விமர்சனம்: மாரீசன் - திரில்லை தேடணும்!
ரேட்டிங்(3 / 5)
இளையராஜா அவர்கள் தனது பாடலை இளம் இசையமைப்பாளர்கள் பயன்படுத்தி கொள்வதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வருகிறார். ஆனால் இளம் இசையமைப்பாளர்கள் இந்த வழக்கை கண்டு பயப்படாமல் ராஜா சாரின் பாடலை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த முறை இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவே தனது அப்பா இசையில் வெளியாகி உள்ள பாடல் ஒன்றை தனது படத்தில் பயன்படுத்தி உள்ளார்.
சுதீஷ் சங்கர் இயக்கத்தில், கிருஷ்ணமூர்த்தி திரைக்கதையில் வடிவேலு, பகத் பாசில் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மாரீசன். இந்த படத்தில் யுவன், ராஜாவின் இசையில் பல ஆண்டுகளுக்கு முன்னால் வெளியாகி பிரபலமான 'நேத்து ஒருத்தரை ஒருத்தர் பார்த்தோம்' என்ற பாடலை எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே 'காபி - பேஸ்ட்' செய்துள்ளார்.
இந்த படத்தில் யுவன் இசையமைத்த மற்ற பாடலகளை விட இந்த பாடல் தான் நன்றாக உள்ளது. இளையராஜா அவர்கள் வழக்கம் போல் தனது பாடலை பயன்படுத்தியதற்காக வழக்கு தொடுக்க போகிறாரா? அல்லது, டைட்டிலில் 'நன்றி- இளையராஜா' என்று சொன்னதால் ஓகே சொல்ல போகிறாரா?... இனி மேல் தான் தெரியும்.
மாரீசன் என்ன கதை? இங்கு பார்ப்போம்.
திருட்டு வேலைகளில் ஈடுபடுபவர் பகத் பாசில். நாகர்கோவிலில் ஒரு வீட்டில் திருட போகிறார். அங்கே வடிவேலு இரும்பு சங்கிலியால் கை கால்கள் கட்டப்பட்டு இருப்பதை பார்க்கிறார். சங்கிலியை கழட்டி வெளியில் அழைத்து சென்றால் பணம் தருவதாக சொல்கிறார் வடிவேலு. பாசிலும் சங்கிலியை கழட்டி வடிவேலுவை வெளியில் அழைத்து செல்கிறார். சிறிது ஞாபக மறதி உள்ள வடிவேலுவிடம் உள்ள அதிக பணத்தை திருட திட்டமிடுகிறார் பாசில். தனது திருட்டு பைக்கில் வடிவேலு செல்ல விரும்பும் திருவண்ணாமலைக்கு அழைத்து செல்கிறார். பயணம் முடிவில் வடிவேலு ஒரு கிரிமினல். ஞாபக மறதி உள்ளவர் அல்ல என்று பாசிலுக்கு தெரிய வருகிறது.
ஒரு பயணத்தின் வழியே அன்பின் பரிமாற்றம், திரில்லர் என்ற இரண்டு அனுபவங்களை தர முயன்றுள்ளார் டைரக்டர். அன்பின் பரிமாற்றம் மட்டுமே ஓரளவு மனதில் நிற்கிறது. திரில்லர் சிறிது கூட ஒர்க் அவுட் ஆகவில்லை. பல மாவட்டங்களுக்கு பைக்கில் செல்கிறார்கள். வடிவேலு பொது இடத்தில் கொலை செய்கிறார். கொலையை விசாரிக்கும் போலீஸ்க்கு சிசிடிவி கேமராவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வரவே இல்லை. விசாரணை நடத்தும் அதிகாரியாக கோவை சரளா வருகிறார், ஏதோ வசனம் பேசுகிறார், சென்று விடுகிறார். இன்று நடக்கும் பல கிரிமினல் குற்றங்களில் சிசிடிவி கேமரா ஒரு முக்கிய தடயமாக இருக்கிறது. இதை பற்றி எந்த காட்சியும் டைரக்டர் வைக்காதது ஒரு மைனஸ் தான்.
மலையாளத்தில் இருந்து ஹீரோவை (பகத்) அழைத்து வந்து நடிக்க வைத்த டைரக்டர் மலையாளத்தில் வெளிவரும் ஒரிரு திரில்லர் படங்களை பார்த்திருந்தால் ஒருவேளை நல்ல திரில்லர் அனுபவம் கொண்ட படத்தை தந்திருக்கலாம். பகத் - வடிவேலு இருவரிடையே நடக்கும் உரையாடல், பைக் பயணத்தின் போது ஒருவர் மேல் ஒருவருக்கு மெதுவாக படரும் பரஸ்பர நம்பிக்கை போன்ற விஷயங்களை ரசிக்க முடிகிறது.
மனைவியை இழந்து அழும் காட்சியிலும், சற்று ஞாபக மறதி காட்சியிலும் வடிவேலு தான் நகைச்சுவையில் மட்டுமல்ல, குணசித்திர நடிப்பிலும் 'மாமன்னன்' என்று நிரூபித்து உள்ளார். பர பர என்று அலைபாயும் கண்களில், சுறு சுறுப்பான உடல் மொழியில் மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார் பகத்பாசில். திரைக்கதையில் உள்ள பல குறைகளை ஓரளவு மறக்க செய்வது இந்த இருவரின் நடிப்புதான். சஸ்பென்ஸ் திரில்லர்க்கான காட்சியை சரியாக அமைத்திருந்தால் வடிவேலு - பகத் கூட்டணியில் மற்றொரு மாமன்னனாக வந்திருப்பான் மாரீசன்.