

தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது நடிப்பை நிறுத்தி விட்டு தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருவதால் அவரது திரையுலக பயணத்தில் கடைசி படமாக உருவாகியுள்ளது ஜனநாயகன். கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஜய் , பூஜா ஹெக்டே , பாபி தியோல், மமிதா பைஜூ , பிரியாமணி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் ‘தளபதி கச்சேரி’, ‘ஒரு பேரே வரலாறு’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் இடையே அதிக வரவேற்பை பெற்றது.
விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த படம் வெளியாவதற்கு முன்பே சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்தாண்டு ஜனவரி 9-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாக இருக்கிறது. அதன் முன்னோடியாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ம் தேதி மலேசிய நாட்டில் குவாலா லம்பூரில் உள்ள புகித் ஜலால் மைதானத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது.
விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த படம் சம்பந்தமான அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள அவரது ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் சமீபத்தில் கரூரில் விஜய்யின் அரசியல் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த நிலையில் விஜய்க்கு எதிராக அதிகளவில் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது. இதனை கருத்தில் கொண்டு மற்றுமொரு அசம்பாவிதம் ஏதும் நடக்ககூடாது என்பதற்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அரசியல் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காகவும் மலேசியாவில் இந்த படத்தின் இசை நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜனநாயகன் படக்குழுவிற்கும் நிகழ்ச்சிக்கு வரும் விஜய் ரசிகர்களுக்கும் மலேசிய அரசு கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்நிகழ்ச்சி, முழுக்க முழுக்க திரைப்படம் சார்ந்ததாகவே இருக்க வேண்டும். அரசியல் பேசக்கூடாது. ரசிகர்கள் யாரும் கட்சி தொடர்பான கொடி, துண்டு, T-ஷர்ட் அணிந்து வரக்கூடாது. மீறுபவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிகழ்ச்சி சுமூகமான முறையில் நடைபெற இந்த விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என மலேசிய அரசு தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க ‘ஜனநாயகன்’ திரைப்படம் தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாவதில் சிக்கல் நிலவுவதாக கடந்த இருதினங்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தெலுங்கில் ஜனநாயகனை ரிலீஸ் செய்வதாக இருந்த சித்தாரா நிறுவனம் திடீரென பின்வாங்கிய நிலையில், தில் ராஜு இரண்டு முக்கிய பகுதிகளின் ரிலீஸ் உரிமையை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல், இந்தப்படம் ‘ஜன நெட்டா’ என்ற பெயரில் இந்தியில் டப் செய்யப்பட்டு, வட இந்தியாவில் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. இந்தியில் இந்த படத்திற்கு சில பிரச்சனைகள் இருப்பதால் சொன்னபடி இப்படம் ஜனவரி 9-ம் தேதி வட இந்தியாவில் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு சொன்னபடி ரிலீசாகும் என உறுதியாகியுள்ளது.
இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஜீ தமிழ் வாங்கியுள்ள நிலையில் OTT உரிமத்தை அமேசான் பிரைம் சுமார் 150 கோடிக்கு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.