திரையுலகில் 50 ஆண்டுகள்: கே.பாக்யராஜுக்குப் நாளை பாராட்டு விழா.!!

கே. பாக்யராஜ் திரைத்துறையில் தனது 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில், கலைவாணர் அரங்கில் நாளை ‘பாக்யராஜ் 50’ என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Bhagyaraj
Bhagyaraj
Published on

தமிழ்த் திரையுலகில், சிறந்த நடிகர், வசன எழுத்தாளர் , திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட கலைஞனாக திகழ்பவர் கே.பாக்யராஜ்.

1977-ஆம் ஆண்டில் இயக்குனர் பாரதிராஜாவின் முதல் படமான ‘16 வயதினிலே’ திரைப்படத்தில் உதவியாளராக, தமது திரை பயணத்தை துவங்கிய கே.பாக்கிராஜ், அதனை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் பணியாற்றியதன் மூலம் பாரதிராஜாவிடமிருந்து திரைப்படக்கலை பயின்றார். இயக்குனராக இருந்த கே.பாக்கிராஜை 1979ல் வெளிவந்த ‘புதிய வார்ப்புகள்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தியவரும் பாரதிராஜாதான்.

அதே ஆண்டில் பாக்யராஜ் சுவர் இல்லாத சித்திரங்கள் என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, டார்லிங், டார்லிங், டார்லிங், முந்தானை முடிச்சு, சின்ன வீடு, எங்க சின்ன ராசா, இது நம்ம ஆளு போன்ற படங்களில் இயக்குனராகவும், ஹீரோவாகவும் முத்திரை பதித்ததுடன் இந்த படங்கள் அவருக்கு பெரிய வசூலையும், விருதுகளையும் பெற்றுத்தந்தன. தற்போது சிறந்த கதை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:
50 ஆண்டுகளை நிறைவு செய்த பாக்யராஜ்! விரைவில் விழா எடுக்கத் திட்டம்!
Bhagyaraj

ஒரு சராசரித் திரை நாயகனுக்கான இலக்கணங்களிலிருந்து விடுபட்டு, யதார்த்த உலகின் அன்றாட வாழ்க்கையில் பலங்களும் பலவீனங்களும் நிறைந்த மனிதனைச் சித்தரிப்பதாக அவரது கதாபாத்திரங்கள் அமைந்தன. அநேகமாக அவர் படங்களில் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளோ, வெளி நாட்டுப் படப்பிடிப்புகளோ, பெரிய தொழில் நுட்பங்களோ இருந்ததில்லை.

அவர் முழுக்க முழுக்க, தாம் தமக்கென அமைத்துக் கொண்ட பாணி, தமது திறமைகள், திரைக்கதை அமைப்பு ஆகியவற்றை மட்டுமே நம்பித் திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர்.

இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்ட பாக்யராஜ், 1988ஆம் ஆண்டு முதல் பாக்யா எனும் வார இதழ் ஒன்றினையும் நடத்தி வந்தார்.

பாக்யராஜ், உதவி இயக்குனராக பணியாற்றுவதற்கு முன்பே சினிமாவில் நுழைந்து விட்டதால் தற்போது 50 ஆண்டுகளைக் கடந்து விட்டது என அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் மகன் சாந்தனு ஆகியோர் இணைந்து அவருக்கு விழா நடத்த முடிவு செய்துள்ளனர். இதனை கொண்டாடும் விதமாக நாளை (ஜனவரி 7-ம்தேதி) அவரின் பிறந்தநாளில் சென்னை, கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடக்கிறது.

இதற்காக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களை சந்தித்துப் பேசியுள்ளதாகவும், அவர்கள் விழாவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படியுங்கள்:
கதைகளை எங்கிருந்து எடுக்கலாம் – பாக்யராஜ் ஓபன் டாக்!
Bhagyaraj

மேலும் கே.பாக்யராஜ், தனது மனைவியுடன் நேரடியாக சென்று பாராட்டு விழாவில் பங்கேற்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவர் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com