க்ரிஷ் சங்கீதா காதல் கதைக்கு சிம்ரனின் பெரிய பங்கு இருக்கிறது என்று நடிகர் க்ரிஷ் கூறியிருக்கிறார்.
நடிகை சங்கீதா நடிகையாகவும் தொகுப்பாளராகவும், ரியால்டி ஷோக்களின் நடுவராகவும் இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்திருக்கிறார். அதிலும் அவர் நடித்த பிதாமகன், உயிர், தனம் போன்ற பல திரைப்படங்கள் இவருடைய நடிப்புக்கு தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்திருந்தது. ஆனால், சமீபத்தில் தமிழில் அவ்வளவாக படங்கள் நடிக்கவில்லை.
சில வருடங்களுக்கு முன்பு வெளியான நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் ஸ்ரீகாந்த்தின் மனைவியாக நடித்திருந்தார். இவர் 2009ம் ஆண்டு பாடகரான க்ரிஷை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
அந்தவகையில் க்ரிஷ் ஒரு பேட்டியில் தனது திருமணம் குறித்து பேசியிருக்கிறார். “முதலில் சங்கீதாதான் என்னிடம் வந்து காதலைத் தெரிவித்தார். ஒரு விழா மேடையில் சங்கீதா அவர்கள் தான் எனக்கு விருது கொடுத்ததார். அப்பொழுதே அவரை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அப்போது ஒன்றாக இருவரும் உணவருந்தினோம். அந்த பார்ட்டி முடிந்தவுடன் சங்கீதா என்னுடைய செல்போன் நம்பர் கேட்டார். நானும் கொடுத்தேன். அதன் பின் ஒரு நாள் திடீரென போன் செய்த சங்கீதா அவர்கள் நான் உங்களை காதலிக்கிறேன். இந்த காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நினைக்கிறேன் என கூறினார்.
இதனை நான் என் வீட்டில் கூறினேன். ஆனால், அவர்கள் சம்மதிக்கவில்லை. அதேபோல், சங்கீதா அவரது வீட்டில் என் போட்டோவை காண்பித்தார். அப்போது சிம்ரன் அங்கு இருந்தார். சிம்ரன்தான் இந்த பையன் பார்க்க நன்றாக இருக்கிறான் என்று கூறினார்.
சிம்ரன் இப்படி சொன்னதால், சங்கீதாவிற்கு ஒரு உத்வேகம் கிடைத்தது. என்ன ஆனாலும் என்னைதான் திருமணம் செய்துக்கொள்வேன் என்று பிடிவாதமாக இருந்தார்.” என்று பேசினார்.
க்ரிஷ் சிம்ரனின் இந்த உதவியை பெரிதாக நினைப்பதாக கூறினார். தன்னுடைய காதல் கதை நன்றாக இருப்பதற்கு இதுதான் காரணம் என்று பேசியிருக்கிறார்.