
பலகோடி செலவு செய்து பெரிய பட்ஜெட்டில் பெரிய ஹீரோக்களை வைத்து எடுக்கும் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றி மற்றும் வசூலை தராமல் தோல்வி அடைந்து தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். ஆனால் சிறிய பட்ஜெட்டில் ஓரளவு அறிமுக ஹீரோக்களை வைத்து தயாரிக்கும் படங்கள் எதிர்பார்த்ததை விட வசூலில் சாதனை படைத்து வெற்றியடையும்.
அதற்கு நல்ல உதாரணம், மதகஜராஜா படத்தை சொல்லலாம். ரூ.15 கோடியில் தயாரிக்கப்பட்ட மதகஜராஜா திரைப்படம் 13 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியாகி ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த வரிசையில் கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் சத்தமில்லாமல் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
தமிழ் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களில் ஒருவர் மணிகண்டன். `காலா', `ஜெய்பீம்', `சில்லு கருப்பட்டி', `சில நேரங்களில் சில மனிதர்கள்' போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர், மணிகண்டன். 2023-ம் ஆண்டில் இவர் கதாநாயகனாக நடித்த `குட்நைட்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத்தொடர்ந்து வெளியான `லவ்வர்' படமும் ஹிட் அடிக்க, தமிழ் சினிமாவின் கவனிக்கப்படும் ஹீரோவாக மாறியுள்ளார். ஜெய் பீம் படத்தில் இவரது இயல்பான நடிப்பின் மூலம் சிறந்த நடிகர் என அனைவராலும் பாராட்டப்பட்டார்.
சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் உருவான குடும்பஸ்தன் திரைப்படத்தை நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கி இருக்கிறார். மணிகண்டன் மற்றும் சான்வே மேகனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் குரு சோமசுந்தரமும் ஒரு முக்கிய துணை வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு சுஜித் என். சுப்ரமணியம் செய்துள்ளனர். மற்றும் படத்தொகுப்பு கண்ணன் பாலு, வைஷாக் இசையமைத்துள்ளார்.
வழக்கமான மிடில் கிளாஸ் குடும்பக் கதைதான் என்றாலும் அந்தக் குடும்பத்திற்காக கதாநாயகன் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை சுவாரஸ்யத்துடனும், ஏராள நகைச்சுவையுடன் சொல்லிய விதம் தான் படத்தின் பெரும் பலம். மணிகண்டனின் இந்த படத்தில் மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் வேலை போனால் என்ன பிரச்சனைகள் வரும் என்பதை தனது எதார்த்த நடிப்பால் வாழ்த்து காட்டியிருக்கிறார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி வெளியான குடும்பஸ்தன் திரைப்படத்தின் 9-வது நாளில் (பிப்ரவரி 1) இந்திய அளவில் ரூ.13.70 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.