நாட்டாமை படத்தை தெரியாத தமிழக ரசிகர்களே இருக்க மாட்டார்கள். குறிப்பாக அதில் மிக்சர் சாப்பிட்டே இன்றளவும் ஃபேமஸாக இருக்கும் கதாபாத்திரம் மறக்கவே முடியாது. அவர் யாரென்பது குறித்து கே.எஸ்.ரவிகுமார் பேசியிருக்கிறார்.
பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பல ஹிட் படங்களைக் கொடுத்தாலும், யாராலும் மறக்கமுடியாத ஒரு படம் நாட்டாமை. 'நாட்டாமை கால வச்சா' என்று பாடலைக் கேட்டால், தமிழக மக்களுக்கு ஒரு புத்துணர்வு கிடைக்கும். குஷ்பு, மீனா என முன்னணி நடிகைகள் நடித்த இப்படத்தின் க்ளைமக்ஸ் காட்சிகளுக்கு அவ்வளவு ரசிகர்கள் உள்ளார்கள். இப்படம் ரிலீஸ் ஆனவுடன் தமிழகம் எங்கும் மூலை முடுக்குகளிலெல்லாம் ஓடியது.
அதேபோல் இன்றுவரை, தொலைக்காட்சியில் எப்போது போட்டாலும், புதிதாக பார்ப்பது போல பார்க்கும் ரசிகர்கள் பட்டாளம் மிக அதிகம்.
இந்த நாட்டாமை படத்தின் கதை முதலில் மம்முட்டியிடமே கூறப்பட்டது. ஆனால், அவர் வேறு ஒரு படத்தில் பிஸியாக இருந்ததால், நடிக்கவில்லை. அதன்பின்னர் இயக்குநர் மற்றும் நடிகருமான பார்த்திபனிடம் கதை கூறப்பட்டது. அவரும் அதே கதையைக் கூறியதால், வேறு ஒரு நடிகரிடம் கதை சொல்லப்பட்டது. அவர்தான் சரத்குமார். ஒருவழியாக சரத்குமார் அப்படத்தில் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டார். பின்னர் இப்படம் 1994ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
தமிழில் நன்றாக ஓடிய இப்படத்தில் பல கதாபாத்திரங்கள் இன்றளவும் ஃபேமஸாக பேசப்படுகின்றது. சின்ன கதாபாத்திரங்கள் கூட பெரிதளவு வரவேற்பை பெற்றன.
இந்த படத்தில் கவுண்டமணி ஒரு வீட்டிற்கு பெண் பார்க்க வந்திருப்பார். அவருடன் செந்திலும் வந்திருப்பார். செந்தில் உன்னோட அம்மாவ வர சொல்லுங்க என்று சொல்லுவார். அதற்கு கவுண்டமணி ஏன் பொண்ணோட அப்பா கிட்ட எல்லாம் பேச மாட்டியா என்று கேட்பார். அதற்கு செந்தில் அவர் வந்ததுல இருந்து சாப்பிட்டுகிட்டே இருக்காரு என்று பதில் சொல்வார்.
அவர்தான் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் கதாபாத்திரம். எந்த நபர் என்ன நடந்தாலும் எதையும் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறாரோ அவர்களையெல்லாம் இந்த மிக்சர் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு பேசுவார்கள்.
ஏராளமான மீம்ஸ் கூட வந்தன. அந்தவகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கே.எஸ்.ரவிகுமார் அந்த கதாபாத்திரம் குறித்து பேசியிருக்கிறார். “அவர் எப்போதும் படப்பிடிப்பில் ஏதாவது மிச்சர் முறுக்கு என்று சாப்பிட்டுக் கொண்டே தான் இருப்பார்.
ஏதாவது வேலை சொன்னால் இது என் வேலை கிடையாது, நான் எலக்ட்ரீசியன் வேலைதான் பார்ப்பேன் என்று சொல்வார். அவரைத்தான் இந்த கேரக்டரில் நடிக்க வைத்தேன்.” என்று பேசினார்.