விமர்சனம்: ரஜினியின் 'ஜெயிலர் 2' படம் எப்படி இருக்கு?

Jailer 2 - ஜெயிலர் 2
Jailer 2 - ஜெயிலர் 2
Updated on: 
ரேட்டிங்(3 / 5)

மிகுந்த எதிர்பார்ப்பில் ரஜினி நடித்து வெளிவந்திருக்கும் படம் ஜெயிலர் 2. இப்படத்தை நெல்சன் இயக்கி, அனிருத் இசையமைத்துள்ளார். வாங்க படம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்.

வில்லன் வர்மனை கொன்றது யார்? என்ற தேடலுடன் படம் தொடங்குகிறது.

சிலை கடத்தலை செய்து வரும் சூரஜ் வெஞ்சரமூடு வர்மாவை கொலை செய்தது யார் என்று தேடி அவரை கொலை செய்ய முயற்சி செய்து வருகிறார். இதற்காக ஒரு தனி டீம் ஒன்றை அமைத்து தேடி வருகிறார். இந்த டீம் ரஜினிதான் வர்மனை கொலை செய்தது என்று தெரிந்து கொண்டு ரஜினியின் குடும்பத்தை நெருங்குகிறது.

இதற்கு நடுவில் ரஜினி ஒரு சிறிய பிரச்சனையில் மாட்டிக் கொண்டு உள்ளூரில் தாதாவாக இருக்கும் நமோ நாராயணனிடம் டிரைவராக வேலை செய்கிறார். நமோ நாராயணன் மூலமாக சூரஜ்ஜை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. எதிர்பாராத விதமாக தான் முன்னால் ஜெயிலர் என்பதும் வர்மாவை கொலை செய்தது என்றும் ஒரு கட்டத்தில் சொல்லி விடுகிறார். மேலும் சூரஜின் அத்தனை சதிகளையும் முறியடித்து சூரஜ் சிலை கடத்தலுக்கு பின் உள்ள தலைவனை காட்டிக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைக்கிறார். வேறு வழியில்லாமல் சூரஜ் இதற்கு ஒப்புக்கொள்கிறார்.

இது தெரிந்து அனைத்திற்கும் தலைவராக இருக்கும் எஸ்.ஜே சூர்யா சூரஜை கொன்று விடுகிறார். சூர்யாவும், ரஜினியும் இப்போது நேருக்கு நேர் மோதி கொள்கிறார்கள். எஸ்.ஜே சூர்யா ரஜினியின் குடும்பத்திற்குள்ளும் சென்று சில குழப்பங்களை ஏற்படுத்துகிறார். இறுதியில் எஸ்.ஜே சூர்யாவின் திட்டம் பலித்ததா? ரஜினி எப்படி ஜெயித்தார்?என்று சொல்கிறது படம்.

முதல் பாதி நச்... வர்மன்  கொலையிலிருந்து தொடங்கும் கதை மிகவும் பரபரப்பாகவும் அதே சமயத்தில் நகைச்சுவையாகவும் நகர்ந்து செல்கிறது. படத்தின் முதல் பாதியில் நாம் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் உள்ளன. ரஜினி தன்னை டிரைவர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு வேலை செய்யும் இடத்தில் நடக்கும் நகைச்சுவை காட்சிகள் நம்மை சிரிக்க வைக்கின்றன.

குறிப்பாக யோகி பாபுவும், நமோ நாராயணனும் சேர்ந்து செய்யும் காமெடிக்கு  தியேட்டரில் கைதட்டல் நிறையவே கிடைக்கிறது. நமோ நாராயணன் தான் ஒரு பெரிய ஆள் என்ற பில்டப் பெறும் இடத்தில் சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.

படத்தின் முதல் பாதி  மிகவும் நேர்த்தியாகவும், ஆழமாகவும் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாதியில் ஹீரோவை வைத்து மட்டும் கதை நகராமல் நமோ நாராயணன், யோகி பாபு, பகவதி என பலரை வைத்து கதை நகர்வது ஒரு சிறப்பு. சமீபத்திய படங்களில் நம்மை சிரிக்க வைக்காத யோகி பாபு இந்த படத்தில் கொஞ்சம் சிரிக்க வைக்கவும் செய்கிறார்.

இரண்டாம் பாதி சப்.... முதல் பாதியை பார்த்துவிட்டு பரபரப்புடன் நாம் இரண்டாம் பாதிக்குள் உட்கார்ந்தால் இரண்டாம் பாதி வழக்கமான கார்ப்பரேட் வில்லன், எடுத்ததற்கெல்லாம் துப்பாக்கியை வைத்து சுட்டு தள்ளுவது என்று செல்கிறது.

