விமர்சனம்: கண்ணப்பா - 'ஒரு மணி நேரம் பீல் குட், இரண்டு மணி நேரம் வெறும் பில்ட அப் மட்டுமே'
ரேட்டிங்(3 / 5)
நம் மக்களின் பக்தி என்பது இறைவனை அடைய ஒரு பாலமாக இருக்கிறது. அளவு கடந்த இறை பக்தியால் இறைவனை உணர்ந்தவர்கள் நமது நாயன்மார்கள். இவர்களில் ஒருவர் முக்கியமானவர் கண்ணப்ப நாயனார். இவரின் கதையை சொல்லும் படமாக வந்துள்ளது கண்ணப்பா. இப்படத்தை முகேஷ் குமார் சிங் இயக்கி உள்ளார்.
காளகஸ்த்தி பகுதியில் உள்ள காடுகளில் வாழ்ந்து வருகிறார் வேடுவன் திண்ணா. சிறுவயதாக இருக்கும் போது நரபாலியால் தன் நண்பனை இழந்த கோபத்தில், நாத்திகனாக வாழ்கிறார் திண்ணா. இவரை மாற்ற விரும்பும் சிவபெருமான் இவரை மனைவியிடம் இருந்து பிரித்து, பலவேறு சோதனைகள் தருகிறார். மானிட வேடம் இட்டு வரும் பூதகணம் ருத்ரா பிரச்சனைகள் தீர வாயு லிங்கத்தை பார்த்து 'சிவாயா' என்று சொல்லி வேண்ட சொல்கிறார். திண்ணாவும் சிவ நாமத்தை சொல்கிறார். அதன் பிறகு பல நல்ல மாற்றங்கள் திண்ணாவின் வாழக்கையில் நடக்கிறது.
தீவிர சிவ பக்கத்தனாக மாறி தான் வேட்டையாடும் மிருகங்களின் மாமிசத்தை வாயு லிங்கத்திற்கு படைக்கிறார். திண்ணணின் இந்த செயலை பார்த்து சிவனுக்கு அன்றாடம் பூஜை செய்யும் சாஸ்திரிகள் கோபம் கொண்டு தனது ஆட்கள் மூலமாக திண்ணனை சித்திரவதை செய்கிறார். இந்த சித்திரவதையை பார்க்க முடியாமல் லிங்கத்தின் கண்களில் இருந்து ரத்தம் வருகிறது. சிவனின் கண்களிலிருந்து இரத்தம் வருவதை நிறுத்த தன் கண்ணை குத்தி எடுத்து தர முயல்கிறார் திண்ணப்பா.
நமக்கு தெரிந்த இந்த கதை வரும் ஒரு மணி நேரம் மட்டுமே மிக சிறப்பாகவும், ஒரு பக்தனின் அன்பின் வெளிப்பாட்டை மிக அற்புதமாகவும் சொல்லி இருக்கிறார் டைரக்டர். ஆனால் படத்தின் முதல் இரண்டு மணி நேரம் ஹீரோவின் பிரதாபங்கள், காதல், வில்லன் கவர்ச்சி என பில்ட் அப்களும், மாஸ் மசாலா அம்சங்கள் மட்டுமே உள்ளன. மூன்று மணி நேர படத்தில் முதல் இரண்டு மணி நேரம் ஒரு சராசரி தெலுங்கு படம் பார்த்தது போன்ற உணர்வு வருகிறது.
படத்தின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. இருப்பினும் சில இடங்களில் க்ரீன் மேட் தொழில் நுட்பம் பயன்படுத்தி இருப்பது தெரிந்து வீடுகிறது. கம்பீரமாக படம் முழுவதும் நடித்து விட்டு, கிளைமாக்ஸ் காட்சியில் சிவ லிங்கத்தை கண்கள் இல்லாமல் ரத்தத்துடன் கட்டி அழும் போது ஒரு நிஜ கண்ணப்ப நாயனாரை கண் முன் கொண்டு வந்து விடுகிறார் விஷ்ணு மஞ்சு.
அகங்காரம் பிடித்த பண்டிதராக மோகன் பாபுவும், அமைதியாக பிரபாஸ் நன்றாக நடித்துளார்கள். படத்தின் வரும் சிவன் பாடல்கள் தாளம் போட வைக்கிறது. படத்தின் டைட்டில் கார்டில் நன்றி என மோகன் பாபு, மோகன் லால், பிரபாஸ் பெயர்களை போடுகிறார்கள். இதனுடன் 'நன்றி தமிழ் மொழி' என்று போட்டிருக்க வேண்டும். காரணம் கண்ப்பநாயனார் கதை நம் தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் சொந்த மானது. இந்த நாயனாரின் கதையை மைய்யபடுத்தி ஆந்திரா பின் புலத்தில் இருந்து வந்துள்ள இந்த கண்ணப்பா படத்தில் நம் தமிழுக்கு நன்றி சொல்லாமல் இருப்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயமே.
ஒரு மாஸ் மசாலா படம் பார்க்க விரும்புபவர்களுக்கு முதல் இரண்டு மணி நேரம் பிடிக்கும். பக்தியை தரிசனம் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு கடைசி ஒரு மணி நேரம் பிடிக்கும். மொத்தத்தில் கண்ணப்பா - மாஸ் மற்றும் பக்தி.