில் உள்நாட்டு வசூலில் ₹59.70 கோடி நிகர வசூலை ஈட்டியது. இந்த திரைப்படத்திற்கான முன் பதிவுகள் , அக்டோபர் 10 அன்று தொடங்கின. இந்த திரைப்படம் முன்பதிவில் மட்டுமே இதுவரை இல்லாத சாதனையாக உலக அளவில் ₹80 கோடிக்கு புக்கிங் செய்யப்பட்டு இருந்தது. இந்த சாதனை அளவு தமிழ் சினிமாவிற்கு இதுவே முதல் முறையாக உள்ளது. இந்தியாவில் மட்டும் முதல் நாள் முன்பதிவில் 18 லட்சம் டிக்கெட்டுகள் விற்று ₹37 கோடி வசூலை பெற்றது.
நேற்றைய நாளின் (ஞாயிறு) நிலவரப்படி , இரவு 10 மணி வரை ஜெயிலர் 2 திரைப்படம் அன்று மட்டும் மொத்தமாக ₹48.62 கோடி வசூலை வாரி குவித்தது. இதன் மூலம் இந்த திரைப்படத்தின் மொத்த நிகர வசூல் ₹192.67 கோடியாக உள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று இந்த படத்தின் வசூல் குறிப்பிட்ட அளவு சரிந்து ₹37.10 கோடி அளவிற்கு டிக்கெட் விற்பனை ஆகியிருந்தது. ஆனால், சனிக்கிழமை இந்த திரைப்படம் சூடு பிடிக்கத் தொடங்கி அன்றைய வசூல் ₹47.25 கோடியாக உயர்ந்தது. இந்த தகவல்களை பாக்ஸ் ஆபிஸ் தரவுகளை வழங்கும் சாக்னிக் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.
இந்த திரைப்படத்தின் உலகளாவிய வசூலை சேர்த்தால் ஞாயிற்றுக்கிழமை அன்று வரை ₹321 கோடி வசூல் செய்து, இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையையும் பெறுகிறது. இந்த வசூல் விஜயின் 'ஜனநாயகன்' மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' ஆகிய திரைப்படங்களின் வசூலை முந்தியுள்ளது. மேலும் இன்னும் விடுமுறை நாட்கள் முடியாததால் , படத்தின் வசூல் தொடர்ச்சியாக அதிகரிக்ககூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் இந்த திரைப்படம் ஆவது தமிழ் சினிமாவின் முதல் ₹1000 கோடி வசூலை எட்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.