விமர்சனம்: ஜாக்கி - நல்ல கதை, சொன்ன விதம் சரியில்லை!
ரேட்டிங்(2.5 / 5)
கடந்த 2022 ஆம் ஆண்டு மலையாளத்தில் 'மட்டி' என்ற படம் வெளியாகி வெற்றிபெற்றது. இந்த படத்தை இயக்கிய பிரகபால் தற்போது ஜாக்கி (Jockey) என்ற தமிழ் படத்தை இயக்கி உள்ளார்.
மதுரையில் உள்ள ஒத்தகடை பகுதியில் கிடா சண்டை பிரபலமாக இருக்கிறது. இதில் வெற்றி பெரும் கிடா உரிமையாளருக்கு 'ஜாக்கி' என்ற பட்டம் கிடைக்கிறது. மதுரையில் பிரபலமாக இருக்கும் கார்த்தி என்ற பணக்காரர் கிடா வளர்த்து கிடா சண்டை பந்தயத்திற்கு விடுகிறார். ஒவ்வொரு முறையும் கார்த்தி வளர்க்கும் கிடாவுக்கே வெற்றி கிடைக்கிறது. இதனால் இறுமாப்புடன் இருக்கிறார் கார்த்தி. ஒரு நாள் மதுரையில் ஷேர் ஆட்டோ ஓட்டும் ராமர் என்பவர், தான் வளர்க்கும் காளி என்ற பெயர் கொண்ட கிடாவை சண்டையில் இறக்குகிறார்.
இந்த காளி கார்த்தியின் கிடாவை ஜெயித்து விடுகிறது. சண்டையில் கார்த்தியின் கிடாவின் கொம்பை உடைத்து விடுகிறது. ராமருக்கு ஜாக்கி பட்டம் கிடைக்கிறது. இந்த தோல்வியால் கோபம் கொள்ளும் கார்த்தி, ராமருக்கு தனிப்பட்ட பல பிரச்சனைகளை தருகிறார். ஒரு கட்டத்தில் கார்த்தியின் கிடாவை கடத்தி விடுகிறார். கிடா சண்டை தனிப்பட்ட இரு மனிதர்களின் ஈகோவாக மாறி மோதலாக உருவெடுக்கிறது. இந்த மோதல் தரும் விளைவு என்ன? என்று செல்கிறது ஜாக்கி.
தமிழ் சினிமாவில் யாரும் சொல்லாத கிடா சண்டை என்ற சப்ஜெக்ட்டை தொட்டிருக்கிறார் டைரக்டர். கிடா, நடிகர்கள், சண்டை காட்சி என கவனம் செலுத்தி படத்தை தந்திருக்கிறார். கிடா சண்டையின் போது ஒளிப்பதிவு மதுரை மண்ணின் உக்கிரத்தை காட்டுகிறது. ராஜா கிருஷ்ண சவுண்ட் மிக்சிங் கிடா சண்டையை லைவாக பார்ப்பதை போல் ஒரு உணர்வை தருகிறது. சக்தி பாலாஜி இசையில் பின்னணி ஓகே.
படத்தில் ஹீரோ யுவன் கிருஷ்ணன் நடிப்பு சுமார்தான். ஆனால் வில்லன் கார்த்தியாக நடிக்கும் ரிதனின் நடிப்பு மிரட்டல். மலையாளியான இவர் ஒரு அக்மார்க் கோபக்கார மதுரை வாலிபராக நடித்து சூப்பர் என்று சொல்ல வைக்கிறார். ஹீரோ நாயை வளர்த்தாலும், கிடாவை வளர்த்தாலும் ஹீரோவை ஒரு பெண் காதலிப்பார் என்ற சினிமா விதிகளுக்கு ஏற்ப இந்த படத்தில் அம்மு அபிராமி ஹீரோவை காதலிக்கிறார்.
தொழில்நுட்ப ரீதியக பலமாக இருக்கும் இந்த படம் திரை கதையில் வீக்காக இருக்கிறது. கிடா வளர்ப்பு, வரலாறு என்று தொடங்கும் இந்த படம் பிறகு கிடா சண்டையில் இருக்கும் சிக்கல்களை பேசுவதற்கு பதிலாக, தடம் மாறி ஹீரோ - வில்லன் மோதல் என்ற ரெகுலர் டெம்ப்ளட்டில் சென்று சுவாரசியம் குறைந்து விடுகிறது. படத்தில் வரும் காதல் காட்சிகள் படம் நகர்வதற்கு ஸ்பீட் ப்ரேக்கராக உள்ளன.
நல்ல கதை, ஆனால் சொன்ன விதம் சரியாக இல்லை. இருந்திருந்தால் ஜாக்கி ஜாக் பாட் அடித்திருக்கும்.
தமிழ் சினிமாவில் மறைந்த இயக்குனர் ராம நாராயணன் அவர்கள் பல விலங்குகள், பறவைகள், பாம்புகள் பயன் படுத்தி பல வெற்றி படங்களை தந்தவர். கிராபிக்ஸ் இல்லாத காலத்திலேயே லைவாக விலங்குகளை பயன் படுத்தி பெயர் பெற்றவர் ராம நாரயணன். தற்போது விலங்குகளை வைத்து படம் எடுக்க நினைக்கும் இளம் இயக்குனர்கள் இவரின் படங்களை பார்த்தால் இன்ஸ்பியர் ஆகி நல்ல விலங்குகள் படம் தரலாம்.

