ஒரு படத்தில் சிவாஜி கணேசனுக்கு அதிக சம்பளம் கொடுத்துள்ளார் இயக்குநர். அப்படி கொடுக்க சொன்னது இவர்தான் என்று இயக்குநர் சொல்லும்போது, ஆனந்த கண்ணீர் விட்டிருக்கிறார் சிவாஜி கணேசன்.
தமிழ் சினிமாவின் வேராக இருந்த இரண்டு நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி கணேசன். இருவரும் இரு வேறு ஸ்டைல்களை வைத்துக்கொண்டாலும், சம அளவு ரசிகர்களை பெற்றிருந்தார்கள். குறிப்பாக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிவாஜி கணேசன். அவர் கர்ணனாக நடித்து மக்கள் மனதில் அந்த கதாபாத்திரத்தைப் பதிய செய்தவர். மேலும் கட்டபொம்மன் போன்ற கதாபாத்திரங்கள் இன்றும் மக்களை ஈர்த்திருக்கிறது.
இவர் நடித்த படங்கள் ஏராளம், வயதான பிறகும் பல படங்களில் நடித்து வந்தார். அப்போதைய காலத்தில் அதிகபட்ச சம்பளமே லட்சம்தான். பிறகு அடுத்த கட்டம் வரும்போது அதாவது கமல் ரஜினி வரும்போது அவர்களுக்கு சம்பளம் கோடி கணக்கில் மாறினாலும், சிவாஜி வெறும் லட்சக் கணக்கில் மட்டுமே வாங்கி வந்தார். அவருக்கு ஒரு கோடி என்பதே எட்டாக் கனியாக இருந்தது. ஏனெனில், இந்த அளவு சம்பளம் கொடுக்கும் காலம் வந்தபோது அவருக்கு வயதாகிவிட்டது. கேமியோ ரோல்களிலும், அப்பா, அண்ணன் கதாபாத்திரங்களிலும் மட்டுமே நடித்து வந்தார்.
அப்போது ஒருமுறை கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் படையப்பா படம் உருவாகி வந்தது. அதில் சிவாஜி கணேசன், ரஜினிக்கு தந்தையாக நடிக்க ஒப்பந்தமானார். அப்போதும் சிவாஜி கணேசனுக்கு ஒரு பழக்கம் இருந்து வந்தது தன்னுடைய சம்பளத்தை இவ்வளவு தான் என்று சொல்லமாட்டாராம்,மாறாக தயாரிப்பாளர் இவருடைய நடிப்பிற்கு ஏற்ப கொடுக்கும் சம்பளத்தை வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
ஆனால், படையப்பா படத்தில் கே.எஸ்.ரவிகுமார் சிவாஜிக்கு ஒரு செக் கொடுத்திருக்கிறார். அதனை சம்பளமாக வாங்கி வீட்டுக்கு திரும்பிய சிவாஜி, அதனை தனது முதல் மகன் கையில் கொடுத்திருக்கிறார்.
அதனைப் பார்த்த அவர் ஷாக்காகி நின்றார். உடனே சிவாஜியிடம், “அப்பா இது 1 கோடிக்கான செக்” என்று கூறியிருக்கிறார். செக் மாறிவிட்டது என்ற பதற்றத்தில் கே.எஸ்.ரவிகுமாருக்கு போன் செய்து செக் மாறிவிட்டதாக கூறியிருக்கிறார்.
அப்போது கே.எஸ்.ரவிகுமார், “ இல்லை இது உங்களுக்குதான், ரஜினி சார் தான் இவ்வளவு சம்பளத்தை கொடுக்க சொன்னார்.” என்றார்.
தன் வாழ்நாளில் முதல்முறையாக இவ்வளவு சம்பளம் வாங்கிய சிவாஜி கணேசன் அதை நினைத்து ஆனந்த கண்ணீர் விட்டாராம்.