விமர்சனம்: காந்தாரா: சாப்டர் 1
ரேட்டிங்(3.5 / 5)
நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காந்தாரா: சாப்டர் 1 வெளியாகி உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற காந்தாரா படத்தின் முந்தைய பகுதியாக இப்படம் வெளியாகி உள்ளது. ஒரு சிறுமி ஒருவர் தெய்வத்தை பற்றி கேள்வி எழுப்புவதுடன் படத்தின் கதை தொடங்குகிறது. சில நூற்றாண்டுகள் பின்னோக்கி கதை தொடங்குகிறது.
கர்நாடகாவில் ஒரு பகுதியான பங்கராவை ஆண்டு வரும் மன்னர் விஜயேந்திரன் காந்தாரா காட்டிலுள்ள வளங்கள் நிறைந்த ஈஸ்வர தோட்டத்தை அபகரிக்க முயல்கிறார். ஒரு அமானுஷ்யம் மன்னரை கொன்று விடுகிறது. மன்னனின் மகன் ராஜசேகரன் மன்னராகிறார். இதற்கிடையில் காந்தாரா காட்டில் உள்ள மலைவாழ் மக்களின் தலைவன் பர்மே தம் மக்களின் உரிமைக்காக போராடுகிறார். பங்காராவில் உள்ள துறைமுகத்தை கைப்பற்றி வியாபாரம் செய்கிறார். மன்னர் ராஜசேகரன் வயோதிகத்தால் தன் மகன் குலசேகரனை அரசனாக்குகிறார்.
குலசேகரன் குடி, தீய பழக்கங்கள் என இருக்கிறார். ஒரு நாள் பர்மே இல்லாத நேரத்தில், காந்தாரா காட்டிற்குள் புகுந்து அங்குள்ள பழங்குடி மக்களை தாக்கி கொல்கிறார். இதனால் கோபம் கொள்ளும் பர்மே குலசேகரனை கொலை செய்து விடுகிறார். இந்த பிரச்சனை என்ன ஆனது? ராஜசேகரன் என்ன செய்தார் என்று சொல்கிறது காந்தாரா: சாப்டர் 1.
படத்தின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் S. காஷ்யப், ஆடை அலங்கார டைரக்டர் பிரகதி ஷெட்டி, ஆர்ட் டைரக்டர் தரணி கங்கே புத்ரா, இசையமைப்பாளர் அஜனீஷ் லோக் நாத் இந்த மூவருக்கும் இந்த படத்தை பிரமாண்டாமான ஒரு காட்சி அனுபவமாக தந்ததில் மிக முக்கிய பங்கு இருக்கிறது. காந்தாராவின் மர்மம் நிறைந்த காடுகள், துறைமுகம், ஆடைகள், நகர வீதிகள் என ஒவ்வொரு காட்சி வரும் போதும் படத்தின் தொழில்நுட்ப குழுவின் உழைப்பு தெரிகிறது.
அமானுஷ்யம், துறைமுகம் கைப்பற்றுதலுக்காக்கான போராட்டம், மன்னரின் இயலாமை என படத்தின் முதல் பாதி மிக சிறப்பாக உள்ளது. ஆனால் இரண்டாம் பாதியின் கதை மிக சாதாரணமாக பழிவாங்கும் கதை போல் சென்று விடுகிறது. இரண்டாம் பாதியில் வரும் பல காட்சிகள் கே ஜி எப், பாகுபலி படத்தை பார்த்தது போல் உணர்வை தருகிறது. குறிப்பாக இரண்டாவது பாதியில் வரும் சண்டை காட்சிகள் பாகுபலி சண்டை காட்சிகளை ஒத்து போகிறது.
மூன்று மணி நேரம் நீளம் கொண்ட இந்த படத்தில் முதல் 1.30 மணி நேரத்திற்கு மட்டுமே மிக வலுவான திரைக்கதை இருக்கிறது. இரண்டாம் பாதி வலுவான திரைக்கதை இல்லாமல் திணறுகிறது. சிறப்பான விஸுவல் இருந்தும் இதற்கு ஏற்றாற் போல் கதை இரண்டாம் பாதியில் இல்லாததால் இரண்டாம் பாதி இந்த விஸுவல்களே ஓவர் டோஸ் போல் இருக்கிறது.
படத்தில் பலர் நடித்திருந்தாலும் ஒரு 'ஜாலி ராஜா குலசேகாரனாக' வரும் குல்ஷன் நடிப்பில் முன்னணியில் இருக்கிறார். மக்களை பற்றி கவலைப்படாத மன்னரை நடிப்பில் கண் முன் கொண்டு வருகிறார். இளவரசியாக வரும் ருக்மணி தலைமை பண்பு கொண்டுள்ள ஒரு பெண்ணை நடிப்பில் தந்துள்ளார். டைரக்டரும் ஹீரோவும் ஆன ரிஷப் ஷெட்டி பல காட்சிகளில் நன்றாக நடித்திருந்தாலும் பஞ்சுருளி தெய்வம் 'உள்ளே வந்து இறங்கும்' காட்சியில் ரிஷப் வேறொரு மனிதராக மாறிவிடுகிறார்.
பல கோடியில் செலவு செய்த தொழில்நுட்ப காட்சிகளுக்கு தந்த முக்கியத்துவம் கதைக்கு தந்திருந்தால், கடந்த 2022 ல் வெளியான காந்தாரா போல் இப்போது வெளியாகி உள்ள காந்தாரா: சாப்டர் 1 படமும் பேசப்பட்டிருக்கும்.