
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது வசீகரம், நடிப்புத் திறன், கவர்ச்சி மற்றும் தொற்றுப் புன்னகையால் உலகளவில் மில்லியன் கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார். இவர் 'நேஷனல் க்ரஷ் ஆஃப் இந்தியா' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். இவர் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்ததன் மூலம் 'பான் இந்தியா' நடிகையாவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா-2 திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது வேலையை எப்பொழும் அர்ப்பணிப்புடன் செய்வதால் தான் நம்பர் 1 நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இந்நிலையில் சாவா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்காக மும்பை செல்வதாக ஹைதராபாத் விமான நிலையத்தில் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் ராஷ்மிகா காலில் கட்டுடன் இருந்தார். மேலும் அவர் காரில் இருந்து வெளியே வரும்போது நிற்கவும், நடக்கவும் மிகவும் சிரமப்பட்டார். பின்னர் அவர் தனது குழுவினரின் உதவுடன் நொண்டியபடி வந்து சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டார்.
யாரும் தன்னை அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக நடிகை ரஷ்மிகா சாதாரண உடையில் தலையில் தொப்பி மற்றும் முகக்கவசம் அணிந்து தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டார்.
சாவா படத்தின் டிரெய்லர் வெளியீட்டில் கலந்து கொள்வதற்காக மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தார் ராஷ்மிகா மந்தனா. சாவா படத்தின் ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சில வாரங்களுக்கு முன்பு, ஜிம்மில் பயிற்சியின் போது தனது கால்களில் காயம் ஏற்பட்டதாக நடிகை ராஷ்மிகா கூறியிருந்தார். மேலும் காலில் காயத்துடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்திற்கு கீழே எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க, என்னால் 2,3 வாரம் நடக்கமுடியாது என்று பதிவிட்டிருந்தார். மேலும் இதனால், நான் எவ்வளவு மனவேதனை அடைந்தேன் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
நடிகை ராஷ்மிகா தனது காயம் காரணமாக படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாமல் தாமதம் ஏற்பட்டதால், வரவிருக்கும் சிக்கந்தர், தாமா மற்றும் குபேரா படங்களின் இயக்குனர்களிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் விரைவில் குணமடைந்து படப்பிடிப்புக்கு திரும்புவேன் என்று உருக்கமாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் ரசிகர்களுக்கு அவருக்கு "நீங்கள் விரைவில் குணமடைவீர்கள்", மற்றும் "கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்" போன்ற கருத்துக்களை பதிவிட்டு ஆறுதல் கூறியிருந்தனர்.
நடிகை ராஷ்மிகா மந்தனா, சல்மான் கானுக்கு ஜோடியாக சிகந்தர் படத்தில் நடிக்கிறார். இவருடன் காஜல் அகர்வால், சத்யராஜ், ஷர்மன் ஜோஷி மற்றும் பிரதீக் பப்பர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சஜித் நதியாத்வாலா தயாரித்துள்ள சிகந்தர் திரைப்படம் வரும் மார்ச் 30-ம்தேதி ஈத் பண்டிகையின் போது திரையிடப்பட உள்ளது.
இது தவிர, தனுஷ், நாகார்ஜுனா, ஜிம் சர்ப் மற்றும் தலிப் தஹில் ஆகியோருடன் இணைந்து நடிக்கும் சேகர் கம்முலாவின் குபேரா படத்திலும் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
நவாசுதீன் சித்திக் மற்றும் ஆயுஷ்மான் குரானா நடித்த ஆதித்யா சர்போத்தாரின் தாமா படத்திலும் நடிகை ராஷ்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் கதாநாயகியாக நடித்த சாவா திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ம்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.