
ஜூராசிக் பார்க் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்தவகையில் அவர்களை மகிழ்விக்க யுனிவர்சல் பிக்சர்ஸ் சார்பில் ஜூராசிக் பார்க் பட வரிசையில் அடுத்த அத்தியாயமாக, ‘ஜூராசிக் வேர்ல்டு ரீபர்த்’ நாளை இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது.
கற்காலம், இரும்பு காலம் என்பதைப் போல, ஒரு குறிப்பிட்ட மில்லியன் காலத்திற்கு முன்பு உள்ளதை ‘ஜூராசிக் காலம்’ என்று தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஜூராசிக் காலத்தில்தான் டைனோசர் போன்ற அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்திருக்கின்றன. அவற்றின் வாழ்விடத்தை குறிப்பிடும் வகையில்தான் ‘ஜூராசிக் பார்க்’ என்ற பெயர் ஏற்படுத்தப்பட்டது. டைனோசர் பற்றி பலரும் அறியாத நேரத்தில் 1993-ம் ஆண்டு ‘ஜூராசிக் பார்க்’ என்ற திரைப்படம் வெளியானது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் உருவான இந்த படம் வெளியாகி உலகையே திரும்பி பார்க்க வைத்தது என்றே சொல்லலாம்.
1997-ம் ஆண்டு ‘தி லாஸ்ட் வேர்ல்டு’, 2001-ம் ஆண்டு ‘ஜூராசிக் பார்க் 3’ ஆகிய படங்களும், சுமார் 14 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், 2015-ம் ஆண்டு ‘ஜூராசிக் வேர்ல்டு’, 2018-ம் ஆண்டு ‘ஜூராசிக் வேர்ல்டு: பாலன் கிங்டம்’, 2022-ம் ஆண்டு ‘ஜூராசிக் வேர்ல்டு டொமினியன்’ என்று டைனோசர்களைப் பற்றியும், அவற்றின் மறு உருவாக்கம், டைனோசர்களின் ஆதிக்கம் உள்ளிட்டவை குறித்தும் எடுக்கப்பட்ட வகையில், இதுவரை 6 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
ஏற்கெனவே ஆறு பாகங்களாக அடித்து துவைத்த கதையை மீண்டும் புதிதாக ஒரு களத்துடன் 7-வது பாகமாக ‘ஜூராசிக் வேர்ல்டு ரீபர்த்’ உருவாக்கி இருக்கிறது யுனிவர்சல் நிறுவனம். 180 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம், ‘ஜூராசிக் வேர்ல்டு டொமினியன்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும், அந்த படத்தின் கதைக்குப் பிறகு 5 ஆண்டுகள் கழித்து நடைபெறுவது போலவும் படமாக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பூமியின் சூழலானது, டைனோசர்கள் மற்றும் அழிந்துபோன பிற வரலாற்றுக்கு முந்தைய விலங்குகளுக்கு ஏற்றதாக இல்லை. எனவே அந்த உயிரினங்கள் தொலைதூர, வெப்பமண்டல இடங்களில் வாழ்கின்றன. இந்த நிலையில் மருத்துவ ஆராய்ச்சிக்காக டைனோசர்களின் டி.என்.ஏ.வை சேகரிக்கும் பணிக்காக செல்லும் ஒரு குழு அங்கு சிக்கிக் கொள்வதாக ட்ரெய்லரில் காட்டப்படுகிறது. அவர்களுக்கு அங்கு நடைபெறும் பயங்கரங்கள்தான் படமாக விரிகிறது.
இந்தப் படத்தின் டிரெய்லர் கடந்த மே மாதம் 20-ந் தேதி வெளியிடப்பட்டது. அப்போது படத்தின் தயாரிப்பாளர்கள் இந்த படம் குறித்து ஒரு பதிவைப் போட்டிருந்தனர். அதில், “மிக மோசமான டைனோசர்களில் மோசமானவை இங்கே விடப்பட்டுள்ளன. படத்தின் இறுதி டிரெய்லரைப் பார்த்து உங்கள் டிக்கெட்டுகளை பெறுங்கள்” என்று கூறப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்தப் படத்தில் டைனோசர்களின் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் என்பது தெளிவாகிறது. படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் பலரையும் கவர்ந்திருக்கிறது. அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 17-ந் தேதி லண்டனில் ‘ஜூராசிக் வேர்ல்டு ரீபர்த்’ திரைப்படம் வெளியாகிவிட்ட நிலையில், அமெரிக்காவில் நேற்று (ஜூலை 2-ந் தேதி) வெளியானது. இந்நிலையில் இந்தியாவில் நாளை (ஜூலை 4-ந் தேதி) வெளியாக உள்ளது.
இதற்கிடையில் ஜூராசிக் வேர்ல்ட் ரீபர்த்தில் நடித்துள்ள ஸ்கார்லெட் ஜோஹன்சன், தான் தனது 10 வயதில் ஜூராசிக் பார்க் படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்ததாகவும், அப்போது டைனோசர்களை பார்த்து மிரண்டு போனதாக கூறினார். இப்போது நான் ஹாலிவுட்டில் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், ரசிகர்களை ஈர்த்திருந்தாலும் ஜூராசிக் பார்க் படங்களில் நடிப்பது என் கனவாகவே இருந்தது. அந்த வாழ்நாள் கனவு இந்த படம் மூலமாக நிறைவேறி இருப்பதாகவும், இது இனம்புரியாத மகிழ்ச்சியையும் உருவாக்கியுள்ளதாகவும் கூறினார்.
இந்தப் படத்தை ‘மான்ஸ்டர்ஸ்’, ‘காட்சில்லா’, ‘ரா ஒன்: ஏ ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி’, ‘தி கிரியேட்டர்’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய கரத் எட்வர்ட்ஸ் இயக்கி இருக்கிறார். ‘ஜூராசிக் பார்க்’ திரைப்படத்தின் முதல் இரண்டு படங்களுக்கு கதை, திரைக்கதை அமைத்த டேவிட் கோப், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் ‘ஜூராசிக் வேர்ல்டு ரீபர்த்’ படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். மார்வல் சூப்பர் ஹரோ படங்களில் வரும் நடாஷா கதாபாத்திரத்தை ஏற்றிருந்த ஸ்கார்லெட் ஜோஹன்சன், இந்தப் படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
2015-க்குப் பிறகு வெளியான 3 ‘ஜூராசிக் வேர்ல்டு’ வரிசைப் படங்களும் ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஒரு படம் 200 மில்லியன் டாலரிலும், இன்னொரு படம் 250 மில்லியன் டாலர் செலவிலும் தயாரிக்கப்பட்டவை. 2018-ம் ஆண்டு வெளியான படம் மட்டும் அதிகபட்சமாக 432 மில்லியன் டாலர் பொருட்செலவில் தாயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது வெளியாக உள்ள ‘ஜூராசிக் வேர்ல்டு ரீபர்த்’ திரைப்படம் இவற்றை விட குறைந்த பொருட்செலவில் 180 மில்லியன் டாலரில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம் கதை, திரைக்கதை ரீதியாக வலுவான காட்சிகளைக் கொண்டிருப்பதால் இந்தப் படம் 2 பில்லியன் டாலர் வரை வசூல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.