
தெரிந்த முகம் ஒன்று கூட இல்லை. காந்தாரா பார்க்காதவர்களுக்கு நாயகன் ரிஷப் ஷெட்டி கூட அன்னியம் தான். ருக்மிணி வசந்த்தைக் கூட எவ்வளவு பேருக்குத் தெரியும். ஜெயராம் மட்டுமே பரிச்சயமானவர். முற்றிலும் கற்பனையாக ஓர் உலகம். அதில் இருக்கும் ஓர் அரசு. வனவாசிகள். காலகேயர்கள் போல ஒரு வில்லன் கூட்டம். இதை வைத்துக் கொண்டு மேக்கிங்கிலேயே ஒரு படத்தில் அசத்தி விட முடியுமா? முடியும் என்று நிரூபித்துள்ளனர் காந்தாரா 1 படக்குழு.
கடைசி இருபது நிமிடங்களில் மட்டும் முற்றிலும் வேறு பரிமாணம் காட்டிய படம் காந்தாரா. அதன் முந்தைய நிகழ்வுகளைச் சொல்லும் படமாக இது. மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள ஓர் இடம். ஈஸ்வர பூந்தோட்டம். கடவுள் வசிக்கும் இடமான அதில் அற்புதச் சக்திகள் மறைந்துள்ளது. மூலிகைகள் நிறைந்துள்ளது என அதைத் தேடி ஆக்கிரமிக்க நினைக்கிறான் ஓர் அரசன்.
அதில் அவன் இறக்கிறான். அந்தக் காட்டிலேயே வசித்து வரும் கூட்டம் தான் ரிஷாப் ஷெட்டி வகையறா. ஒரு கட்டத்தில் இருக்கும் இடத்தை விட்டு நகரம் நோக்கிச் செல்கிறார்கள். அங்கு அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், சந்திக்கும் மனிதர்கள், அதனால் இவர்கள் வாழ்வில் நடக்கும் மாற்றங்கள் தான் காந்தாரா 1. இதில் கடவுள் எங்கே வந்தார் என்று கேட்பவர்களுக்கு? காத்திருங்கள்.
உண்மையில் அந்தக் கடைசி இருபது நிமிட ருத்ரதாண்டவத்தை விட்டுவிட்டால் காந்தாரா மிகச் சாதாரணமான ஒரு படம் தான். ஆனால், அந்தக் கிளைமாக்ஸ் தான் அந்தப் படத்தை ஓர் அனுபவமாக மாற்றி ரசிகர்களைத் திருப்பி அனுப்பியது. அதன் இரட்டிப்பு அனுபவங்கள் இதில் கிடைக்க வேண்டும் என்று தீயாய் வேலை செய்திருக்கிறார்கள். அது படத்தின் குறிப்பிற்காக இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் பிரம்மாண்டமாக வெளிப்படுகிறது.
ஒரு தேவாங்கு தலையை உயர்த்திப் பார்த்துவிட்டுப் பின்வாங்கிச் செல்லும். அந்த ஒரு காட்சி முத்தாய்ப்பாகச் சொல்லலாம். மலைப்பாதைகளில் தேர் ஓடிவரும் காட்சி, காடுகளில் நடக்கும் சண்டைக்காட்சிகள், புலி வரும் காட்சிகள், பூதக்கோலா போல இதில் குளிகா எனப்படும் அருள் வரும் காட்சிகள் என ஒவ்வொன்றும் அட்டகாசம். கடைசி அரைமணி நேரம் திரையை விட்டுக் கண்களை எடுக்க விடாமல் கட்டிப் போடுகிறார்கள். இசை, எடிட்டிங், சண்டைப்பயிற்சி, வி எப் எக்ஸ், நடிப்பு எனப் புல்லரிக்க வைத்து விடுகிறார்கள். வராகரூபம் பாடல்களும் காட்சிகளும் ஊன்றிப் பார்ப்பவர்களுக்குக் கண்ணீர் தளும்பிவிடும் சாத்தியம் அதிகம்.
