

1930 வரை இந்திய சினிமா சைலண்ட் மூவியாகத்தான் இருந்தது. நடிகர்கள் வாயசைப்பார்கள். அது வசனமோ, பாட்டோ வெறும் பாவ்லா தான் இருக்கும். குரல் நமக்குக் கேட்காது. காட்சிகளுக்கு இடையே திரையில் டைட்டில் கார்டு மூலம் வசனமோ, கதையோ ஆடியன்சுக்கு உணர்த்தப்படும்.
உலக சினிமா வில் சவுண்ட் டெக்னாலஜி வளரத் தொடங்கியதும் இந்திய சினிமாவும் விழித்துக்கொண்டது.
இந்திய சினிமாவின் முதல் பேசும் படம் ஆலம் ஆரா (Alan Ara). இது 14/3/1931 அன்று வெளியானது. அர்தேசிர் இரானி என்பவர் இயக்க மாஸ்டர் வித்தல், ஜூபைதா, பிரித்விராஜ் கபூர் ஆகியோர் நடிப்பில் உருவான படம் இது.
ஆலம் ஆரா படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் தான் ஹெச். எம். ரெட்டி. இந்தப்படம் தயாரிக்கப்பட்ட அரஙகிலேயே காளிதாஸ் படமும் தயாரிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு முழுவதும் பம்பாயில் (மும்பையில்) படமாக்கப்பட்டது.
எச்.எம். ரெட்டி என்பவர் தான் படத்தின் இயக்குநர். பி.ஜி வெங்கடேசன், டி.பி.ராஜலட்சுமி, எல். வி. பிரசாத், தேவாரம் ராஜாம்மாள், ஜே. சுசீலா, சுசீலா தேவி, எம்.எஸ். சந்தான லட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள்.
காளிதாஸ் கேரக்டரில் பி.ஜி வெங்கடேசன், இளவரசி வித்யாதரி கேரக்டரில் டி.பி ராஜலட்சுமி, கோயில் பூசாரி கேரக்டரில் எல்.வி.பிரசாத் நடித்தார்கள்.
இந்தப்படத்தின் நாயகியான டி.பி.ராஜலட்சுமி தான் பின்னாளில் தமிழ் சினிமாவின் முதல் பெண் டைரக்டர் ஆனார். இவர் சிறந்த பாடகியும் கூட.
இந்தப்படம் தமிழ்ப்படமாக இருந்தாலும், தெலுங்கு, உருது, ஹிந்தி பேசும் கேரக்டர்களும் படம் முழுக்க வந்து போகும்.
படத்தின் கதை என்ன?
நாட்டின் இளவரசியை மணம் செய்ய நாட்டின் மந்திரியின் மகன் ஆசைப்படுகிறார். ஆனால் இளவரசிக்கு அதில் விருப்பமில்லை. மறுத்து விடுகிறார். இதனால் கோபம் கொண்ட மந்திரி ஆடு மாடு மேய்க்கும் இளைஞனுக்கு இளவரசியை மணம் முடித்து வைத்து விடுகிறார்.
உண்மை உணர்ந்த இளவரசி காளியை வழிபட்டு வேண்டுதல் செய்ய அந்த ஆட்டு இடையன் புலமை பெற்ற காளிதாஸ் ஆகிறான்.
இதில் விஜயபுரியின் இளவரசியாக தமிழ் நாடக மேடைகளில் வலம் வந்த டி.பி. ராஜ லட்சுமி நாயகியாக நடித்தார்.
நாயகனாக நடித்தவர் தெலுங்கு மொழி பேசுபவர். அதனால் படத்தில் தெலுங்கு வசனங்களும் இருக்கும்.
ஜெர்மன் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. 'மன்மத பானமடா, மாரினிலே பாயுதடா' என்ற பாட்டு அப்போது செம ஹிட்டு. எழுதியவர் மதுரகவி பாஸ்கர ராஜா. தமிழ் சினிமாவின் முதல் பாடலாசிரியர் இவர் தான்.
பம்பாயில் இருந்து படப்பெட்டி சென்னை செண்ட்ரல் ரயில்வே ஸ்டேசனுக்கு வந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் படப்பெட்டியைக் காண வந்திருந்தனர். ரோஜா மாலை எல்லாம் போட்டு அமர்க்களப்படுத்தினார்கள்.
