
ஒரு பிச்சைக்காரன் கையில் எண்ண முடியாத அளவு பணம் கிடைத்தால் என்ன ஆகும். இந்தியாவின் மிகப்பெரிய கோடிஸ்வரன் தெருவில் பிச்சை எடுக்கும் நிலை வருமா. இந்த இரண்டு கேள்விக்கும் பதில் தான் குபேரா.
தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிக்கா நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் இந்த இரண்டு கேள்விகளுக்கான விடையை மூன்று மணி நேரப்படமாக அலசியுள்ளது. திருப்பதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர் தனுஷ். சந்தர்ப்ப வசத்தால் கைதாகி சிறையில் இருப்பவர் நாகார்ஜுனா. இவர்கள் இருவரும் வில்லன் ஜிம் ஷரப் என்பவரின் அரசியல் விளையாட்டுக்களில் சிக்குகின்றனர். நடுக்கடலில் உள்ள எண்ணெய் வளத்தைக் கைப்பற்றத் துடிக்கும் வில்லன் அதற்கான சில வேலைகளில் ஈடுபடுகிறான். இவருக்கு உதவ பினாமி பெயர்களில் கறுப்புப் பணத்தைக் கைமாற்ற உதவுகிறார் நாகர்ஜுனா. அதற்காக அவர்கள் நான்கு பிச்சைக்காரர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். வில்லன் சதிவேலையை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொள்ளும் தனுஷ் தப்பிக்கிறார். ஒரு ஸ்டேஷனில் சந்திக்கும் முன் பின் தெரியாத ராஷ்மிக்காவின் உதவியோடு அவர் என்ன செய்கிறார் என்பது தான் கதை.
முதல் விஷயம் தனுஷ். இவரைத் தவிர இப்படியொரு கதாபாத்திரத்தில் இங்கு இருக்கும் எந்த நடிகரும் நடிக்கத் துணிய மாட்டார்கள் என்பது உறுதி. மூன்றே மூன்று உடைகள். உடைந்த வலது கை. ஒப்பனையில்லாத பாத்திரம். கடைசி வரை அந்தப் பாத்திரமாகவே வருகிறார். ஒரு நாயகனுக்கான எந்தவிதமான பலமும் இல்லாத ஒரு பாத்திரம். சண்டை கிடையாது. பாடல்கள் கிடையாது. ஸ்லோ மோஷனில் நடை கிடையாது. தேவா என்ற கதாபாத்திரம் தான் முன்னால் தெரிகிறது. போய் வா நண்பா பாடலில் அவர் போடும் ஆட்டம் கூட அப்படித் தான். ரஷ்மிகாவை தொடர்ந்து நச்சரிக்கும் போதும், நாகார்ஜுனாவை நம்பி ஓடும் போதும் சபாஷ் சொல்ல வைக்கிறார்.
நாகார்ஜுனா போன்ற ஒரு பெரிய நடிகர் கிடைக்கும்போது வரும் தடுமாற்றம் தான் சேகர் கம்முலாவிற்கும் வந்துவிட்டது. அவரை வில்லனாகக் காட்டுவதா, சண்டைக்காட்சிகள் தேவையா, ஜோடி வைக்கலாமா வேண்டாமா என்று பல குழப்பங்கள். அந்தப்பாத்திரம் ஏன் சிறையில் இருக்க வேண்டும். அவரை விடுவிப்பதற்காக மட்டும் வில்லனின் அவ்வளவு பெரிய சதிக்கு அவர் உடன்படுவது ஏற்புடையதாக இல்லை.
அதனால் தான் கூட்டி வந்த நபர்கள் ஒவ்வொருவராகக் கொல்லப்படுவதை உணர்ந்த பின் அவர்கள் முகம் பார்க்க இயலாமல் குற்ற உணர்வில் தவிக்கும் இடங்களில் நன்றாகச் செய்திருக்கிறார். கிங் நாகார்ஜுனா படத்தில் சண்டை இல்லாமல் இருப்பதாவது என்று கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி வைத்தது போல இருந்தது. சொல்லப்போனால் மொத்தப் படமும் சறுக்குவது அந்தக் கடைசி அரை மணி நேரத்தில் தான் என்று சொல்ல வேண்டும்.
ரஷ்மிகா நாயகி என்று சொல்லப்பட்டாலும் தனுஷிற்கு ஒரு தோழி என்ற நிலையில் தான் அவர் பாத்திரம் எழுதப்பட்டுள்ளது. முன் பின் அறியாத தனுஷ் சொல்படி எல்லாம் அவர் கேட்பது. அவர் தோழியிடம் தனது நிலைகுறித்து முறையிடுவது போன்ற இடங்களில் இவர் சற்று லூசோ என்று கூடத் தோன்றுகிறது. இவரது குடும்பம் குறித்தும், நாகார்ஜுனா ஏன் ஜெயிலுக்குப் போனார் என்பது குறித்தும் தெளிவில்லை. அநேகமாகக் குறைக்கப்பட்ட பதினைந்து நிமிடங்களில் அது போயிருக்கலாம்.
