
படவா, கிங்ஸ்டன் இரண்டு படங்களின் விமர்சனங்களை இங்கே பார்க்கலாம்.
இப்போது தமிழ் சினிமாவில் "விவசாயம் காப்போம் "ன்னு முழங்கறதுதான் ட்ரெண்ட் போல. இது மாதிரி விவசாயத்தை காப்பாற்ற சொல்லும் படமாக வந்திருகிறது படவா. நந்தா இந்த படத்தை இயக்கி உள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தில் வேலைக்கு எதுவும் போகாமல், சிறு சிறு திருட்டு வேலைகள் செய்து கொண்டு ஊருக்கு பிரச்சனையாக இருக்கிறார்கள் ஹீரோ விமலும் நண்பர் சூரியும். இவர்கள் இம்சை தாங்காமல், ஊர் ஒன்று சேர்ந்து பணம் சேர்த்து விமலை மட்டும் மலேசியா அனுப்பி வைக்கிறது. சில ஆண்டுகள் கழித்து திரும்பி வரும் விமலை ஊர் பெரிய அளவில் வரவேற்று ஒரு மனதாக ஊர் தலைவர் ஆக்குகிறது. அந்த ஊரில் செங்கல் சூலை வைத்து நடத்தும் KGF ராம், மக்களுக்கு தண்ணீர் கிடைக்க கூடாது, மழை பெய்யக்கூடாது என்பதற்காக கருவேல மரம் வளர்கிறார். இதை எதிர்க்கிறார் விமல். முடிவு என்ன? வழக்கம் போல் தான்.
படத்தில் வில்லனை அறிமுகம் செய்யும் போது கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ பேசும் வசனம் வரை நம்மால் சுலபமாக சொல்லி விட முடிகிறது. நாம் பார்த்து சலித்த காட்சிகள் தான் படம் முழுவதும் இருக்கின்றன. கேமரா, இசை பற்றி ஏதாவது பேசலாம் என்றால் சொல்ம் படி ஒன்றும் இல்லை. பல படங்களில் கார்ப்பரேட் கம்பெனி விவசாயத்தை அழிப்பாங்க. இந்த படத்தில் கருவேல மரம் வளர்த்து அழிக்கிறாங்க. இதுதான் வித்தியாசம். இருந்தாலும் விமல் - சூரி நகைச்சுவை ஓரளவு ஒர்க் அவுட் ஆகி உள்ளது. சொந்த வீட்டிலேயே கோழி திருடுவது, எல்லோர் வீட்டு கதவை தட்டி விட்டு ஓடி விடுவது போன்ற காட்சிகளில் நகைச்சுவை நன்றாக உள்ளது.
கிங்ஸ்டன் படம் எப்படி இருக்குன்னு பார்ப்போம்.
கோகுல் பிரகாஷ் இப்படத்தை இயக்கி உள்ளார். கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் ஊர் மக்களை கடலுக்குள் இருக்கும் 'ஏதோ ஒன்று ' கொன்று விடுகிறது. கடலுக்குள் இருக்கும் மர்மத்தை கண்டு பிடிக்க கடலுக்குள் களம் இறங்குகிறார் ஹீரோ கிங் (G.V. பிரகாஷ்). என்ன கண்டுபிடித்தார் கிங் என விடை சொல்கிறது கிங்ஸ்டன்.
படத்தில் ஒரு பிளாஷ் பேக் வருகிறது. அந்த பிளாஷ் பேக் நமக்கு புரிவதற்குள் இன்னொரு பிளாஷ்பேக் வந்து குழப்புகிறது. நாம் எந்த படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற சந்தேகம் வருகிறது. பேய், தங்கப்புதையல், பழி வாங்குதல் என பல விஷயங்களை ஒரே படத்தில் வைத்து குழப்பி இருக்கிறார் டைரக்டர். ஹீரோ எங்கே சென்றாலும் ஹீரோயின் கூடவே செல்ல வேண்டும் என்ற தமிழ் சினிமாவின் வழக்கமான பார்முலா இந்த படத்திலும் உள்ளது. ஹீரோ கடலுக்கு போவதற்கு முன்பே ஹீரோயின் திவ்யா பாரதி கடலுக்குள் சென்று 'உள்ளேன் அய்யா ' என்று ப்ரெசென்ட் போடுகிறார்.
Gv பிரகாஷிற்கு கிங்ஸ்டன் இருபத்தைந்தாவது படம். கதையை தேர்ந்தெடுத்த விதத்திலும், நாட்டிப்பிலும் எந்த வித்தியாசத்தையும் காட்டவில்லை ஜி வி பி. ஜி வி க்கு இது எண்ணிக்கையில் ஒரு படம் மட்டுமே. படத்தில் பலர் நடித்திருந்தாலும் யார் நடிப்பும் மனதில் நிற்கும்படி இல்லை.
கோகுல் பெனாயின் ஒளிப்பதிவு மட்டுமே பிரமிக்க வைக்கிறது. கடலின் ஆழத்தில் படம் பிடித்த விதமும், புயலின் போது படகு நகரும் விதத்தையும் படம் பிடித்ததை பார்க்கும் போது நாமே கடலுக்குள் இருப்பதை போன்று உணர்வு வருகிறது. ஜிவி பிரகாஷின் இசை சற்று பரவாயில்லை ரகம்.
இந்த இரண்டு படங்களிலும் நல்ல கதை, திரைக்கதை நஹி.