கமல் ஹாசன் ஒரு மனிதரா இல்லை சினிமாவா? வியக்க வைக்கும் சாதனை ரகசியங்கள்!

ஒவ்வொரு படத்திலும் தன்னை முழுமையாக மாற்றிக்கொள்ளும் உலகநாயகனின் திரைப்பயண ரகசியங்கள் இதோ!
கமல் ஹாசன்
கமல் ஹாசன்AI image
Updated on

திரையில் தோன்றும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான மனிதராக மாறுவது கமல் ஹாசனின் தனிச்சிறப்பு. குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கி, நடிகர், நடனக் கலைஞர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் என சினிமாவின் பல துறைகளிலும் தடம் பதித்தவர். இன்று 67வது ஆண்டில் தொடரும் அவரது திரைப்பயணம், திறமைக்கும் விடாமுயற்சிக்கும் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

1960ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில், தனது ஆறாவது வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கமல் ஹாசன். இதில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவரது நடிப்பு அப்போதே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்தப் படத்திற்காக அவருக்கு குடியரசுத் தலைவர் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படத்திலேயே தேசிய அளவிலான அங்கீகாரம் பெற்றது அவரது திரைப்பயணத்தின் சிறப்பான தொடக்கமாக அமைந்தது.

அதன் பிறகு சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் திரையுலகில் தீவிரமாகப் பயணித்தார். நடிப்புடன் மட்டும் நின்றுவிடாமல் நாடகத்திலும் பயிற்சி பெற்றார். டி.கே.எஸ். நாடகக் குழுவில் இருந்த காலம் அவரது நடிப்புத் திறனை மேலும் செம்மைப்படுத்தியது. மேக்கப் கலையிலும் அவருக்கு அப்போதே ஆர்வம் ஏற்பட்டது.

அபூர்வ ராகங்கள் முதல் 16 வயதினிலே, மூன்றாம் பிறை, நாயகன், தேவர் மகன், இந்தியன், விருமாண்டி, விஸ்வரூபம் என அவர் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு முகம் கொண்டவை. மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார். மொத்தம் 21 Filmfare விருதுகளை வென்றிருப்பதும் அவரது நீண்ட சாதனைப் பயணத்தின் முக்கிய அடையாளமாகும்.

கமல் ஹாசன்
கமல் ஹாசன்AI image

தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் புதிய முயற்சிகளை மேற்கொண்டார். தொழில்நுட்பத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் இந்திய சினிமாவில் பல புதிய முயற்சிகளையும் மேற்கொண்டார்.

கமலின் மற்றொரு சிறப்பு, ஒரு கதாபாத்திரத்துக்காக தன்னை முழுமையாக மாற்றிக்கொள்ளும் அர்ப்பணிப்பு. தோற்றம், உடல் மொழி, குரல், நடை, பேச்சு என அனைத்திலும் கதாபாத்திரத்திற்கேற்ற மாற்றத்தை ஏற்படுத்துவதில் அவர் காட்டிய அக்கறை, அவரை மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்கச் செய்தது.

கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் சுவாரஸ்யமான பல திருப்பங்கள் உள்ளன. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் பின்னர் நடனப் பயிற்சி பெற்று மேடையில் நடித்து தனது கலைத் திறனை வளர்த்துக் கொண்டார். கதாநாயகனாக நடித்த ஆரம்ப காலத்திலேயே வழக்கமான கதைகளைத் தேர்ந்தெடுப்பதை விட வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடத் தொடங்கினார். அதனால் அவருடைய படங்கள் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் சினிமாவை ஆராய்பவர்களுக்கும் கவனம் ஈர்க்கும் படைப்புகளாக அமைந்தன.

ஒரே படத்தில் பல வேடங்களில் நடிப்பது, வயதான தோற்றத்தை ஏற்றுக் கொள்வது, அவ்வை சண்முகி படத்தில் பக்கா பிராமண பெண்மணியாக அமர்க்களமாக நடித்தது, கதாபாத்திரத்தின் உடல் மொழியை மாற்றுவது போன்ற முயற்சிகளை அவர் துணிச்சலுடன் மேற்கொண்டார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்பா மகன் என வித்தியாசமான தோற்றங்களில் நடித்தது , தசாவதாரம் படத்தில் பத்து வேடங்களில் நடித்தது போன்றவை அவரது பரிசோதனை மனப்பான்மைக்கு உதாரணங்கள்..

