
ரசிகர்கள் தங்கள் உள்ளம் கவர்ந்த நாயகர்களின் படங்களை பற்றி அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். இந்த வகையில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இன்று அதாவது ஜூன் 20, மற்றும் 21, 22-ம்தேதிகளில் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் குறித்த புதிய அப்டேட் வர உள்ளது. அந்த நட்சத்திரங்கள் யார், என்ன படம் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர் நடிகர் சூர்யா. ரெட்ரோ படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்னும் படத்திற்கு தலைப்பு தயாராகவில்லை. இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்க இவர்களுடன் சுவாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, நட்டி நட்ராஜ், அனகா மாயா ரவி நடித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி இந்தப் படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆர் ஜே பாலாஜி பிறந்தநாளான ஜூன் 20-ம் தேதி (இன்று) படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அடுத்த மாதம் ஜூலை 23-ம் தேதி சூர்யாவின் பிறந்தநாளில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகும் எனத்தெரிகிறது.
ரஜினிகாந்த் தற்பொழுது கூலி திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘ஜெயிலர்’ படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்திய நிலையில் தற்போது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஃபகத் ஃபாசில், மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலையா, நாகர்ஜுனா , யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பல முக்கிய நட்சத்திர நடிகர்கள் இணைந்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் மேற்கொள்கிறார். இந்த படத்தின் வெளிநாட்டு உரிமம் ரூ.81 கோடிக்கு விற்பனையாகி தமிழ் படங்களில் அதிக தொகைக்கு விற்பனையான படம் என்ற சாதனையை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரும் ஜூன் 21-ம் தேதி (நாளை) நெல்சனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அப்டேட் வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் தளபதி விஜய், பாலிவுட் நடிகர் பாபி தியோல், கவுதம் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது.
வரும் ஜூன் 22-ம் தேதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் இறங்கிய நடிகர் விஜய், தனது 69வது படம் தான் கடைசி படம் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் ஜூன் 20,21,22 என மூன்று நாளும் சூர்யா, ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய முன்று பெரிய நட்சத்திரங்களின் அப்டேட் அடுத்தடுத்து வர இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.