படத்தின் நீளம் தான் மிகப்பெரிய மைனஸ். கண்டிப்பாக அரை மணி நேரம் கத்தரி போட்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு பிச்சைக்காரனுக்கு முன் கதை சொல்கிறேன் என்று அடிக்கடி காட்சிகள் வருவது அலுப்பு.
பாவம் பாக்யராஜ். கௌரவ வேடத்தில் அவரும் பிச்சைக்காரராக வந்து போகிறார். இரண்டு காட்சிகளுக்குப் பிறகு தான் அவர் பாக்யராஜ் என்றே தெரிகிறது. அதே போல் தான் அழகம் பெருமாள், சாயாஜி ஷிண்டே, சுனைனா போன்றோரும்.
பிச்சைக்காரன் குபேரனாக இருப்பது என்பது ஒரு நல்ல முடிச்சு. இதை வைத்து ஒரு பரபர திரில்லராக இதைக் கொண்டு போயிருக்கலாம். அல்லது நெஞ்சை உருகும் நாடகமாக இருந்திருக்கலாம். இது இரண்டும் இல்லாமல் நிற்பது தான் பிரச்சினையே.
அவ்வளவு பெரிய பணக்காரராக இருக்கும் வில்லன் வேறு எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யமாட்டானா? ஒரு முன்னாள் சிபிஐ அதிகாரியாக இருந்தாலும் அவர்மேல் ஒரு கண் வைக்கமாட்டானா? இடம் தெரியாத தனுஷ் ஓர் உத்தேசமாக வில்லன் கெஸ்ட் ஹவுஸைக் கண்டுபிடிப்பது எப்படி? இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரை இறுதியில் வெளியில் ஒருவருக்குமா தெரியாது? என்று பல கேள்விகள் வந்து கொண்டே இருக்கின்றன.
கன்டின்யுட்டி பிரச்சினை காரணமாக ஒரு காட்சியில் சாக்ஸோடு இருக்கும் தனுஷ் அடுத்த காட்சியில் ஷூ அணிந்திருக்கிறார். இது பல காட்சிகளில் நடக்கிறது. ஆனால் ஒன்று... லாஜிக் என்ற வஸ்துவை அடியோடு மறந்து விட வேண்டும் உள்ளே நுழையும் போதே.
நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவும் டி எஸ் பியின் இசையும் படத்தைத் தாங்கி இருக்கின்றன. ஆனால் கத்தி பி ஜி எம் எல்லாம் உள்ளே வந்து போனது போல ஓர் உணர்வு. பாடல்கள் பெரிதாகக் கவரவில்லை. என்ன தான் இரண்டு மொழிகளில் எடுத்தோம் என்று இவர்கள் கூறினாலும் முக்கால் வாசி தெலுங்கில் தான் எடுத்திருக்கிறார்கள். சில காட்சிகள் மட்டுமே தமிழில் எடுத்திருப்பதாய் தெரிகிறது. களமும் தமிழ்நாட்டை விட்டு வெளியில் இருப்பதால் சற்று ஒட்டாமல் இருக்கிறது.
படத்தின் நீளத்தைக் குறைத்து பாத்திரங்களில் தெளிவைக் கூட்டியிருந்தால் மிகவும் நல்ல முயற்சியாக ஏன் ஒரு நல்ல வெற்றிப் படமாகக் கூட அமைந்திருக்கலாம். அந்த வாய்ப்பை இயக்குநர் கடைசியில் கோட்டை விட்டு விட்டார்.
முதலிலேயே சொன்னது போல ஒன்று ஸ்மார்ட்டான சண்டைப் படம், அல்லது த்ரில்லர் என்று ஒரு முடிவு எடுத்திருக்க வேண்டும். பிச்சைக்காரர்களின் கஷ்டங்களைச் சொல்ல வேண்டும் என்று எடுத்தால் போதாது. எதாவது தீர்வு சொல்ல முடியுமா. இவர் சொன்ன தீர்வைப் படத்தில் கூட ஏற்க முடியாது. நிஜத்தில் எங்கே ஏற்பது.
தனுஷ் என்ற ஒரு ராட்சச தனமான ஒரு நடிகரின் முயற்சிக்காக இந்தப்படத்தைப் பார்க்கலாம். அதுவும் மூன்று மணி நேரம் அமர்ந்து பார்க்கும் பொறுமை எனக்கு இருக்கிறது என்று நினைக்கும் ரசிகர்களுக்கு மட்டும். மற்றபடி கமர்ஷியல் பட ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் சில இருந்தாலும் அது அவர்களுக்கு முழுமையான திருப்தியைத் தராது என்று உறுதியாகச் சொல்லலாம்.
யார் கண்டது. படத்தின் நீளம் அதிகம் என்ற குரல் படக்குழுவினருக்கு எட்டி இதில் இன்னும் ஓர் அரை மணி நேரம் வெட்டினால் படம் பரவால்லப்பா பரபரன்னு போகுது என்ற வார்த்தையோடு ரசிகர்கள் வெளியில் வரலாம். பார்க்கலாம் வரும் நாள்களில் என்ன நடக்கப்போகிறது என்று.