
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் முன்னாள் கேப்டன் மன்சூர் அலி கான் பட்டோடி மற்றும் பாலிவுட் நடிகை ஷர்மிளா தாகூரின் மகன் ஆவார். அவர் 2012-ம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
54 வயதான பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான், அவரது மனைவி கரீனா கபூர் கான், அவர்களது மகன்கள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பாந்த்ரா வெஸ்டில் உள்ள பன்னிரெண்டு அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு மாடிகளில் வசிக்கின்றனர்.
கடந்த ஜனவரி 16-ம்தேதி அதிகாலை நடிகர் சைஃப் அலிகான் அவரது இல்லத்தில் ஊடுருவிய நபர் ஒருவரால் ஆறு முறை கத்தியால் குத்தப்பட்டதில் கழுத்து மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் பலத்த காயம் அடைந்த அவர் லீலாவதி மருத்துவமனையின் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது முதுகுத்தண்டில் இருந்து 2.5 அங்குல பிளேடு அகற்றப்பட்டது. கழுத்திலும், கையிலும் ஏற்பட்ட காயத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. சைஃப் அலிகான் உடல் நல்ல முன்னேற்றம் அடைந்த பிறகு ஜனவரி 17-ம்தேதி அவர் ICUவில் இருந்து சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் உடல் நலம் தேறி வருவதாகவும், ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சைஃப் அலிகானின் கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர். நடிகர் சைஃப் அலிகானை தாக்கியவர் வங்காளதேசத்தை சேர்ந்த முகமது ஷரிபுல் இஸ்லாம் என்றும் இந்தியாவுக்கு வந்து தனது பெயரை பிஜோய் தாஸ் என்று மாற்றிக்கொண்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
கைதானவரின் பையில் இருந்து ஒரு சுத்தியல், ஸ்க்ரூ டிரைவர், நைலான் கயிறு மற்றும் சில பொருட்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். சயீப் அலிகானை கத்தியால் குத்திய விவகாரத்தில், வெறும் திருட்டு நோக்கம் மட்டுமே இருப்பதாக போலீசார் நம்பவில்லை என்பதால் முகமது ஷரிபுல் இஸ்லாமிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மும்பை லீலாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நடிகர் சைஃப் அலி கான் 5 நாட்கள் கழித்து வீடு திரும்பியுள்ளார். முதுகில் கத்தியால் குத்தப்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதிலும், நடிகர் சைஃப் அலி கான் சக்கர நாற்காலியைத் தவிர்த்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் இருந்து வெளியில் வரும் போது சைஃப் அலி கான் தனக்காக வெளியே காத்திருந்த ரசிகர்களை கண்டதும், ஒரு கணம் நின்று, அவர்களை நோக்கி சிரித்த படி கைஅசைத்து விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
சைஃப் அலி கான் திரும்புவதற்கு முன்பு அவரது வீட்டில் புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பான விசாரணை தொடர்வதால், போலீஸ் அதிகாரிகள் அவரது வீட்டைச் சுற்றி பாதுகாப்பை அதிகரித்து தடுப்புகளை அமைத்துள்ளனர். சைஃப் அலி கான் தற்போது வீடு திரும்பி உள்ளதால் போலீசார் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சைஃப் அலி கான் தற்போது குணமடைந்து வந்தாலும் அவர் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதால் அவர் நடித்து வரும் 8 படங்களின் படப்பிடிப்புகள் தாமதமாகும் நிலை உருவாகி உள்ளது. தற்போது நடிகர் சைஃப் அலி கான் இந்தியில் மட்டுமன்றி தென்னிந்திய படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.