இந்தப்படத்தின் முதல் காட்சி சென்னை செண்ட்ரல் தியேட்டரில். 31/10/1931 ல் திரையிடப்பட்டது.
படத்தில் மொத்தம் 50 பாடல்கள் இடம் பெற்று இருந்தன. அன்றைய சுதேசி மித்திரன் நாளிதழில் படத்தின் விளம்பரம் வெளியானது.
தீபாவளிக்குப் படங்கள் ரிலீஸ் ஆவது ஏன் தெரியுமா?
முதல் பேசும் படமே ஒரு தீபாவளி தின ரிலீஸ் தான். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து படத்தை ரசித்தார்கள். மவுனப்படங்களையே கண்டு வந்தவர்கள் முதன் முதலாகப் பேசும் படம் காண ஆவலுடன் திரண்டார்கள்.
படத்தில் குறத்தி நாட்டியங்கள், குறவன் குறத்தி ஆட்டம் இடம் பெற்று பெரும் வரபேற்பைப் பெற்றது.
படத்தில் சில விசித்திரங்களும் உண்டு. நாயகி தமிழில் பேசுவார். ஆனால் நாயகன் தெலுங்கில் தான் பதில் சொல்வார். நாமாகப்புரிந்து கொள்ள வேண்டியதுதான்.இப்போது ஓ டி டி யில் செய்வது போல சப் டைட்டில்கள் அப்போது இல்லை.
இந்தப்படம் ரிலீஸ் ஆன கினிமா செண்ட்ரல் தியேட்டர் பிறகு முருகன் டாக்கீஸ் என்று பெயர் பெற்றது.
படத்தின் மொத்த பட்ஜெட் அப்போதைய மதிப்பில் ரூ 8000 மட்டுமே. ஆனால் வசூல் ஆனது 75,000 ரூபாய். கிட்டத்தட்ட 10 மடங்கு லாபம்.
ஆனால் இந்தப்படத்தின் பிரதி இப்போது நம்மிடையே இல்லை. அழிந்து விட்டது.
சில சுவராஸ்யத்தகவல்கள்
1. எட்டு நாட்களில் உருவான படம் இது.
2. நாடக உலகின் கனவுக்கன்னி ராஜலட்சுமியை சினிமாவில் பார்க்கவே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள்.
3. நாயகி தமிழில் பேச, நாயகன் தெலுங்கில் பேச மற்ற கேரக்டர்கள் எல்லாம் ஹிந்தியில் பேசுவார்கள். ஒரு வகையில் பான் இண்டியா மூவி இது.
4. போட்டோ எடுத்தால் ஆயுள் குறையும் என்ற மூடநம்பிக்கை போல் அப்போது சினிமாவில் நடித்தால் ஆயுள் குறையும் என்று நம்பிக்கை இருந்ததால் படத்தில் நடிக்க யாரும் முன் வராதபோது துணிச்சலாக ராஜலட்சுமி நடிக்க முன் வந்தார்.
5. இந்தப்படத்தின் பிரதி இப்போது இல்லை. ஆனால் இந்தப்படத்தின் ரீமேக்காக சிவாஜி கணேசன் நடித்த மகாகவி காளிதாஸ் (1966) உருவானது. அதுவும் வெற்றிப்படம்.
6. டி.பி. ராஜலட்சுமி சினிமா ராணி என்னும் பட்டம் பெற்றார். 1936ல் மிஸ் கமலா என்ற படத்தை இயக்கியதன் மூலம் முதல் பெண் டைரக்டர் ஆனார் டி.ராஜேந்தர் போல இவர் அந்தக்காலத்திலேயே கதை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, எடிட்டிங்க், இசை, நடிப்பு என ஏழு பொறுப்புகளை ஏற்றவர். இவர் எழுதிய கமலவல்லி என்னும் நாவல் தான் 'மிஸ் கமலா' என்னும் சினிமா ஆனது.
தமிழ் சினிமா வரலாற்றின் தொடக்கப் புள்ளியான காளிதாஸ் படம் எப்படி உருவானது, அக்காலத்தில் மக்கள் அதை எவ்வாறு கொண்டாடினார்கள் மற்றும் இன்றைய சினிமாவுடன் அதன் தொடர்பு என்ன என்பதை முழுமையாகத் தெரிந்து கொள்வீர்கள்.