

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நடித்துள்ள கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’, தணிக்கை சான்றிதழ் தொடர்பான சட்டப் போராட்டங்களால் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கே.வி.என். புரோடக்ஷன் தயாரிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படம், கடந்த ஜனவரி 9-ம் தேதியே உலகம் முழுவதும் வெளியாக வேண்டியது. ஆனால், தணிக்கை வாரியத்தின் முட்டுக்கட்டையாலும், நீதிமன்ற வழக்குகளாலும் பட வெளியீடு தள்ளிப்போனது.
மத்திய தணிக்கை வாரியம் (CBFC) கடந்த 5-ம் தேதி இப்படத்தைப் பார்த்த பிறகு, சான்றிதழ் வழங்க மறுத்து, படத்தை மறுஆய்வுக் குழுவுக்கு (Review Committee) பரிந்துரை செய்தது. இதனை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து, படத்திற்கு உடனடியாக சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை ஜன.21-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக படத் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. ஏற்கனவே இந்த வழக்கில் மத்திய தணிக்கை வாரியம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 'ஜன நாயகன்' படம் தொடர்பான வழக்கு இன்று (ஜனவரி 15-ம்தேதி) விசாரணைக்கு வந்த நிலையில் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜன நாயகன் பட விவகாரம் தொடர்பான வழக்கில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. மேலும் ஜனவரி 20-ம்தேதி உயர்நீதிமன்ற அமர்வு விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.