விமர்சனம்: குடும்பஸ்தன் - இவன் நம்ம ஆளுப்பா!
ரேட்டிங்(3.5 / 5)
ஏனுங்கோ நல்லா இருக்கீங்களா, இங்க வந்து உங்கள பாத்துபுட்டு போலாம்னு வந்தேனுங்க என கோவையின் கொங்கு தமிழை திரையில் நீண்ட இடைவெளிக்கு பின் கேட்கும் வாய்ப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளது குடும்பஸ்தன் படம்.
YouTube தளத்தில் 'நக்கலைட்ஸ்' மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த நக்லைட்ஸ் நடிகர்கள் பலர் இந்த குடும்பஸ்தன் படத்தில் நடிதித்திருக்கிறார்கள். ராஜேஷ்வர் காளிசாமி இந்த படத்தை இயக்கி உள்ளார்.
கோவையில் உள்ள ஒரு பிரிண்டிங் கம்பெனியில் வேலை செய்யும் இளைஞர் நவீன். தன் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு வருகிறார் நண்பனுக்கு ஒரு பிரச்சனையில் சப்போர்ட் செய்ய போக வேலையை இழக்கிறார். தனக்கு வேலை போனது யாருக்கும், குறிப்பாக தனது அக்கா வீட்டுகாரர்க்கு தெரிய கூடாது என்று எண்ணி வேலை போன விஷயத்தை மறைக்கிறார். ஆனால் இந்த விஷயத்தை அக்கா வீட்டுகாரரே வெளியே கொண்டு வர சொந்த பந்தங்கள் முன் அவமானப்படுகிறார் நவீன். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கடன் வாங்குகிறார். பேக்கரி கடை நடத்தி ஓரளவு முன்னேறும் போது தனது கடைக்கு எதிரிலேயே வேறொருவர் பேக்கரி கடையை திறக்கிறார். இதனால் நவீனின் பேக்கரி வியாபாரம் படுத்து விடுகிறது. ரியல் எஸ்டேட் பிஸ்னஸிலும் ஏமாற்றப்படுகிறார். இவரின் கையாலாகாத தனத்தால் மனைவி, அம்மா, அப்பா என அனைவரும் நவீனை வெறுக்கிறார்கள். இறுதியில் இந்த குடும்பஸ்தன் என்ன செய்தார் என்பதை கொஞ்சம் சோகமும் நிறைய காமெடியாகவும் சொல்லி இருக்கிறார் டைரக்டர்.
நகைச்சுவையும், செண்டிமெண்ட்டும் கலந்து இப்படி ஒரு குடும்ப கதையை பார்த்து ரொம்ப நாளாச்சு. பதிவு திருமணம் தொடங்கும் முதல் காட்சி முதல் குழந்தை பிறக்கும் கடைசி காட்சி வரை எங்கேயும் சலிப்பை ஏற்படுத்தாமல் செல்வது ஒரு பிளஸ் பாயிண்ட்.
செலக்ட் செய்து நடிக்க வைத்துள்ள அனைவருமே அச்சு அசலாக கேரக்டர்க்கு பொருந்தி போகிறார்கள். ஹீரோ மணிகண்டனின் அம்மாவாக நடிக்கும் குடசந்த் கனகம் நெற்றியில் பெரிய குங்கும பொட்டை வைத்து கொண்டு கண்ணை உருட்டி பேசுவதும், சாமியாடுவதும், வெட்கப்படுவதும் என நடிப்பில் அசத்தி விட்டார்.
விஜய் சேதுபதியை போல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் மணிகண்டன். மற்ற அனைவரும் காமெடி செய்தாலும் இவர் கேரக்டர் சீரியஸாக இருக்கிறது. பாத் ரூமில் தனியாக பேசிக்கொள்வதும், அம்மா, மனைவி என இருவரிடமும் மாட்டி கொண்டு தவிக்கும் போதும் ஒரு யதார்த்த நடுத்தர குடும்ப ஆண் மகனை மனதில் கொண்டு வந்து "ஆம்பளைங்க நாங்க படுற கஷ்டத்தையும் புரிஞ்சுகோங்க" என்று சொல்லாமல் புரிய வைக்கிறார்.
குரு சோமசுந்தரம் நடிப்பில் விவேக் சாயல் தெரிகிறது. ஹீரோயின் சான்வி நடிப்பில் சதம் அடித்து விட்டார். கணவனுடன் ரொமான்ஸ் செய்யும் போதும், கணவன் அவமானப் படும் போது துவளுவதும் என பக்குவப்பட்ட நடிகை போல் நடித்துள்ளார். எந்த ஆபாசமும் இல்லாமல் வன்முறை இல்லாமல் நிறைவான ஒரு குடும்ப பின்னணி திரைக்கதையில் வந்துள்ள படம் குடும்பஸ்தன். இந்த படத்தை பார்த்தால் 'இவன் நம்ம ஆளுப்பா' என ஆண்களில் பலர் சொல்லாம்.