பேன் இந்தியா படமாக இருந்தால் கண்டிப்பாக வட இந்தியாவில் இருந்து வில்லன் வேண்டும் என்பதற்காக  வில்லன் மிதுன் சக்ரவர்த்தி இருக்கிறார். இவரும் வீல்சேரில் அமர்ந்தபடி தான் இருக்கிறார்.

இரண்டாம் பாதியில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக வருகிறார். எஸ்.ஜே சூர்யா வழக்கம்போல கத்தி பேசுவது, உணர்ச்சிகரமாக நடிப்பது என வழக்கமான டெம்ப்ளேடிலேயே நடித்துள்ளார்.

ஜெய்லர் முதல் பாகத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் என்ற இரண்டு பெரிய ஹீரோக்கள் இருந்தனர். இந்த ஹீரோக்களுடன் இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இவருக்கு எந்த பணியும் படத்தில் பெரிதாக இல்லை. படத்தின் முதல் பாகத்தில் பயன்படுத்திய அதே டெக்னிக்கை அட்சரம் பிசாக்காமல் வில்லன்களை வீழ்த்த இயக்குனர் பயன்படுத்தியுள்ளார். இதை மாற்றி யோசித்து இருந்தால் படம் நன்றாக இரு'ந்திருக்கும். 

இதையும் படியுங்கள்:
30 ஆண்டுகளுக்கும் மேலாக குறையாத ரஜினி வெறிக்கு என்ன காரணம்?
Jailer 2 - ஜெயிலர் 2

நடிப்பு... 75 வயது இளைஞராக 'ரஜினி' எந்த வித அலட்டலும் இல்லாமல் வழக்கமான தன்னுடைய ஸ்டைலில் சிறப்பாக நடித்துள்ளார். சில இடங்களில் மற்ற கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் தந்து தனக்கு சற்று இரண்டாம் இடம் இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து இருப்பது இந்த படத்திற்கு ரஜினி ஸ்கிரிப்ட்டிற்கு செய்த ஒரு உதவியாக எண்ணிக் கொள்ளலாம். இந்த படத்தில் ஆக்சன் என்பது ரஜினி சற்று வித்தியாசமாக செய்திருக்கிறார். மேலும் தனது குடும்பத்திற்காக எமோஷனலாக ஃபீல் செய்யும் இடம் 80களின் ரஜினியின் நடிப்பை நமக்கு கண்முன் கொண்டு வருகிறது.

நமோ நாராயணன், யோகி பாபு நகைச்சுவை ஒரு பிளஸ் பாயிண்ட். இவர்கள் அனைவருடன் சேர்ந்து வில்லியாக வித்யா பாலன் இதுவரை பார்த்திராத ஒரு ரோலில் மிகச் சிறப்பாக நடித்து உள்ளார்.

இசை... படத்தில் அனிருத் இசைக்காக பெரிய அளவில் தன்னை வருத்திக் கொள்ளவில்லை. ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் பயன்படுத்திய அதே இசையை அப்படியே எடுத்து படத்தில் வைத்துவிட்டார். பூர்ணா ஆடும் ஒரு பாடல் மட்டும் நன்றாக இசையமைத்துள்ளார்.

படத்தின் திரைக்கதைக்கு பக்கபலமாகவும் சில இடங்களில் திரைக்கதை பின்னடைவை சந்திக்கும் போதும் நம்மை ரசிக்க வைப்பது படத்தின் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் ஆகும். 

இதையும் படியுங்கள்:
ஜெயிலர்-2 வில் மிஸ் ஆனது தமன்னா தான் - ரஜினிகாந்த் வருத்தம்!
Jailer 2 - ஜெயிலர் 2

மொத்தத்தில் சூப்பர்ஸ்டார் ஜெயித்தாரா?

படத்தின் முதல் பாதியில் இருந்த பலம் இரண்டாம் பாதியில் இல்லை. இது படத்தின் ஒரு குறையாகும். மேலும் இரண்டாம் பாதியில் பல காட்சிகள் ஜெயிலர் முதல் பாகத்தை நினைவுபடுத்துவது போன்றே உள்ளன. மேலும் கூலி படத்தின் சில காட்சிகளையும் அப்படியே ரிப்பீட் செய்தது போல உள்ளது. இதைத் தவிர்த்து இருந்தால் இப்படம் மிக நன்றாக வருந்திருக்கும். இருந்தாலும் நடிப்பிலும், ஸ்டைலிலும் 75 வயதிலும் தன்னால் வித்தியாசமாக செய்ய முடியும் என்று நிரூபித்ததற்காக சூப்பர் ஸ்டார் ஜெயித்துவிட்டார் என்றே சொல்லலாம்.       

logo
Kalki Online
kalkionline.com