விமர்சனம்: கொலைச் சேவல் - தமிழ் நாட்டில் நடக்கும் ஒரு உண்மை கதை!
ரேட்டிங்(3 / 5)
ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகி வரவேற்பை பெற்ற தொடர் ஹார்ட் பீட். இந்த தொடரில் தனது சிறப்பான நடிப்பை தந்திருப்பார் ஹீரோயின் தீபா. தீபாவின் நடிப்பில் தற்போது கொலை சேவல் (Kolai Seval) என்ற படம் வெளியாகி உள்ளது. துதி வாணன் இயக்கத்தில் வந்துள்ள இந்த படத்தில் கலையரசன் ஹீரோவாக நடித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறார்கள் கலையரசனும், தீபாவும். இவர்கள் இருவரும் தம்பதிகள். தீபா கர்ப்பமாக இருக்கிறார். இந்த நேரத்தில் தங்களது குல தெய்வ கோவிலுக்கு சென்று நேர்த்தி கடன் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள் கலையரசனின் குடுமபத்தினர்.
இந்த குலதெய்வ கோவில் ஊருக்கு வெளியே ஒரு மலைப்பகுதியில் உள்ளது. மற்ற குடும்ப உறுப்பினர்கள் சிறிது முன்பாகவே கிளம்பி சென்று விடுகினர். சில மணி நேரம் கழித்து தீபாவும் கலையரசனும் செல்கிறார்கள். செல்லும் வழியில் தீபாவுக்கு ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்று உள்ளுணர்வு சொல்கிறது. இதை தீபா தனது கணவரிடம் பகிர்ந்து கொள்கிறார்.
தீபாவுக்கு, கலையரசன் தைரியம் தந்து கோவிலுக்கு அழைத்து செல்கிறார். அங்கே தீபா பயந்தது போலவே ஒரு மோசமான விஷயம் நடக்கிறது. அந்த விஷயம் என்ன என்று சொல்கிறது கொலைச் சேவல்.
படத்தின் முதல் பாதி பரபரப்பாக நகர்கிறது. இந்த பரபரப்பை உண்டாக்குவதில் முத்தையாவின் ஒளிப்பதிவு முக்கிய பங்கு வகிக்கிறது. 'ஏதோ ஒன்று நடக்க போகிறது என்ற உள்ளுணர்வை தீபா உணர்வது போலவே நம்மையும் உணர வைப்பதில் ஒளிப்பதிவின் பங்கு முக்கியமானது. ஒரு பயம் கலந்த உள்ளுணர்வை கேமராவின் கோணங்கள், நகரும் விதம் வழியாக நமக்கு கடத்தி விடுகிறார் முத்தையா.
படத்தின் கிளைமாக்ஸில் மனிதர்களுக்குள் இருக்கும் மிருகங்களை நமக்கு காட்டுகிறது. தமிழ்நாட்டில், குறிப்பாக தென் மாவட்டங்களில் நடக்கும் ஒரு மோசமான விஷயத்தை இயக்குனர் இந்த படத்தில் பேசி இருக்கிறார். இதை பிரச்சாரமாக இல்லாமல் ஒரு த்ரில்லர் தளத்தில் தந்துளார்.
தீபாவும், கலையரசனும் காதலிக்கும் போது நடக்கும் சம்பவங்கள் ரசிக்கும் படியாக உள்ளது. தீபாவின் நடிப்பு மிக பிரமாதமாக உள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் தீபா ரசிகர்களை அழவைத்து விடுகிறார்.
கலையரசன் ஒரு காதலனாக, அன்பான கணவனாக மிக சிறப்பாக தன் நடிப்பை தந்துள்ளார். வயதான தம்பதிகளாக வருபவர்கள், கஜராஜ், பால சரவணன் என நடித்தவர்கள் அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள்.
பின்னணியில் சில இடங்களில் இசை இல்லாமல் இருப்பதும் கூட சிறப்புதான். படத்தின் மேக்கிங் சிறப்பாக இருந்தாலும், என்ன காரணத்துக்காக சம்பவங்கள் நடைபெறுகிறது என முன்பே தெரியும் அளவில் ஸ்கிரிப்ட் இருப்பது ஒரு குறையே. இருந்தாலும் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் நடக்கும் விஷயத்தை சொன்னதற்க்காக இயக்குனரை பாராட்டலாம்.
கடைசியாக ஒரு விஷயம் - படம் நன்றாக இருந்தாலும், ஒரு சில இடத்தில வன்முறை சற்று அதிகமாக இருப்பதால் குழந்தைகள் இந்த கொலைச் சேவல் படத்தை பார்ப்பதை தவிர்க்கவும்.