இதையும் படியுங்கள்:
தேசிய விருது பட்டியலில் கமலை பின்னுக்கு தள்ளி புதிய மைல்கல்லை எட்டிய மெகா ஸ்டார் மம்முட்டி..!!
கமல் ஹாசன்

நாயகன் திரைப்படத்தில் வேலுநாயக்கராக அவர் அளித்த நடிப்பு இந்திய சினிமாவின் முக்கியமான நடிப்புகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அந்த படம் இந்தியாவின் ஆஸ்கர் பரிந்துரையாகவும் சென்றது‌‌. மேலும் TIME வெளியிட்ட சிறந்த திரைப்படங்களின் பட்டியலிலும் நாயகன் இடம் பெற்றுள்ளது.

திரைப்படத்தில் நடிப்பதோடு மட்டும் நிற்காமல், திரைக்கதை எழுதுதல், இயக்கம், தயாரிப்பு, பாடல், பின்னணிப் பாடல், நடனம் என பல துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார் உலகநாயகன் கமல் ஹாசன். மகாநதி போன்ற படங்களில் கதையின் உருவாக்கத்திலும் அவரது பங்களிப்பு இருந்தது.

இதனால் கமல் ஹாசன் ஒரு நடிகர் என்ற எல்லைக்குள் அடங்காமல் சினிமாவைத் தொடர்ந்து கற்றுக் கொண்டு பரிசோதித்து வந்த கலைஞராக திகழ்கிறார். அவரது பயணத்தில் வெற்றி பெற்ற படங்களுடன் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத படங்களும் இருந்தன.

இதையும் படியுங்கள்:
ஹரிதாஸ் முதல் ரத்தக் கண்ணீர் வரை: காலத்தைக் கடந்த தமிழ் சினிமா உணர்த்தும் சமூகச் சத்தியம்!
கமல் ஹாசன்

கமல்ஹாசனின் சிறப்பு நடிப்பில் மட்டும் இல்லை. ஒரு திரைப்படம் உருவாகும் விதம் குறித்த ஆர்வமும் அவருக்கு அதிகம். கதை , திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு, நடனம், பாடல் என பல துறைகளிலும் பங்களித்துள்ளார். ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்டால் அதன் பின்னணி , உடல் மொழி,பேச்சு மனநிலை ஆகியவற்றை உள்வாங்கி நடிப்பது அவரது வழக்கம்‌‌. இதனால் அவரது ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்த அடையாளத்தைப் பெற்றது.

மூன்று தேசிய விருதுகள், பத்ம ஶ்ரீ, பத்ம பூஷண் உள்ளிட்ட பல உயரிய விருதுகள் அவரது திறமைக்குக் கிடைத்த அங்கீகாரங்கள் ஆகும். சுவாரஸ்யமாக அவரது முதல் படத்தின் சம்பளம் வெறும் 500 ரூபாய் என்று சமீபத்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.

குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கிய அவரது பயணம் பல தசாப்தங்களைக் கடந்து இன்றும் தொடர்கிறது. வெற்றிகளோடு சோதனைகளையும் சந்தித்து, ஒவ்வொரு கட்டத்திலும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டவர் கமல் ஹாசன். வயது என்பது ஒரு எண்ணிக்கை மட்டுமே; கலை மீதான ஆர்வமும் கற்றுக்கொள்ளும் மனப்பான்மையும் இருந்தால் காலத்தைக் கடந்தும் சாதிக்க முடியும் என்பதை அவரது 67 ஆண்டுகால திரைப்பயணம் அழகாக எடுத்துக்காட்டுகிறது.

ஒரு கலைஞர் எவ்வாறு தன் திறமையை எவ்வித சமரசமுமின்றி வளர்த்துக்கொண்டு தலைமுறைகளைக் கடந்து ஜொலிக்க முடியும் என்பதைப் புரிந்து கொண்டு, உங்கள் படைப்பாற்றலையும் உழைப்பையும் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வதற்கான உத்வேகத்தைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com