
'லோகா சாப்டர் 1: சந்திரா', படத்தின் பெயரைக் கேட்டாலே படத்திற்கு மேற்கொண்டு பாகங்கள் வரப்போகிறது என்று யூகிக்கலாம். இக்கதை ஒரு சூப்பர் ஹீரோ படம். அதன் நாயகி சந்திரா என்கிற யக்ஷி (vampire). படத்தின் ஆரம்பத்திலேயே “அவர்கள் நம்மோடு வசிக்கிறார்கள்” என்ற வாசகம் பிரயோகிக்கப் படுகிறது. சந்திரா மட்டுமல்ல, சந்திராவைப் போல அமானுஷ்ய சக்தி உள்ள மனிதர்கள் நம்மோடு வசிக்கிறார்கள் என்ற பொருளில். அவர்களை ஓர் இயக்கம் இயக்குகிறது, அதன் தலைவர் மூத்தோன். கையில் செங்கோலோடு, உருவகப் படுத்தப்படும் மூத்தோனின் செங்கோலை மட்டுமே நாம் கதையில் பார்க்க இயல்கிறது.
ஹாலிவுட்டின் அவெஞ்சர்ஸ் பிரான்ச்சைஸ் போல இந்த லோகோ பிரான்ச்சைஸ் இந்தியா முழுவதும் பரவ துல்கர் சல்மானின் வேஃபாரர் புரொடக்ஷன் ஹவுஸிற்கு வாழ்த்துகள். முதல் பாகத்தை பெண் சூப்பர் ஹீரோ வைத்து நம்பும்படியான படம் எடுத்ததற்கு ஒரு பெண்ணாக வாழ்த்துகள் தெரிவிக்கிறேன். சந்திராவாக நடித்த கல்யாணியின் கவர்ச்சியை மிகைப்படுத்தாமல், சக்தியை மிகைப்படுத்தியதற்கு பாராட்டுகள்.
பெங்களூருவில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வரும் சந்திரா, சூரிய ஒளியை வெறுத்து, இரவில் வலம் வருகிறாள். மனித இரத்தத்தினால் மட்டுமே உயிர்வாழும் ஓர் அமானுஷ்யப் பிறவி இவள் என்று திரைக்கதை மூலம் படிப்படியாக வெளிப்படுத்திய விதம் திரைக்கதையின் பெரிய பிளஸ். கள்ளியங்காட்டு யக்ஷி ‘நீலி’ என்று பேச்சுவழக்கில் நிலவி வரும் சிறு தேவதையான யக்ஷி ஜென்மஜென்மாமாக வாழ்ந்து, தீயவர்களை அழித்து, நல்லவர்களை காக்கிறாள் என்பதே படத்தின் ஒன்லைனர்.
உடலுறுப்புகளுக்காக மக்களை கடத்தும் ஒரு கும்பலை சந்திரா அழிக்கும் காட்சியை பார்த்து பயந்து போகும் சன்னி என்ற எதிர் வீட்டுப் பையனின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் நாச்சியப்பன் என்ற தீய போலீஸ் காரன் ஒருவனை சந்திரா கடிக்கிறாள். சந்திராவின் கடியை மீறி அபூர்வமாக பிழைக்கும் நாச்சியப்பனும் யக்ஷனாக மாறுகிறான். தீய யக்ஷனுக்கும், நல்ல யக்ஷிக்கும் நடக்கும் இறுதி யுத்தத்தில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதே மீதிக்கதை.