இரண்டாவது பாகம் என்றாலே தலையைத் தொங்கப் போடும் திரையுலகில், அந்நிய மொழிப்படங்கள் குறிப்பாக த்ரிஷ்யம், புஷ்பா, கே ஜி எப், பாகுபலி, இப்பொழுது காந்தாரா என அனைத்துப்படங்களும் கல்லா காட்டுகின்றன. இந்தப் படங்களில் பொதுவான சிறப்பு அம்சம் எது என்றால், அது கிளைமாக்ஸ் தான். படத்தின் முதல்பாதி எப்படி இருந்தாலும் இரண்டாம் பாதியும் முடிவும் நன்றாக அமைந்து விட்டால் படம் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடுகிறது அல்லது மோசமான படம் என்ற பெயரிலிருந்து தப்பிவிடுகிறது.
இதிலும் அதே போல் தான். முதல் பாதி இலக்கின்றி நகர்வது போலத் தோன்றுகிறது. அந்தச் சண்டைக் காட்சிகளும், தேர் காட்சிகளும் தவிரப் பெரிதாக ஒன்றுமில்லை. நகைச்சுவை என்ற பெயரில் நடக்கும் விஷயங்கள் தெரியாத முகங்களால் ரசிகர்களுக்கு ஒட்டவில்லை. கன்னட ரசிகர்கள் வேண்டுமெனில் ரசிக்கலாம். இடைவேளைக்குச் சற்று முன் தொடங்கும் பரபரப்பு முழுதும் தொடர்கிறது. அது தான் இதன் மிகப்பெரிய பலம்.
நாயகனே இயக்குநராக இருக்கும் பொழுது லாபமும் அதிகம் சிக்கல்களும் அதிகம். வெற்றி, தோல்விக்குக் கண்டிப்பாகப் பொறுப்பேற்றே ஆக வேண்டும். 'இது என்னுடைய கனவு. இதை எடுத்தே தீருவேன்' என்று இறங்கி அடித்த விதத்தில் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் ரிஷப் ஷெட்டி. ஹொம்பாலே நிறுவனம் கதைகள் தேர்வில் நல்ல கவனம் செலுத்துகின்றனர்.
பணம் செலவழிக்கவும் தவறுவதில்லை. மிகப்பெரிய நிறுவனமான லைகா சுணங்கிப் போனது கதைத் தேர்வில் தான். பெரிய நடிகர்கள் இருந்தால் மட்டும் போதும் என்று அவர்கள் நினைத்தது தான் அவர்கள் தவறு. அதை ஹொம்பாலே செய்வதில்லை. அல்லது சுதாரித்துக் கொண்டுவிட்டார்கள்.
நூற்று இருபத்து ஐந்து கோடி செலவில் இப்படியொரு பிரம்மாண்டமான படைப்பு கிடைக்கிறது என்றால் அதைச் செய்வதில் தவறில்லை. முழுக்க கடவுள் தொடர்பான கதை என்பதால் லாஜிக் எல்லாம் மக்கள் பார்க்கப் போவதில்லை. காவல் தெய்வம் குறித்துப் பேசும் கதையில் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம், அவர்கள் விளைபொருள்களை விற்பதில் நடக்கும் ஏமாற்று வேலைகள், தீண்டாமை போன்ற பல விஷயங்களைக் கலந்து கட்டிச் சொல்லியிருக்கிறார்கள்.
நடிப்பு என்றால் ஜெயராம், ருக்மிணி வசந்த் இருவருக்கும் நல்ல வாய்ப்பு. அதை அவர்கள் சரியாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். குல்ஷன் தேவயா தனது அலட்டல் இல்லாத நடிப்பால் கவர்கிறார். அஜ்னீஷ் லோகநாத் இசையில் அரவிந்த் காஷ்யப் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரம்மாண்டம் தெரிகிறது. சண்டைக் காட்சிகளில் எடிட்டிங்கில் அசத்தியிருக்கிறார் தொகுப்பாளர் சுரேஷ் சங்கலான்.
அகன்ற திரைகளில் குடும்பத்துடன் (குழந்தைகள் தவிர்த்து) பார்த்து மகிழ ஒரு நல்ல திரை அனுபவம் தான் காந்தாரா 1. இதற்கு அடுத்து இன்னொரு பாகம் வர இருக்கிறது என்பது கூடுதல் செய்தி.