விமர்சனம்: மாயக்கூத்து - சிறிய பட்ஜெட்டில் நேர்த்தியான படைப்பு!
ரேட்டிங்(3.5 / 5)
"படைப்பதனால் என் பெயர் இறைவன்" என்றார் கவியரசர் கண்ணதாசன். இந்த கவிதை வரியை நிஜம் என்று எண்ணி வாழும் ஒரு படைப்பாளரின் கதை மாயக்கூத்து. இந்த படத்தை AR ராகவேந்திரா இயக்கி உள்ளார். இவருடன் இணைந்து ஸ்ரீனிவாசன் என்பவரும் திரைக்கதை அமைத்துள்ளார்.
வாசன் ஒரு பிரபல எழுத்தாளர். கதாபாத்திரங்களை தான் உருவாக்குவதால் தன்னை கடவுளாக எண்ணிக் கொள்பவர். ஒரு தாதா, வீட்டு வேலை செய்யும் ஏழை பெண், ஒரு நடுத்தர குடும்ப பெண், நீட் தேர்வுக்கு தயாராகும் பெண் என நான்கு முக்கிய கதாபாத்திரங்களை தன் கதையில் உருவாக்குகிறார். இந்த கதாபாத்திரம் நகரும் விதம், இவர்களுக்கான நியாயங்கள் என்பதை இவரின் மனதில் கொண்டுள்ள சில ideology அடிப்படையில் உருவாக்குகிறார். இவரின் இந்த ideology தவறு என்று இவரின் நண்பர்கள் எடுத்து கூறுகிறார்கள். இருந்தாலும் இவரின் உள்ளே இருக்கும் 'எழுத்தாளர் ஈகோ ' இதை ஏற்று கொள்ள மறுக்கிறது.
ஒரு நாள் இவர் கதையில் உருவாக்கிய நான்கு கதாபாத்திரங்களும், இவர்களது குடும்ப உறுப்பினர்களும் தங்களுக்கு நியாயம் வேண்டும் என்று கேட்கிறார்கள். எங்கே சென்றாலும் வாசனை பின் தொடர்கிறார்கள். இது உண்மையா இல்லையா என்று குழம்பும் வாசன் தன் கதை வழியாகவே தீர்வு காண முயல்கிறார்.
கதையில் உள்ள பாத்திரங்கள் எல்லாம் நேரில் வந்தால் என்ன ஆகும் என்ற பின்னணியில் சில ஹாலிவுட் படங்கள் வந்துள்ளன. தமிழில் இந்த புதிய முயற்சியை செய்த இயக்குனரை பாராட்டலாம். திரைக்கதை வழியாகவே இந்த கதையை நகர்த்தி செல்ல முடியும் என்று புரிந்து கொண்ட டைரக்டர் மிக நேரத்தியாக திரைக்கதையை உருவாக்கி உள்ளார். படம் தொடங்கி முதல் இருபது நிமிடம் இது எந்த வகை படம் என்று சற்று யோசிக்க வைக்கிறது. பிறகு மெதுவாக படத்திற்குள் நாம் வந்து விடுகிறோம்.
நாகூரான் ராமச்சந்திரன் படத் தொகுப்பு இந்த திரைக்கதைக்கு வலு சேர்க்கிறது. தேவையில்லாமல் ஒரு காட்சியோ அல்லது ஒரு கதாபாத்திரமோ படத்தில் இல்லை.
ஹீரோ நாகராஜன் கண்ணனுக்கும், மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் நடுவில் நடக்கும் உரையாடல், வேலை செய்யும் வீட்டில் பணம் காணாமல் போகும் காட்சி, போன்ற காட்சிகள் மிக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் வாசனாக நடிக்கும் நாகராஜன் கண்ணன் ஒரு ஈகோ பிடித்த எழுத்தாளரை கண் முன் கொண்டு வந்து விடுகிறார். பதிப்பாளர் டெல்லி கணேஷ் அவர்களின் யதார்த்தமான நடிப்பை பார்க்கும் போது, "இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாமே சார் " என்று சொல்ல தோன்றுகிறது. காயத்ரி, பேராசிரியர் மு.ராமசாமி, தீனா என நடித்தவர்கள் அனைவரும் கதையை உள்வாங்கி நடித்திருக்கிறார்கள். அஞ்சலி ராஜகோபாலன் என்ற பெண்மணி இசை அமைப்பாளராக இந்த படத்தில் அறிமுகம் ஆகி உள்ளார். அம்மணியிடம் திறமை இருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துவோம்.
"இப்படி இருக்கணும், இது சரி, இது தப்பு என்று நாம் நம்பும் அனைத்தும் ஏதோ ஒரு படைப்பாளி சொன்ன விஷயம் தான். எனவே படைப்பாளிக்கு பொறுப்பு அதிகம் " என்று வரும் வசனம் இதுவரை நாம் யோசிக்காத விஷயத்தை யோசிக்க வைக்கிறது.
மாயக்கூத்து படத்தை 25 லட்சத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். சிறந்த சினிமா உருவாக பெரிய பட்ஜெட் தேவையில்லை என்று இப்படம் உணர்த்தி உள்ளது. இப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படத்தை நாம் ஆதரித்தால் நல்ல சிறந்த திரைப்படங்கள் தமிழில் வர வாய்ப்புள்ளது.