ஹாலிவுட்டில் அறிவியலும், வேற்றுகிரக வாசிகளும், வினோத உலோகங்களும், சூப்பர் ஹீரோ கதைகளில் பெரும்பங்கு வகித்தால், நம்மூர் கதைகளில் தெய்வமும், மாயாஜாலமும், பூர்வ ஜென்ம பந்தங்களும் பெரும் பங்கு வகிக்கும். இந்தத் திரைப்படத்திலும் அதற்கு பஞ்சம் இல்லை. யார் காதிலும் பூ சுற்றும் விதமாக இல்லாமல், நம்பும்படி, லாஜிகலாகவே, வழக்கமான மசாலாவுடன் கதை நகர்த்தப்படுகிறது. லோகா சீரிஸ் எந்த வித மத மற்றும் அரசியல் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்
நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவும், ஜேக்ஸ் பீஜாயின் இசையும் கதைக்கு வலு கூட்டுகிறது. படத்தின் ஒவ்வொரு பிரேமும் ரசிக்கும் படி கண்ணுக்கும் காதுக்கும் இனிமையாக இருக்கிறது. தேவைப்பட்ட இடங்களில் ரோமாஞ்சனம் கூட ஏற்படுகிறது. படம் மலையாள மொழியில் மூலமாக எடுத்திருந்தாலும், பாஹுபலி, RRR போல பேன் இந்தியா படமாகவே இதனை பார்க்க வேண்டும். நாச்சியப்பனாக நடித்திருக்கும் சாண்டி நடிப்பில் மிரட்டி இருக்கிறார். சிறப்புத் தோற்றங்களில் வரும் சூப்பர் ஹீரோக்கள் சாத்தன் (டோவினோ தோமஸ்) மற்றும் சார்லி (துல்கர் சல்மான்) அடுத்தடுத்து பகுதிகளில் நாயகர்களாக வரக்கூடும். சமீபத்தில் நான் பார்த்த மாஸ் படங்களிலேயே, காதில் பஞ்சு வைக்காமல், மூர்க்கம் தாங்காமல் கண்களை மூடிக்கொள்ளாமல் பார்த்த படம் இது என்றால் அது மிகையல்ல.
கதையின் பலவீனம் என்று பார்த்தால் சதா குடியிலேயே மிதக்கும் எதிர்வீட்டுப் பையன் சன்னி மற்றும் அவனது இரண்டு நண்பர்களின் ட்ராக். கதையின் சுவாரசியத்தையும் வேகத்தையும் அது குறைக்கிறது. ஆவேசம் திரைப்பட பாணியில் மூன்று குடிகார நண்பர்களை நகைச்சுவைக்காக நுழைத்து இருக்கிறார்கள். குழந்தைகள் அதிகம் ரசித்து பார்க்கக்கூடிய சூப்பர் ஹீரோ கதையில் இது தேவையில்லை என்றே படுகிறது. அதே போல நூற்றுக்கணக்கான வருடங்களாக வயதே ஆகாமல் யுவதியாக பவனி வரும் யக்ஷி சந்திரா, ஒரு வவ்வாலால் கடிக்கப்பட்டு யக்ஷியாக மாறியபோது அவளது வயது பத்து. கதையில் இருக்கும் அந்த ஓட்டையைப் பற்றி, அதனை எழுதி, இயக்கிய டோமினிக் அருண் யோசிக்கவில்லை போலும். பாதகமில்லை, கதையில் அடுத்தடுத்த பகுதிகளுக்காக அவிழ்க்கப்படாத முடிச்சுகள் ஏராளம் இருக்கின்றன, மற்ற பகுதிகளில் இந்த கேள்விக்கும் விடை அளிப்பார் என்று நினைக்கிறேன்.
மொத்தத்தில், மனித இரத்தம் குடிக்கும் இந்த கள்ளியங்காட்டு யக்ஷி சந்திராவை ஒருமுறை அல்ல, பலமுறை பார்க்கலாம், ஏனெனில் ‘லோகா’ ஒரு டிரெண்ட் செட்டர்! இந்திய பாணி அவென்ஜர்சுக்கான ஓர் அடிக்கல். இந்திய குழந்தைகளுக்கு கற்பனையில் சஞ்சரிக்க ஓர் புதிய உலகத்தை படைத்திருக்கிறது லோகா!