
நடிகர் சாருஹாசனின் மகளும், இயக்குநர் மணிரத்தினத்தின் மனைவியுமான நடிகை சுஹாசினி தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்ற தற்போது இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.
மேலும், 1995-ம் ஆண்டு இந்திரா திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராகவும் முத்திரை பதித்தார். நடிகை சுஹாசினி 1980-ம் ஆண்டு 'நெஞ்சத்தை கிள்ளாதே' என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் நடிகையாக அறிமுகமானார். 1985-ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் இவர் நடித்த சிந்து பைரவி என்ற திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுத்தந்தது. இவர் 1988-ல் இயக்குநர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு நந்தன் என்னும் ஒரு மகன் உள்ளார்.
நடிகை சுஹாசினி அவரது கணவர் மணிரத்னத்துடன் சேர்ந்து 1997-ம் ஆண்டு ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
சுஹாசினி மணிரத்னம், 2010-ம் ஆண்டு ‘நாம் அறக்கட்டளை’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவி, பின்தங்கிய நிலையில் உள்ள விதவை அல்லது கணவரால் கைவிடப்பட்ட ஒற்றை பெண்களை தொழில்முனைவோராக மாறுவதற்காக பாடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகை சுஹாசினி தனக்கு இருந்த காச நோய் வியாதி குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளார். இது குறித்து நடிகை சுஹாசினி மணிரத்னம் கூறும்போது, தனக்கு ஆறுவயதிலேயே ‘டி.பி' பிரச்சினை வந்ததாகவும், அதற்கு சிகிச்சை எடுத்த பிறகு எல்லாம் சரியாகி விட்டது என்றார். ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து தனது 36 வயதில் மீண்டும் அந்த வியாதி வந்து விட்டது என்றும் அதன் காரணமாக தனது எடை திடீரென்று அதிகரித்து விட்டதாகவும் கூறினார். அதுமட்டுமன்றி இதனால் கேட்கும் திறனிலும் பிரச்சினை ஏற்பட ஆரம்பித்ததாகவும். மீண்டும் சிகிச்சை எடுக்க ஆரம்பித்த பிறகு மெல்ல மெல்ல காச நோய் பாதிப்பு குறைந்து தற்போது முழுமையாக குணமாகி விட்டதாகவும் கூறினார்.
வெளியே சொல்வதற்கு கௌரவ குறைச்சலாக நினைத்ததால் இதை அப்போது யாருக்கும் தெரியாமல் மறைத்து விட்டதாகவும், இந்த நோய்க்கு ஆறு மாதங்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். எனவே காசநோய் வந்தால் யாரும் அலட்சியமாகவோ, கௌரவ குறைச்சலாகவோ நினைக்காமல் உடனடியாக உரிய சிகிச்சை எடுக்க வேண்டும் என்று கூறிய அவர், எனது வியாதியை சமூகத்துக்கு மறைக்கக்கூடாது என்பதற்காகவே வெளியே சொல்வதாகவும் அவர் கூறினார்.
நடிகை சுஹாசினி நோயில் இருந்து குணமடைந்ததற்கு வாழ்த்து கூறிய ரசிகர்கள், ஒரு பிரபலமான செலிபிரிட்டி உண்மையை ஒளிவுமறைவு இல்லாமல் பொதுவெளியில் தைரியமாக கூறியதை பாராட்டியும் வருகின்றனர்.